லாரி வாடகை உயர்த்தப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பொருட்கள் விலை, உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஊரடங்கால், தமிழகத்தில் மொத்தமுள்ள, 4.50 லட்சம் லாரிகளில், 4 லட்சம் லாரிகள் லோடு இல்லாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. அத்தியாவசிய பொருட்கள், விவசாய விளை பொருட்கள் பரிமாற்றத்தில், 20 சதவீத லாரிகள் ஈடுபட்டுள்ளன. இந்த லாரிகளும் மாவட்ட, மாநில எல்லைகளில் சோதனை என்ற பெயரில் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுவதால், முழுமையாக லோடு கிடைப்பது இல்லை.
சமீபத்தில் டீசல் விலை உயர்த்தப்பட்டதால், எரிபொருள் செலவில், 30 சதவீதம், கூடுதலாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முழுமையாக லோடு ஏறாததால், 10 டன் கொள்ளளவு உள்ள லாரியில், 6 டன் பொருட்கள் ஏற்றப்படும் நிலையில், 10 டன் கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
சரக்கு லாரிகளில், மார்ச் முதல் வாரத்தில், 10 கிலோ எடைக்கு, துாரத்தின் அடிப்படையில், 70 முதல், 100 ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்பட்டது, தற்போது, 100 முதல், 120 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.சேலத்தில் இருந்து சென்னைக்கு, 10 கிலோ பார்சல் கட்டணம், 90 ரூபாயாக இருந்தது, 110 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இது குறித்து, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு பொருளாளர் தன்ராஜ் கூறியதாவது:தற்போதைய சூழலில், லாரி வாடகையை உயர்த்து வதை தவிர வேறு வழியில்லை. இதன் காரணமாக, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய, மாநில அரசுகள், டீசல் மீதான வரிகளை குறைப்பதோடு, சுங்க கட்டணத்தை, குறைந்த பட்சம், ஆறு மாதங்களுக்கு ரத்து செய்ய வேண்டும்.
லாரிகளுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை, வங்கிகள், நிதி நிறுவனங்களில் பெற்றுள்ள கடனுக்கான வட்டிகளை தள்ளுபடி செய்தால், பழைய கட்டணத்தில் லாரிகளை இயக்க, தயாராகவுள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE