சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

துருப்பிடிக்க விடாதீர்கள்!

Updated : மே 13, 2020 | Added : மே 11, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
துருப்பிடிக்க விடாதீர்கள்!

சாப்பிட நேரமில்லை; துாங்க நேரமில்லை; குடும்பத்துடன் உட்கார்ந்து சாப்பிட முடியவில்லை; வீட்டைச் சுத்தம் செய்ய நேரமில்லை; முக்கியமான பத்திரங்களை, 'பைல்' செய்ய முடியவில்லை; வாட்டர் டேங்க் சுத்தம் செய்ய நேரமில்லை.வீட்டில் கொஞ்சம் இடமிருக்கு, அங்க தோட்டம் போட ஆசை; நேரந்தான் இல்லை. வாழ்க்கையின் தலையாய கடமையாக, படிக்க ஆசைப்பட்ட புத்தகங்கள், 'சிக்ஸ் பேக் பாடி' கொண்டு வர ஆசை; உடற்பயிற்சி செய்ய நேரமில்லை. இப்படி விடுபட்ட, பல விஷயங்கள், எந்திரமான உலகில் தள்ளிப்போயின.ஆனால் இப்போது, சலிக்கச்சலிக்க சாப்பிட நேரம் கிடைத்திருக்கு. உங்க குடும்பத்தாருடன் மட்டுமே, வீட்டிலேயே இருக்க வேண்டும் என, அரசே அவசர சட்டம் போட்டு விட்டது.


பண்ணை பராமரிப்பு


பல ஆண்டுகளாகப் பராமரிப்பு இல்லாமல், நுாலாடையுடன் பாழடைந்த பண்ணையைப் பராமரிக்கலாமே. வீட்டில் பத்திரப்படுத்த வேண்டிய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு புத்தகம், வீட்டுப் பத்திரம், பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள், வங்கிக்கணக்கு பட்டியல் புத்தகம், இவைகளை சரிபார்த்து அடுக்கி வைக்கலாமே.பாசி பிடித்து, பச்சை நாற்றம் அடிக்கும், உங்கள் வீட்டுக் குடிநீர் தொட்டியைச் சுத்தம் செய்யலாமே. உங்களின் நீண்ட நாள் ஆசையான வீட்டுத்தோட்டம், இப்போது சாத்தியமே. விதைகள் கிடைக்காவிட்டால், சாப்பிட்ட பப்பாளியில் இருக்கும், கறுப்பு விதைகளைக் கழுவி, புதைத்து வையுங்கள்.முருங்கை மரக்கிளையை உடைத்து, சிறிய துண்டை புதைத்துப் பாருங்கள். தளதள வென்று வளரும். சாப்பிட்ட மாம்பழத்தின் கொட்டையைப் புதைத்து வைக்கலாம். மார்க்கெட்டில், அரசு தோட்டக்கலை அலுவலகத்தில், கீரை விதை, தக்காளி, வெண்டை, கத்தரிக்காய் விதைகள் கிடைக்கும். போட்டுப்பாருங்கள். பச்சைப் பசேலென வளரும்.

உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும், எப்போது பார்த்தாலும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தால், அதைச் சரிசெய்ய, இது சரியான நேரம். ஆம்... உங்க பாழாய்ப் போன, 'ஈகோ'வைத் துாக்கி எறிங்க. வலுக்கட்டாயமாக வீட்டு வேலைகளைச் செய்யுங்க. துடைப்பத்தால் வீட்டை பெருக்குங்க; பாத்திரத்தைக் கழுவுங்க; பாத்ரூமை சுத்தம் செய்யுங்க!நான் சொன்னதெல்லாம், நினைத்தால் மலைப்பாக இருக்கும். ஒருமுறை முழு ஈடுபாட்டுடன் செய்து பாருங்க. அப்புறம், அதில் ஒரு வித மகிழ்ச்சி ஏற்படும்.குடும்பத்தோடு, 'டிவி' பாருங்க. நல்லவேளை, 'சீரியல்கள்' இல்லை. சீரியல்கள் பார்ப்பதால், உங்க மனைவிக்கு ஏற்பட்ட தேவையற்ற மன பாரங்கள் இப்ப இருக்காது.

