காங்கிரஸ் கட்சி, 115 ஆண்டுகளுக்கு முன், பிரிட்டீஷாரிடம் இருந்து, நாடு சுதந்திரம் பெறுவதற்காக, இரண்டு வெள்ளைக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பாரம்பரியம் கொண்ட அக்கட்சிக்கு, அதன் இப்போதைய தலைவரான, இத்தாலியை பூர்வீகமாகக் கொண்ட சோனியாவால் தான், அழிவு வரும் என்றால், அது, அந்த கட்சியின் தலையெழுத்து தான். அழிந்து கொண்டு இருக்கும் காங்கிரசை காப்பாற்ற, இப்போது யாருமே இல்லை. தன் கட்சியை கூட காப்பாற்ற முடியாத இவர்கள் தான், தேசத்தை காப்போம் என, முழங்குகின்றனர்; ஒரு மதத்தை வேண்டுமென்றே, அரசுக்கு எதிராக செயல்பட துாண்டி விடுகின்றனர்.
பிரதமராக, பா.ஜ.,வைச் சேர்ந்த மோடி, பொறுப்பேற்ற நாள் முதல், காங்கிரஸ்காரர்களின் துவேஷமும், வெறியும் அதிகரித்து விட்டது. மோடி நின்றால் குற்றம்; எழுந்தால் குற்றம்; நடந்தால் குற்றம் என, எதைச் செய்தாலும், காங்கிரசார் குற்றம் கண்டு வருகின்றனர்.
அரசியல் சூத்திரம்:
ஒரு தலைவரை திட்டிக் கொண்டே இருந்தால், அவர் வளர்ந்து விடுவார். இது, அரசியல் சூத்திரம். இதைத் தெரியாமல் கருணாநிதி, ஜெயலலிதாவையும், ஜெயலலிதா, கருணாநிதியையும் பரஸ்பரம் திட்டிக் கொண்டே இருந்தனர்; இருவரும் வளர்ந்து விட்டனர். என் பெரியப்பா, அந்த காலத்தில் டாக்டராக இருந்தவர். அரசு பதவியை உதறி, தேச விடுதலையில் பங்கேற்றார். தன் குடும்பத்தினர் அனைவரையும், காங்கிரஸ் கட்சியில் சேர்த்தார். நானும், 12 வயதில் காங்கிரசில் சேர்ந்தேன். அப்போது, உறுப்பினர் கட்டணம், நாலணா; இப்போதைய கணக்கில் சொல்ல வேண்டுமானால், 25 பைசா.காங்கிரஸ் உறுப்பினரானோருக்கு, ஒரு ரசீது கொடுப்பர். அதன் பின்புறத்தில், காங்கிரஸ் கொள்கைகள் அச்சிடப்பட்டிருந்தன.
அவை... தேசத்தை காக்க வேண்டும்; மது அருந்தக் கூடாது; புலால் எனப்படும் இறைச்சியை சாப்பிடக் கூடாது; தேச பக்தியுடன் தெய்வ பக்தியும் அவசியம்... இவ்வாறு பல கொள்கைகள் அச்சிடப்பட்டு இருக்கும். இன்றைய காங்கிரஸ் கொள்கையுடன், அவற்றை ஒப்பிட்டுப் பார்த்தாலே, இப்போதைய காங்கிரசின் நிலை தெரிந்து விடும். கடந்த, 1957 லோக்சபா தேர்தல் வரை, 'காங்கிரஸ் கட்சியிலிருந்து, ஒரு கழுதையை நிறுத்தினால் கூட, வெற்றி பெற்றுவிடும்' என்பர். அந்த அளவுக்கு, அந்த கட்சியில் உண்மை, நேர்மை, நியாயம், நாட்டின் நலன் இருந்தது.
ஆனால், இப்போது? காந்தி, நேரு, சர்தார் வல்லபபாய் படேல், அபுல்கலாம் ஆசாத், ராஜாஜி போன்றோர் வளர்த்த கட்சியில் இப்போது, சோனியா, ராகுல், பிரியங்கா, சிதம்பரம், அவர் மகன் கார்த்தி, மணிசங்கர் அய்யர், கபில் சிபல், குஷ்பு, நக்மா போன்றவர்கள் தான் உள்ளனர். இவர்களை நம்பித் தான், அக்கட்சி இப்போது உள்ளது.
