வாஷிங்டன்: அமெரிக்காவில் செண்டர் பார் டிசீஸ் கன்ட்ரோ அண்ட் பிரிவென்ஷன் (சிடிசி) அமைப்பு உலகிலேயே மிகப் பிரசித்தி பெற்ற மருத்துவ அமைப்பாகும். இதன் முன்னாள் தலைவர் டாக்டர் டொம் ப்ரைடன், சமீபத்திய கொரோனா தாக்கதை அடுத்து மருத்துவர்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர் பத்திகையாளர்களைச் சந்தித்த அவர் கொரோனா குறித்த சில முக்கிய உண்மைகளை தெரிவித்தார்.
'என்னுடைய 30 வருட மருத்துவப் பணியில் இதுபோன்ற ஓர் சூழ்நிலையை சந்தித்ததே இல்லை' என்ற ப்ரைடன், தற்போது ஓய்வுக்குப் பின்னர் ரிசால்வ் டு சேவ் லைவ்ஸ் என்ற அமைப்பு தலைமை அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.
அவர் கூறியுள்ளதாவது: நியூயார்க் நகரில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்து இருக்கும் சூழலில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் இந்த இழப்பில் இருந்து மீண்டு வர பல வருடங்கள் கூட ஆகலாம்.தற்போது உள்ள கொரோனா பாதிப்பு என்பது வெறும் துவக்கம்தான். இன்னும் இரண்டு ஆண்டுகள்வரை இதன் தாக்கம் உலகில் இருந்து நீங்காது. ஜான் பேரி, மார்க் லிப்செடிக் உள்ளிட்ட ஆய்வாளர்களும் இதனை ஊர்ஜிதப்படுத்தி உள்ளனர்.

கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகள் மூலமாக சேகரிக்கப்படும் தகவல்கள், ஆய்வுகள் மட்டுமே கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்புக்கு உதவும். கொரோனா பாதிக்கப்பட்டவர்களது உடலை ஆராய்வதன் மூலமாக அதன் தன்மையை நன்றாகத் தெரிந்துகொண்டால் அதற்கேற்ப சிகிச்சை வழங்கலாம். சமூக விலகல் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான சிறந்த ஆயுதம். இதனை அனைவரும் இன்னும் ஓர் ஆண்டுக்கு கடைபிடிக்கவேண்டியது அவசியம். இதனை பின்பற்றாமல் இருந்தால் நமக்கு ஆபத்து. தற்போதைய சூழலில் பொருளாதார சரிவு குறித்து உலக நாடுகள் கவலை கொள்ளக்கூடாது. அதனைவிட மக்களின் உயிர்தான் முக்கியம். கொரோனா ஒழிப்புக்காக பொருளாதார சரிவை உலக நாடுகள் தாங்கித்தான் ஆக வேண்டும்.

ப்ரண்ட் லைன் வொர்கர்ஸ் எனப்படும் முதல்நிலை கொரோனா தடுப்புப் பணியாளர்களான மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் ஆகியோருக்கு உலக நாடுகள் அதிக பாதுகாப்பு வழங்க வேண்டும். அதில் அலட்சியம் கூடாது. இதுவரை உலகெங்கும் 9,200 மருத்துவப் பணியாளர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இவர்களை காப்பது அரசின் கடமை. 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிகர்களை காக்க வேண்டும். நீண்டநாள் நோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களைக் காக்க உலக நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசு நிறுவனங்களுடன் தனியார் நிறுவனங்களும் கூட்டாக செயலாற்ற வேண்டும். தற்போதைய சூழலில் அரசு நிறுவங்களின் நிதி மட்டுமே ஒரு நாட்டுக்கு போதாது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிற நோய்களுக்கான சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல பலர் தயங்குகின்றனர். இது தவறு. கொரோனாவால் ஏற்படும் மரணங்களை அடுத்து மேலும் பல மரணங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. கொரோனா தாக்கம் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என நினைப்பது தவறு. இது சில ஆண்டுகள் கழித்து மீண்டும் ஏற்பட்டு பூதாகரமாக வாய்ப்புள்ளது. ஆக மருத்துவத்துறை கொரோனாவை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு எதிர்க்கத் தயாராக இருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.