இந்த நேரத்தில், 'அமேசான், நெட்பிளிக்ஸ் ஆப்'களில் பணத்தைக் கட்டி இணைப்பு வாங்குங்க. உங்க மனைவிகிட்ட, 'என்ன படம் நல்லாயிருக்கும்' எனக் கேளுங்க. அவங்க சொல்லும் படங்களைப் பாருங்க; சந்தோஷம் வரும்.வாஷிங் மிஷினில் துணிகளை துவைக்க போடச் சொல்லுங்க. அதை நீங்க, காயப் போடுங்க. இப்ப பாருங்க, உங்க மனைவியின் மனமாற்றத்தை. சாப்பாட்டில் மாற்றம் ஏற்படும்; உங்கள் மேல் தனி அன்பு வளரும்.


'சப்ஜெக்ட்'


குழந்தைகள்... ஆம், நீங்க பெற்றெடுத்த பிள்ளை. அது, எல்.கே.ஜி., படித்தாலும், ஏன், திருமணம் ஆகி இருந்தாலும், அது குழந்தைகள் தான். உங்க வீட்டில் குழந்தைகள் இருந்தால், அவர்களுடன் பேசுங்கள்; நிறையப் பேச விடுங்கள். அவர்கள் அதிகப்பிரசங்கித்தனமாகப் பேசுவர். அது, சரியா, தவறா என, நீங்கள் முடிவு செய்து, 'சரி' என பட்டால், 'பலே, உன் கருத்து நல்லாயிருக்கே' என, பாராட்டுங்கள்.ஒரு வேளை, அந்தப் பேச்சு சரியில்லை என்றால், அந்தப் பேச்சுக்கு எவ்வித முக மாற்றத்தையும் காட்டாமல், அமைதியாக இருந்து விடுங்கள். நீங்கள் அவர்களின் அவசியமற்ற பேச்சுக்குப் பதில் தராததைப் பார்த்து, அவர்களே தங்களை மாற்றிக் கொள்வர்.ஒருபோதும் அவர்களை மனம் நோக வைக்காதீர்கள். இரண்டு, மூன்று முறை அவர்களின் மனத்தைப் புண்படுத்தினால், பின் அவர்கள் உங்களிடம் உண்மையாகப் பழக மாட்டார்கள்.

அடுத்து, உங்களைச் செம்மைப்படுத்த, பல வழிகள் உள்ளன. அதில் ஒரு வழி, புத்தகங்கள் படிப்பது. உங்களுக்கு எந்த, 'சப்ஜெக்ட்' பிடிக்கிறதோ, அந்த வகைப் புத்தகங்களைப் படியுங்கள். என்னிடம் புத்தகங்களே இல்லை; புத்தகக்கடைகளும் திறக்கவில்லை எனக்கூறி, உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். இந்த ஊரடங்கு காலத்தில், கண்டிப்பாக தினசரி பேப்பர்களைப் படிக்க வேண்டும்; நாட்டு நடப்பு தெரிய வேண்டும். புகழ்பெற்ற கதைப் புத்தகங்களைப் படியுங்கள். தத்துவ ஞானிகளின் தன்னம்பிக்கை புத்தகங்களைப் படியுங்கள்; தெளிவு பெறுவீர்கள்.

இதுவரை, இருப்பதைச் சொன்னேன்... இனி, இப்படி இருக்கலாம் என்று சொல்லப் போகிறேன். ஓயாமல் போர் செய்யும் அரசனின் போர் தளவாடங்கள் தான் கூராக இருக்கும். காரணம், அவை சண்டையிலேயே சாணை பிடித்துக் கொள்ளும்.


மாற்றம்

செழுமையான கிராமத்தில், விவசாயப் பயன்பாட்டு மண்வெட்டி, கடப்பாரை, ஏர் கலப்பை பளபளவென இருக்கும். அதற்குக் காரணம், அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதால், தானாகவே, 'பாலிஷாகி' விடும். உங்கள் மூளையும், தொடர்ந்து செயல்பட்டால் தான், உங்கள் வாழ்க்கை பளபளக்கும்; இல்லாவிட்டால் பாழாகிப் போகும்.ஊரடங்கு தொடங்கி, முடிந்து போன, 48 நாட்களில் என்ன செய்தீர்கள் என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.உடற்பயிற்சி செய்தீர்களா... உபயோகமான எதையாவது செய்தீர்களா... சரி விடுங்கள். போனது போகட்டும்; இனியாவது கொஞ்சம் யோசியுங்கள். வெட்டி நண்பர்களை, வெட்டிச் செலவை, வீண் பந்தாவை ஒழியுங்கள். உங்கள் மனதை, ராணுவக் கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்.