அது மட்டுமா, எத்தனை ஊழல்கள்... சமீபகாலத்திய உதாரணங்களை மட்டுமே எடுத்துக் கொண்டால், போபர்ஸ் பீரங்கி, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டில் பல ஆயிரம் கோடி ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், நிலக்கரி ஊழல் என, அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஊழல்வாதிகளும், குற்றப் பின்னணி உள்ளவர்களும் தான், இப்போது அந்த கட்சியில், முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்; கட்சி, அவர்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இவர்களின் உண்மை முகத்தை அறிந்ததால் தான், 2014ல் மக்கள், காங்கிரசை தோற்கடித்து, வீட்டுக்கு அனுப்பினர். காங்கிரசில் இப்போது இருக்கும் பெரும்பாலானோர், நேரு குடும்பத்து அடிமைகள். அந்த குடும்பத்தை விட்டால், காங்கிரசுக்கு தலைமை ஏற்கும் தகுதி, யாருக்குமே கிடையாது என, நினைத்துக் கொண்டிருக்கும் கூட்டம்.
மனிதருள் மாணிக்கம்:
ஐந்து பெண்டாட்டிகாரரான மோதிலால் நேரு, காங்கிரஸ் கட்சிக்கு, மூன்று முறை தலைவராக இருந்தார். அவர் மகன் ஜவஹர்லால் நேரு, அவர் மகள் இந்திரா, அவர் மகன் ராஜிவ், அவர் மனைவி சோனியா, அவர் மகன் ராகுல் என அனைவருமே, காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை வகித்துள்ளனர். ராகுல் சகோதரி பிரியங்காவும், அவர் கணவர் ராபர்ட் வாத்ராவும் தான், இன்னும் தலைவராக வில்லை. அப்போது, மோதிலால் நேரு சேர்த்து வைத்த சொத்துக்களும், அதிகாரமும், மஹாத்மா காந்தியையே பயப்பட வைத்தது. அந்த பயம் தான், 1947ல், நேருவை பிரதமராக்கியது.
நேருவை பலர், மனிதருள் மாணிக்கம், ஆசியாவின் ஜோதி என்றெல்லாம் புகழ்வர். ஆனால், அவரின் அந்தரங்கம், மிகவும் மோசமானது. அதை, காங்கிரஸ் தொண்டர்கள் பலர் அறியார். நேருவுக்கு பின், பிரதமரான இந்திரா, எதிர்க்கட்சிகளிடம் எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டார் என்பது, உலகம் அறிந்தது. அதனால், காங்கிரஸ் கற்ற பாடத்தை, இப்போதைய தலைமை உணரவில்லை என்பது தான் வேதனை.
இந்திரா, பதவியில் இருந்த போது, அனைவரையும் அடிமை போலத் தான் நடத்தினார். அது, அவரின் தாத்தா மோதிலாலின் குணம். ஆனால், நேரு அப்படியில்லை. அவர் பிறரை, அடிமை போல நடத்தவில்லை. மாறாக, பிறர், அவரின் அடிமைகளாக தாங்களாகவே மாறி விட்டனர். அவர்களில் விதிவிலக்கு, இரண்டு பேர் தான். மொரார்ஜி தேசாய், காமராஜர் என்ற இருவர் மட்டும் தான், நேருவிடம் துணிச்சலாக பேசக் கூடியவர்கள்.
