வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த, 'பேஸ்புக், கூகுள், ஆப்பிள்' உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள், 'எச் - 1பி' விசா மூலம் பணியமர்த்தும் வெளிநாட்டு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு, உள்நாட்டினரை விட குறைவான ஊதியம் வழங்குவது தெரிய வந்துள்ளது.

இது குறித்து, அமெரிக்காவின் பொருளாதார கொள்கை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த ஆண்டு, அமெரிக்க குடியேற்ற சேவைகள் பிரிவில், வெளிநாட்டினரை பணிக்கு அமர்த்துவதற்கான, எச் - 1பி விசா கோரி, 53 ஆயிரம் நிறுவனங்கள் விண்ணப்பித்தன; அவற்றின், 3.89 லட்சம் விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டன. அதில், அமேசான், கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட, 30 முன்னணி நிறுவனங்கள், நான்கில் ஒரு பங்கு பணியாளர்களை நியமித்துள்ளன.
அதிகப்படியான பணியாளர்கள், குறைந்த ஊதிய நிர்ணயம் உள்ள, 'நிலை - 1' அல்லது 'நிலை - 2' பிரிவில் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பிரிவுகளில், சாதாரண திறனும், சிறிதளவு அனுபவமும் உள்ளோர் பணியமர்த்தப்படுகின்றனர்.அமெரிக்க தொழிலாளர் நலத் துறை, எச் - 1பி விசாவுக்கு, தகுதியான பணிகளை வரையறுத்து அதற்கேற்ப ஊதியம் நிர்ணயித்துள்ளது. அதில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகளுக்கு, உள்நாட்டு தொழிலாளர்கள் ஈட்டும் ஊதியத்தை விட, மிகக் குறைவான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இது, எச் - 1பி திட்ட விதிமுறைப்படி நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், அதை மாற்றும் அதிகாரம், அமெரிக்க தொழிலாளர் நலத் துறை அமைச்சகத்திற்கு உள்ளது. இருந்தும், அமைச்சகம் அதை கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

இதன் காரணமாக, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், எச் - 1பி விசா மூலம், வெளிநாட்டு பணியாளர்களை, குறைந்த ஊதியத்தில், முதல் மற்றும் இரண்டாம் நிலை பணிகளுக்கு நியமிக்கின்றன.எச் - 1பி பணியாளர்களின் ஊதிய விதிமுறைகளை சீரமைப்பது தொடர்பாக, பொது வெளியில் ஏராளமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், அமெரிக்க அரசு தலையிட்டு தீர்வு கண்டால், எச் - 1பி விசாவில் பணியாற்றும், ஐந்து லட்சத்திற்கும் அதிகமானோரில், பெரும்பாலானோர் பயன் பெறுவர். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஊபர்' அடாவடிவாடகை
வாகன சேவையில் ஈடுபட்டுள்ள, 'ஊபர்' நிறுவனம், 2019ல், எச் - 1பி விசாவில், குறைந்த ஊதியத்தில், 5,708 பேரை பணிக்கு அமர்த்த அனுமதி பெற்று, 1,160 பேருக்கு வேலை வழங்கியது. அதில், 125 சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உட்பட, 400 பேருக்கு ஊதியமில்லா விடுப்பு அளித்துள்ளது. இந்நிறுவனம், இதே போல தொடர்ந்து செய்து வருவதாக, அமெரிக்க பொருளாதார கொள்கை மையம் குற்றஞ்சாட்டியுள்ளது.