நீங்களே தளபதி, நீங்களே போர் வாள்.சொந்தத் தொழில் செய்வோர் என்றால், கொரோனா முடிந்த பின் உங்கள் தொழில் சார்ந்த, ஏற்ற இறக்கங்கள் பற்றிய விபரங்களைச் சேகரியுங்கள். அதற்கேற்றாற் போல, தொழிலை வளப்படுத்தப் பாருங்கள். நீங்கள் பணிக்கு போகும் நபர் என்றால், இந்த வேலை தொடருமா என்பதை, சூசகமாக தெளிய முயலுங்கள்.வளைகுடா நாடுகளில், கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் வேலை மறுக்கப்படுவதும், சம்பளம் குறைக்கப்படுவதும் நடைமுறையில் இருக்கிறது.

கொரோனா வைரசால் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. இதுவரை பார்த்த உலகம் வேறு; இனி பார்க்கப் போகும் உலகம் வேறு. இதுவரை எப்படியும் வாழலாம் என்ற நிலைமை இருந்தது. இனி, இப்படி தான் வாழ வேண்டும் என்ற நிலை வரும். அதற்கேற்ப, நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஊரடங்கு முடிய, இன்னும் கொஞ்ச நாட்கள் தான் உள்ளன. இன்றே தொடங்குங்கள்... விடியற்காலை எழுந்து உடற்பயிற்சி செய்யுங்கள். புதிதாக ஏதாவது கற்றுக் கொள்ளுங்கள். இதுவரை வெட்டியாய்ப் பயன்படுத்திய மொபைல் போனை, இனிமேலாவது உபயோகமாக்கப் பாருங்கள்.சில சுய கட்டுப்பாடுகளைக் கொண்டு வாருங்கள். இத்தனை மணிக்கு இதைச் செய்ய வேண்டும் என, முடிவு செய்யுங்கள். காலை டிபன், 8:00 மணி என்றால், சரியாக, 8:00 மணிக்கு சாப்பிடுங்கள். மதிய உணவு, 1:00 மணி என்றால், சரியாக, 1:00 மணிக்கு சாப்பிடக் கற்றுக் கொள்ளுங்கள். எனவே, தற்போது நிலவி வரும் அமைதிப் புரட்சியில், நாம் வெற்றி பெற்றே ஆக வேண்டுமானால், மிக அதிக விழிப்புணர்வு தேவை!

ஜி.அசோகன்
பத்திரிகையாளர்தொடர்புக்கு:இ - மெயில்: geeyepublications@gmail.com
மொபைல் எண்: 9840070711

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram Mayilai - Mayiladuthurai,இந்தியா
12-மே-202012:59:30 IST Report Abuse
Ram Mayilai அமரர் திரு. கல்கி அவர்கள் நாவல்கள் அரசுடமை ஆக்கப்பட்டத்தினால், அவைகள் e books ஆக இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. படித்து பாருங்கள். நீங்கள் எவ்வளவு இழந்து உள்ளீர்கள் என தெரியும். பொன்னியின் செல்வனை படித்தால் நீங்களே வந்தியத்தேவனாகவும், சிவகாமியின் சபதத்தை படிக்கும்போது உங்களையே பரஞ்சோதியாகவும் உணர்வீர்கள். காலத்தால் அழியாத, அற்புத கற்பனை ஊற்றுக்கள்.
Rate this:
Vandavasi Raja De Singu - Vandavasi,இந்தியா
12-மே-202015:28:58 IST Report Abuse
Vandavasi Raja De Singuஅருமையாகக் கூறினீர்கள் பழம்பெரும் படைப்பாளர்களின் புத்தகங்கள் தமிழ் நூலக இணையத்தில் பிடிஎப் கோப்புகளாக உள்ளன தரவு இறக்கி வாசிக்கலாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X