ராஜாஜி, காங்கிரசையும், நேருவையும் கைகழுவி, வெளியே போய் விட்டார். சர்தார் படேல், சுதந்திரம் கிடைத்த இரண்டாண்டுகளில் மறைந்து விடடார். ஆகவே, நேருவின் கையே, ஆட்சியிலும், அரசியலிலும் ஓங்கி இருந்தது. அதை அப்படியே, அவரின் மகள் இந்திரா பின்பற்றினார். 'எமர்ஜென்சி' எனப்படும் அவசர நிலையை, நாட்டில் அமல்படுத்தி, எதிர்க்கட்சி தலைவர்கள் பலரையும், இரண்டாண்டுகள் சிறையில் அடைத்தார். அதன்பின், எதிர்க்கட்சி தலைவர்கள் கை ஓங்கி, ஜனநாயகம் மலர்ந்தது; ரவுடியிசம் ஒழிந்தது; மொரார்ஜி, வாஜ்பாய், மோடி என, பலர் பிரதமர்களாக ஆகினர்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும், காங்கிரசில், நேரு குடும்பத்தின் ஆதிக்கம் இருப்பதால், அதன் குணம் மாறவில்லை. மொரார்ஜி தேசாய், வாஜ்பாய் அரசுகளை சகுனித்தனத்தால் கவிழ்த்தனர். அந்த வேலை, மோடியிடம் எடுபடவில்லை.
காங்கிரசில் இளம் ரத்தம் என்றால், ராகுல் மற்றும் பிரியங்கா மட்டும் தான். மற்றவர்கள் பலர், இளைஞர்களாக இருந்தாலும், தலைமைக்கு அவர்கள் தெரிய மாட்டார்கள். கட்சித் தலைமையா... ராகுலை கூப்பிடு; செயலர் பதவியா... பிரியங்காவை கூப்பிடு என்று தான், இன்னமும் அவர்கள் அணுகுமுறை உள்ளது.
மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இருந்த, பா.ஜ., அரசை, மக்கள் விரட்டவில்லை. காங்கிரஸ் தன் தகிடுதத்த வேலைகளால் விரட்டியது. மஹாராஷ்டிராவில், சரண் சிங் போல மாறி விட்டார், உத்தவ் தாக்கரே. காலமெல்லாம் காங்., எதிர்ப்பில் இருந்த பால் தாக்கரேயின் மகனான அவர், ஆட்சி, அதிகாரத்திற்காக, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் சேர்ந்து விட்டார்.
ராகுலுக்கு மேலாக, ஜோதிராதித்ய சிந்தியா வளர்ந்து விடுவார் எனக் கருதிய, காங்., மேலிடம், அவரை செல்லாக்காசாக மாற்ற நினைத்தது. அவருக்குப் பதில், ஊழல்வாதிகளான கமல்நாத், அசோக் கெலாட் போன்றவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது.
சோனியா விரக்தி:
வெகுண்டெழுந்த ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரசை வீழ்த்தி, ம.பி.,யில் மீண்டும், பா.ஜ., ஆட்சியை நிர்மாணித்துள்ளார். பிரதமராக தான் பதவியேற்க இருந்த நிலையில், ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம் கேட்ட கேள்விகளால், விரக்தி அடைந்த சோனியா, அடுத்தும், இந்த பிரச்னை இருக்கக் கூடாது என்பதற்காக, எங்கிருந்தோ வந்த பிரதிபா பாட்டீலை, ஜனாதிபதி ஆக்கினார். இது, இந்திராவின் குடும்ப புத்தி. அடங்கி, பயந்து, குனிந்து நிற்போரை மட்டுமே அவர், தன்னுடன் வைத்துக் கொண்டார். தைரியமாக நிமிர்ந்து நிற்போரை, அவர் தன்னுடன் சேர்த்துக் கொள்ளவே மாட்டார்.
