'சர்வதேச அளவில், இந்தியாவில் தான், காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால், கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், காச நோய் பரிசோதனைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், காச நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை, வரும் மாதங்களில் அதிகரிக்கும்' என, சர்வதேச அளவில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில், காச நோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதிலும், இந்தியாவில் தான், காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆண்டுதோறும், இந்தியாவில் மட்டும், 2.20 லட்சம் பேர், காச நோய்க்கு பலியாகின்றனர். கடந்த, 2006 - 2014ம் ஆண்டு வரை, காச நோய் சிகிச்சைக்காக மட்டும், 8,000 கோடி ரூபாய்க்கு மேல், இந்தியா செலவு செய்துள்ளது. காச நோயை கட்டுப்படுத்துவது தான், இந்திய சுகாதாரத் துறைக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
பரிசோதனை குறைவு:
உலகளவில், 2018ம் ஆண்டில் மட்டும், 70 லட்சம் பேர், காச நோயால் பாதிக்கப்பட்டனர். 2017ம் ஆண்டில், 64 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.மாத்திரை, மருந்துகள் மூலம், காச நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்களில், இந்தியாவில், 27 சதவீதம் பேரும்; சீனாவில், 14 சதவீதம் பேரும் உள்ளனர்.
காச நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்காக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில், 'நிக் ஷய்' என்ற இணையதளம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், காச நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதையடுத்து, இந்தியாவில், 2030ம் ஆண்டுக்குள், காச நோயை முற்றிலும் ஒழிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் தான், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மார்ச், 25ம் தேதி முதல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால், பல துறைகள் முடங்கியுள்ளன. அதில், காச நோய் பரிசோதனையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் மூன்று வாரங்களில் மட்டும், காச நோய் பரிசோதனை, 75 சதவீதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.
1.9 லட்சம் பேர்
ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கு முன், ஒரு வாரத்துக்கு சராசரியாக, 45 ஆயிரத்து, 875 நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டனர். ஊரடங்குக்கு பின், அது, 11 ஆயிரமாக குறைந்து விட்டது. இந்நிலையில் காச நோய் பற்றி, உலக சுகாதார நிறுவனத்தின் டாக்டர் பிலிப் கிளோஜியோ வெளியிட்ட ஆய்வறிக்கையில், 'கொரோனா பரவலுக்கு பின், மூன்று மாதத்தில், காச நோயாளிகளை கண்டறிவது, 25 சதவீதத்துக்கும் மேல் குறைந்துள்ளது.
'இந்த ஆண்டு மட்டும், கூடுதலாக, 1.9 லட்சம் பேர், காச நோய்க்கு பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 'இதனால், இந்த ஆண்டு, 16 லட்சம் பேர், காச நோயால் இறக்கலாம் என, அஞ்சுகிறோம். குறிப்பாக, இந்தியாவில் காச நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்' என, கூறியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில், 'ஊரடங்கால், சர்வதேச அளவில், காச நோயால், 63 லட்சம் பேர் பாதிக்கப்படுவர்; 14 லட்சம் பேர் பலியாவர். இதில் பெருமளவு, இந்தியாவில் ஏற்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்திய பின், காச நோயை கட்டுப்படுத்துவது ஒரு பிரச்னையாக இருக்கும் என, ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
நிலைமை சீரடையும்:
காசநோய் பாதிப்பு குறித்து, தேசிய காசநோய் தடுப்பு திட்ட அதிகாரிகள் கூறியதாவது: இந்தியாவில் காசநோய் பாதிப்பை, 2025ம் ஆண்டுக்குள், 90 சதவீதம் குறைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2015ம் ஆண்டில், காசநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 4.8 லட்சமாக இருந்தது. இதை, 2025ல், 48 ஆயிரமாக குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், காசநோய்க்கு தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கையை, 1,315லிருந்து, 131 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கின் ஆரம்பத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், அவசர சிகிச்சைகளை மட்டும் மேற்கொள்ள, மத்திய அரசு உத்தரவிட்டது. இதனால், காச நோய் தடுப்பு பணிகள் பாதிக்கப்பட்டன. இது பற்றி, மத்திய - மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவித்தோம். மருத்துவமனைகளில் காசநோய் சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என, கேட்டுக் கொண்டோம். இதையேற்று, மருத்துவமனைகளில் காசநோய்க்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், நிலைமை நிச்சயம் சீரடையும். காசநோயாளிகளின் எண்ணிக்கை குறையும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
12 காரணங்கள்:
காச நோயாளிகளை கண்டறிவதில் ஏற்பட்ட சரிவுக்கு, 12 காரணங்கள் கூறப்படுகின்றன. அது பற்றிய விபரம்
* தொடர் ஊரடங்கு
* தடையுத்தரவுகள் பிறப்பிப்பு
* சோதனைக்கான வசதிகள் குறைவு
* சோதனை மையங்களுக்கு செல்ல பஸ் வசதியில்லாதது
* வைரஸ் தொற்று பயம்
* தனிநபர் பாதுகாப்பு நடவடிக்கை இல்லாதது
* காச நோய் பரிசோதகர்கள், வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது
* மருந்துகள் வாங்க கட்டுப்பாடு
* மருந்துகளுக்கு பற்றாக்குறை* சரியான சத்துணவு கிடைக்காதது
* உணவு கிடைக்காமல் அவதி
* வெளியில் செல்வதற்கு கட்டுப்பாடு
- நமது சிறப்பு நிருபர் -