டீக்கடைகளை திறக்க அனுமதி: மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு| Coronavirus: Tamil Nadu relaxes lockdown measures | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டீக்கடைகளை திறக்க அனுமதி: மேலும் சில தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு

Updated : மே 09, 2020 | Added : மே 09, 2020 | கருத்துகள் (10)
Share
டீக்கடை, தமிழகஅரசு, அனுமதி, Tamil Nadu, TN districts, TN news, Coronavirus, corona, covid-19, corona outbreak, corona updates, corona cases, corona news, corona in TN, India, lockdown, lockdown relaxation, curfew, TN govt, AIADMK, EPS, palanisamy

சென்னை: தமிழகத்தில் டீக்கடைகளை திறக்க அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு, பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் சில சலுகைகளை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கொரோனாவை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த மே 2ம் தேதி அன்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) கீழ்காணும் பணிகள் 11.5.2020 திங்கள் முதல் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

* அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் பெருநகர சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை 10:30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

* அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பிற தனிக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.


latest tamil news* சென்னை மாநகராட்சி உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும்( நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து) டீக்கடைகள் பார்சல் சேவைக்கு மட்டும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இந்த கடைகளில் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மேலும், தினமும் 5 முறை கிருமிநாசினி தெளித்து, கடையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து கொள்ள வேண்டும். கடைகளில் வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ, ஏதும் உட்கொள்ள அனுமதியில்லை. இதை முறையாக கடைபிடிக்காத டீக்கடைகள் உடனடியாக மூடப்படும்.

* பெட்ரோல் பம்புகள், சென்னை போலீஸ் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

* பெட்ரோல் பம்புகள் சென்னை போலீஸ் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பம்புகள் 24 மணி நேரமும் செயல்படும்.

* சென்னை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10:30 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். சென்னை போலீஸ் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளை தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படும்.

அரசால் அறிவுறுத்தப்பட்ட தனிநபர் இடைவெளியை பின்பற்றுவதையும் போதுமான கிருமி நாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதையும், கண்காணிக்குமாறு எஸ்.பி.,க்கள், கலெக்டர்கள், கமிஷனர்கள் மற்றும் போலீசார் அறிவுறுத்தப்படுகிறார்கள். அரசால் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட அனைத்து தளர்வுகளும், தடைகளும் மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து முழுமையாக கடைபிடிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X