ஜெயில் சிங் என்றொரு ஜனாதிபதி இருந்தார். அவரை, 'இந்திராவின் அடிமை' என, எதிர்க்கட்சிகள் கூறின. அது பற்றி அறிந்த ஜெயில் சிங், 'அதனால் என்ன, இந்திராவின் வீட்டு வாசலை கூட, நான் பெருக்குவேன்...' என, பெருமிதமாக சொன்னார். இப்படிப்பட்ட வார்த்தைகளைத் தான், ஜோதிராதித்யாவிடம் சோனியா எதிர்பார்த்தார். ராஜ குல வாரிசான ஜோதிராதித்யா, தன் விஸ்வரூபத்தை காட்டி, காங்கிரசை காலி செய்து விட்டார். அவர் வரிசையில், இன்னும் சில இள ரத்தங்கள், காங்கிரசுக்கு சாவு மணி அடிக்க, நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
காங்., தலைமை பொறுப்பில் இருந்த, இப்போதும், 'ஆக்டிங்' தலைவர் போல செயல்படும் ராகுலுக்கு, இன்னும் அரசியல் ஞானம், தெளிவு வரவே இல்லை; சிறுபிள்ளை போலவே பேசுகிறார். எதற்கெடுத்தாலும், மோடி தான் காரணம் என்கிறார். இதற்காக, கோர்ட்டிடம், குட்டு வாங்கினாலும், அவர் கவலைப்படவில்லை.
'ரபேல்' விமானங்கள் கொள்முதலில் ஊழல் நடக்கவில்லை என, கோர்ட் கூறிய பிறகும், மோடி அரசு ஊழல் செய்தது என்றார். பொருளாதார மந்த நிலைக்கும், மோடி தான் காரணம் என்றார். பெட்ரோல் விலை உயர்வா, அதற்கும் மோடியே காரணம் என்கிறார். அவருக்கு கனவிலும், நனவிலும் மோடி தான் வருகிறார்.
அவருடன் இப்போது இருக்கும் கூட்டமும், அவர் போன்றது தான். நம் நாட்டின், கரன்சி நோட்டுகளை அச்சடிக்கும் இயந்திரங்களை, பாகிஸ்தானுக்கு வழங்கியவர் தான், நம் மாநிலத்தைச் சேர்ந்த, திருவாளர் சிதம்பரம். மத்திய நிதியமைச்சராக இருந்த போது, அவர் செய்த செயல் இது. அந்த இயந்திரங்களை பயன்படுத்தி, இந்திய கரன்சி நோட்டுகளை ஏராளமாக அச்சடித்து, கள்ள நோட்டுகளாக பரவ விட்டது, பாக்., அதை அறிந்ததும் தான், பிரதமர் மோடி, பணம் மதிப்பிழப்பு திட்டத்தை அறிமுகம் செய்து, 1,000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தார்.
ஏற்க மாட்டார்கள்:
பழைய, 500 ரூபாய் நோட்டுக்குப் பதில், புதிய, 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டார். இவ்வளவையும் செய்து விட்ட காங்கிரஸ், தேசம் காப்போம் என, ஒரு மதத்தினரை, மத்திய அரசுக்கு எதிராக போராட துாண்டி விட்டது. அதன் கூட்டணி கட்சித் தலைவர்களும், அந்தந்த மாநிலங்களில், காங்., சொல்படி கேட்டு, பிரச்னைகளை பூதகரமாக்கினர். நல்லவேளையாக, கொரோனா என்ற அரக்கனால், அந்த பிரச்னை மட்டுப்பட்டது.
இந்த லட்சணத்தில், அரசியல் லாபம் கருதி, வெளி மாநில தொழிலாளர்கள், அவரவர் சொந்த மாநிலங்களுக்கு செல்லும், ரயில் கட்டண செலவை, காங்., ஏற்கும் என்றார், சோனியா. அது மட்டுமின்றி, கொரோனா அதிகரிக்க, மத்திய அரசின் தான்தோன்றித்தனமான செயல் தான் காரணம் என்றார். அப்படியானால், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மட்டுமின்றி, உலக நாடுகளிலும், கொரோனா பலிக்கு காரணம் என்ன?
எனவே, இனியும் காங்கிரசால் எழுந்து நிற்கவே முடியாது. நேரு குடும்பத்தை தவிர்த்து, வேறு யாரையும் தலைவராக, அந்த கட்சியின் தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். அத்தகைய அவர்களின் மனநிலை, அக்கட்சியை எழுந்து நிற்க விடாமல் செய்து விடும்!

- பா.சி.ராமச்சந்திரன்,
மூத்த பத்திரிகையாளர்
தொடர்புக்கு: இ - மெயில்: bsr_43@yahoo.com