கொஞ்சி பேசி கோலமிடும் கவிதை கண்கள், தென்றல் மோதி அலைபாயும் கருங்கூந்தல், ஆயிரம் மின்னல் பூக்களால் நிறைந்த அழகுச் சோலை, பவுர்ணமி நிலவை பக்குவமாய் வெட்டியதே பாவையவள் புருவம், நான்முக பிரம்மனே நயம்பட உருவாக்கிய அதிசயத்தின் அதிசயமான இவள் யார்... தெளிவான செய்தி வாசிப்பாளர், தேர்ந்த நடிகை என மண்ணில் உலவும் விண்ணின் நிலவு அபிராமி, தினமலர் வாசகர்களுக்காக மனம் திறந்த போது...
செய்தி வாசிப்பாளரானது எப்படி
'டிவி' செய்தி வாசிப்பாளரை பார்க்கும் போது நாமும் அதுபோல செய்தி வாசிக்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. தோழி ஒருவர் மூலம் அந்த ஆசை நிறைவேறியது. அதற்காக, திருச்சியில் இருந்து சென்னைக்கு பயணம் துவங்கியது. ஆரம்பத்தில் சினிமா செய்திகள் மட்டுமே வாசித்தேன். இப்போ தலைப்பு செய்தி முதல் எல்லாமே நாமதான்.
அப்புறம் ஏன் நடிப்பு
செய்தி வாசிப்பாளராக கொஞ்சம் நேரம்தான் வரலாம். நடிக்க வந்தால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கலாமே. அதனால் கண்மணியே, பிரியமானவளே, சிவா மனசுல சக்தி சீரியல் மூலம் சின்னத்திரையில் எனது கால் தடத்தை பதிவு செய்தேன். பெரிய திரையில் ஜெயம் ரவியின் 'பூமி' படத்தில் நடிச்சிருக்கேன்.
எது சுலபமான வேலை
ரெண்டுமே பிடிச்ச வேலைதான். பிடிச்ச வேலை செய்யும் போது கஷ்டமெல்லாம் துாசி மாதிரி. மாதத்தில் 15 நாள் செய்தி வாசிப்பாளர். மீதி 15 நாள் 'டிவி', சினிமாவில் நடிப்பு. இப்படியே 'பிஸி'யா போயிட்டு இருக்கு என்னோட லைப்.
அழகாய் ஜொலிப்பது எப்படி
பெரிய சிதம்பர ரகசியமெல்லாம் ஒண்ணுமில்லே. எனக்கு மேக்கப் போடுறதே பிடிக்காது. 'டிவி'க்காக மேக்கப் போடும் போது எப்படா மேக்கப்பை கலைப்போம்னு இருக்கும். எதைப் பற்றியும் கவலையின்றி இருந்தாலே சந்தோஷத்தில் முகம் ஜொலிக்கும்.
பெண்களுக்கு டிப்ஸ்
இப்போது காலம் மாறிடுச்சு... ஆண்களுக்கு இணையா பெண்களும் சாதிக்கலாம். எந்த துறையாக இருந்தாலும் சரி முயற்சி இருந்தால் வெற்றி நம் பக்கம். தோல்வி வந்தாலும் நம்பிக்கையோட முன்னேறி போயிட்டே இருக்கணும். ஒரு நாள் நம்மளோட கனவு நிறைவேறும்.
யாரோடு நடிக்கணும்
அஜீத்தோடும், கேரள பைங்கிளி நஸ்ரியாவுடன் ஒரு படத்திலயாவது நடிக்கணும். என்னோட ரோல் மாடலே அவங்கதான். இவங்கள மாதிரியே நல்ல படங்களில் நடிக்க நல்ல கதையை தேடிட்டு இருக்கேன்.
என்னென்ன திறமை வெச்சுருக்கீங்க
சூப்பரா டான்ஸ் ஆடுவேன். படிக்கும்போது அதுக்காக நிறைய பரிசு வாங்கியிருக்கேன். பாட்டு போட்டுட்டா சும்மா பட்டய கிளப்புவோம்ல. அப்புறம் நான் ரொம்ப வாயாடி. தலைப்பே இல்லாமல் 2 மணி நேரம் கூட பேசுவேன். வீட்ல எப்படா நான் வாய மூடுவேனு பார்த்துட்டே இருப்பாங்க.
ஊரடங்கும், ஒங்க அனுபவமும்
அய்யோ.. அதை ஏன் கேட்குறீங்க. அந்த 'கொரோனா' மட்டும் கையில கிடைச்சது கொலை பண்ணிடுவேன். வாழ்க்கையில இந்த மாதிரி ஒரு சூழ்நிலையை மீண்டும் சந்திக்கவே கூடாது. ரொம்ப பிஸியான ஆளு நான். வீட்ல வெட்டியா இருக்கேன். இருந்தாலும் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவதில் ரொம்ப சந்தோஷம்.
இவரை வாழ்த்த abinavya72155@gmail.com
சிவன்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE