நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகள் பிரிட்டன் அரசு அறிவிப்பு| Dinamalar

நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகள் பிரிட்டன் அரசு அறிவிப்பு

Added : மே 11, 2020
Share

லண்டன் : பிரிட்டன் மக்கள், அதிக நேரத்தை வெளியில் செலவிடவும், கடுமையான ஊரடங்கு விதிகளை தளர்த்தி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், நிபந்தனைகளுடன் கூடிய திட்டத்தை, அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 269 பேர், கொரோனா தொற்றுக்கு, நேற்று முன் தினம் பலியாயினர். இதுவரை, 31 ஆயிரத்து, 855 பேர், அங்கு பலியாகி உள்ளனர்.நாடு முழுதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கில், நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகளை, அந்நாட்டு பிரதமர், போரிஸ் ஜான்சன் நேற்று முன் தினம் அறிவித்தார்.அதன் விபரம்:கொரோனா பாதிப்பை, ஐந்து நிலைகளாக பிரித்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தோம். ஐந்தாம் நிலை என்பது, மிக, மிக ஆபத்தான நிலை, முதல் நிலை என்பது, தொற்று முழுவதுமாக ஒழிக்கப்பட்ட நிலை. இதில், பிரிட்டன் நான்காம் நிலையில் இருந்து, தற்போது, மூன்றாவது நிலைக்கு முன்னேறி வருகிறது.

இதற்காக கடுமையான உழைப்பை தந்த அனைவருக்கும் நன்றி. வீட்டில் இருந்தபடியே பணிகளை செய்ய கூடியவர்கள், இன்னும் சில தினங்களுக்கு, அவ்வாறே பணியை தொடருமாறு பரிந்துரைக்கிறோம். கட்டட வேலை உள்ளிட்ட பணியில் இருப்பவர்கள், வெளியில் வந்து பணிகளை துவங்கலாம். முடிந்தவரை, அனைவரும் பொது போக்குவரத்து பயன்பாட்டை தவிர்த்து, சைக்கிள் அல்லது நடந்து செல்லும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு, புள்ளி விபரங்கள் மற்றும் பொது சுகாதாரத்தின் அடிப்படையிலேயே, அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும். பொருளாதார சீரமைப்பு என்பது, அதற்கு அடுத்த கட்டம் தான். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X