புதுடில்லி: ''கொடிய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் காக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
புனிதமான சிந்தனை:
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, 'ஆன்லைன்' வாயிலாக, நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: காலங்கள் மாறலாம், வாழ்க்கை முறை மாறலாம், சமூகம் பல மாற்றங்களை சந்திக்கலாம், ஆனால், புத்தரின் போதனைகள், நம் அன்றாட வாழ்க்கையின் அங்கமாக எப்போதும் உள்ளது. புத்தர் என்பது வெறும் பெயர் மட்டுமல்ல. அது, நம் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும் ஒரு புனிதமான சிந்தனை.
'கடினமான காலகட்டங்களை, தொடர் போராட்டம் மூலம் வெல்ல வேண்டும்' என, புத்தர் சொல்லித் தந்த பாடத்தை, இந்த நேரத்தில் நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.கோரிக்கைநம்மை பொறுத்தவரை, நெருக்கடியான காலகட்டத்தை, மற்றவர்களுக்கு நாம் உதவக் கிடைத்த வாய்ப்பாக பார்க்கிறோம். எனவே தான், பல நாடுகளும் நம்மிடம் உதவி கோருகின்றன; நாமும், மறுக்காமல் அதை நிறைவேற்றி வருகிறோம்.
இந்த கொடூர வைரஸ் தாக்குதலில் இருந்து, ஒவ்வொரு இந்தியக் குடிமகனையும் பாதுகாப்பதில், மத்திய அரசு உறுதி கொண்டுள்ளது. அதே நேரம், வெளிநாடுகளில் இருந்து உதவி கேட்டு வரும் கோரிக்கைகளையும், தவறாமல் நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.