புதுடில்லி : ''கொரோனா வைரசுடன், அண்டை நாடு துாண்டி விடும் பயங்கரவாத வைரசையும் அழிக்க வேண்டும்,'' என, துணை ஜனாதிபதி, வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, அவர், 'பேஸ்புக்' சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாடு விடுதலை பெற்றது முதல், முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறுபான்மையினரின் நலன் காத்து, உண்மையான மதச்சார்பற்ற நாடாக, இந்தியா திகழ்கிறது.ஆனால் அண்டை நாடு, நம் எல்லைக்குள் பயங்கரவாதிகளை அனுப்புகிறது. அத்துடன் சமூக வலைதளங்கள் மூலம், குறிப்பிட்ட சமூக மக்களுக்கு எதிராக, பொய் பிரசாரம் செய்கிறது.

இங்குள்ள சிறு கூட்டமும், பொய் பிரசாரம் மூலம், இந்தியா குறித்த தவறான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது. இத்தகைய முயற்சிகளை, கடுமையாக கண்டிக்க வேண்டும். கொரோனாவால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிலர், குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கின்றனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றனர். அதை ஏற்க முடியாது.சமூகங்களுக்கு இடையே வெறுப்புணர்வை துாண்டும் பேச்சு, பொய் பிரசாரம், தவறான தகவல் ஆகியவற்றை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. கொரோனா வைரஸ் போல, அண்டை நாட்டின் பயங்கரவாத செயல்களையும் அழிக்க வேண்டும். பயங்கரவாத எதிர்ப்பில், உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.