புதுடில்லி: ஊரடங்கின் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் சிக்கித் தவித்த, புலம்பெயர் தொழிலாளர்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர், 115 ரயில்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஊரடங்கின் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில், வேலையிழந்து தவித்த புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் ஊர்களுக்கு செல்ல, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.சிறப்பு ரயில்கள்இதையடுத்து, மே, 1ம் தேதி முதல், ரயில்வே சார்பில் இயக்கப்பட்ட, 115 சிறப்பு ரயில்கள் மூலம், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், அவர்களின் சொந்த ஊர்களை அடைந்துள்ளனர்.இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் நேற்று கூறியதாவது:பல்வேறு மாநிலங்களில் தவித்த, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள், மே, 1 முதல், 115 சிறப்பு ரயில்கள் மூலம், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.இவர்களுக்காக, நேற்று முன்தினம் வரை, 88 ரயில்கள் இயக்கப்பட்டன.
நேற்று ஒரே நாளில், 42 ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்களில், 24 பெட்டிகள் இணைக்கப்பட்டு, ஒரு பெட்டியில், 72 பேர் பயணிக்க வசதி இருந்தும், சமூக விலகல் காரணமாக, 54 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். குஜராத்தில் இருந்து, 35 சிறப்பு ரயில்களும், கேரளாவில் இருந்து, 13 ரயில்களும் இயக்கப்பட்டு உள்ளன.
அனுமதி
பீஹார் மாநிலத்திற்கு, 13 ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், மேலும், 11 ரயில்கள் பயணத்தில் உள்ளன. 10 ரயில்கள் உ.பி., சென்றடைந்த நிலையில், அதன் வழியாக மேலும், 12 ரயில்கள் இயக்கப்பட உள்ளன.மேற்கு வங்க அரசு அனுமதியின் படி, கேரளா மற்றும் ராஜஸ்தானில் இருந்து, தலா ஒரு ரயில் தொழிலாளர்களுடன் பயணத்தில் உள்ளது. ஜார்க்கண்டிற்கு நான்கு ரயில்கள் சென்றுள்ள நிலையில், அதன் வழியாக ஐந்து ரயில்கள் செல்கின்றன. மேலும் இரு ரயில்கள் இயக்கப்படும்.ஏழு ரயில்கள் ஒடிசா சென்ற நிலையில், ஐந்து ரயில்கள் பயணத்தில் உள்ளன. மேலும் ஒன்று இயக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான செலவு குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.எனினும், ஒரு சேவைக்கு, 80 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர். செலவுத் தொகையில், 85 சதவீதத்தை மத்திய அரசும், 15 சதவீதத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ளும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொழிலாளர்கள் எண்ணிக்கை தகவல் இல்லை'நாட்டில், புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் ஏதும், தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இல்லை' என, மத்திய தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மனித உரிமை ஆர்வலர் வெங்கடேஷ் நாயக் கூறியதாவது:புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறித்த, கணக்கீட்டு பணிகளை மேற்கொண்டு, மூன்று நாட்களுக்குள் தகவல் தரும்படி, மண்டல அலுவலகங்களுக்கு, தலைமை தொழிலாளர் ஆணையர், ஏப்., 8ல் உத்தரவிட்டார். ஆனால், இதுவரை அந்த பணிகள் முடிவடையவில்லை.

இதைத் தொடர்ந்து, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்த நிலையில், அது தொடர்பான தகவல்கள், தலைமை தொழிலாளர் ஆணையத்தில் இல்லை என, தொழிலாளர் அமைச்சகம் கூறியுள்ளது. தகவல் உரிமை சட்டத்தில் மனு தாக்கல் செய்தால், அது தொடர்பான விபரங்களை, தலைமை தகவல் அலுவலர் அளிக்க வேண்டும் அல்லது மனுவை உரிய அதிகாரிக்கு மாற்ற வேண்டும். அதுவும் இல்லாவிட்டால், உரிய விதிகளை கூறி, மனுவை நிராகரிக்க வேண்டும். ஆனால், இந்த வழிமுறைகள் எதையும், தலைமை தொழிலாளர் ஆணையர் அலுவலகம் பின்பற்றவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.