கோலாலம்பூர்: 'மலேசியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், அமலில் உள்ள ஊரடங்கு மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டியுள்ளது. இதற்காக, மக்கள் என்னை மன்னிக்க வேண்டும்' என, பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளார்.

மலேசிய பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்துள்ளதாவது:
மலேசியாவில் இன்று (10ம் தேதி) நண்பகல் நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,656 ஆக இருக்கிறது. இன்று ஒரே நாளில், 67 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதுவரை, 108 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீடிக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஆகியவற்றுடன் கலந்தாலோசிக்கப்பட்டது. நிபந்தனைகளுடன் கூடிய பொது ஊரடங்கு கட்டுப்பாட்டுகள் ஜூன் 9ம் தேதி வரை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் 9ம் தேதிக்குள் நோன்புப்பெருநாள் உட்பட சில முக்கியமான தினங்கள் குறுக்கிடுகின்றன. கொரோனா கிருமி அமைதியாக இருக்கும் எதிரி. எனவே, ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி, மாநிலங்களின் எல்லைகளைக் கடந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல யாரும் முயற்சிக்கக் கூடாது. மக்களின் பாதுகாப்பு, உடல்நலன் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டே தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் என்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.