சித்ராவும், மித்ராவும் உடல்நிலை சரியின்றி இருக்கும் உறவினரை பார்க்க, மருத்துவமனைக்கு சென்றனர். டாக்டர்ரவுண்ட்ஸில் இருந்ததால், இருவரும் சமூக இடைவெளியுடன் உட்கார்ந்தனர்.கூட்டம் எதுவுமின்றிமருத்துவமனை வெறிச்சோடி இருந்தது. அதைப்பார்த்த மித்ரா,
''ஏக்கா... இங்க மட்டும்தானா, ஜி.எச்.,ம் இப்படித்தான் இருக்குதா?'' கேள்வி கேட்டாள்.
''ஆமாண்டி.. கொரோனா பாதித்தவர்கள் இருப்பாங்கன்னு அதிகமா யாரும் வர்றதில்லையாம்,''
''ஆனா, தொற்று பாதிக்கப்பட்டவங்க, கோவை இ.எஸ்.ஐ.,க்குத்தானே அனுப்பறாங்க,''
'அது சரிதான். திருப்பூரில் மெடிக்கல் காலேஜ்க்காக, இப்ப இருக்கிற பில்டிங் ஒப்படைச்சிட்டாங்களாம். அதனால, கொரோனா தொற்று உள்ளவங்களை இங்க வச்சு டிரீட்மென்ட் கொடுத்தா பிரச்னையாயிடும்னு, கோவைக்கு அனுப்பிச்சிட்டாங்க. இந்த மாதிரி நிறைய பிரச்னைகள் இருக்கிறதால, காலேஜ் கட்டறது தள்ளிப்போகும்னு சொல்றாங்கப்பா,''
''அடக்கொடுமையே, இதுவேறயா,'' என்ற மித்ரா,
''அக்கா.. இந்த வடமாநில தொழிலாளர் பண்ணின வேலய பார்த்தீங்களா?''''ஆமா, கேள்விப்பட்டேன். 'பட்' முழுசா தெரியாது,''
''சொந்த ஊருக்கு அனுப்புங்கன்னு, நியூ திருப்பூரில், டயர்களை கொளுத்தி போராட்டம் பண்ணாங்க. அதில, ஒருத்தன், எரியற டயரை, அந்தப்பக்கம் போன, ஆம்புலன்ஸ் மேல துாக்கி வீசிட்டான். நல்லவேளை ஒண்ணும் ஆகலை. இதைப்பார்த்த போலீஸ் 'செம காண்ட்' ஆகி, சம்பந்தப்பட்டவனை வெளுத்துட்டாங்களாம்,''
''அப்புறம் என்னாச்சுடி?''
''எப்.ஐ.ஆர்., போட்டு, 10 பேரை உள்ள தள்ளிட்டாங்க. இந்தளவுக்கு பிரச்னை வந்தங்காட்டி, ஏதாவது பஸ் ஏற்பாடு பண்ணி அனுப்பிடலாமுன்னு, அதிகாரிங்க ஏற்பாடு செஞ்சாங்க. ஆனா, ஒரு பஸ்சுக்கு வாடகையாக, 2 லட்சம் கேட்டதால, அதிகாரிகள் எஸ்கேப் ஆயிட்டாங்க,''
''இதனால, போலீசே பாஸ் ரெடி பண்ணி, ஒரு ஆளுக்கு, 6,500 ரூபாய் வாடகை பேசி, அவங்க பணத்திலேயே அவங்க ஊருக்கு அனுப்பிச்சிட்டாங்களாம்,''
''பலே, செம ஐடியாதான்'' என்ற சித்ரா, ''சூரிய கட்சி நிர்வாகியின் வீடியோ வைரலாகி சர்ச்சை ஆயிடுச்சாம், தெரியுமா?'' கேள்வி கேட்டாள்.''தெரிலீங்களே...''
''அட.. அந்த கட்சி தலைவர், வீடியோ கான்பரன்ஸில், கொரோனா நிவாரணம் வாங்கிய பயனாளிகள் கிட்ட பேசினார். அதில, காங்கயத்தில், ஒருத்தர்கிட்ட பேசினார். அந்த வீடியோவை அவரே பரப்பிட்டாரு. இதில் என்ன கூத்து தெரியுமா?''
''அவரு, அந்த ஊரில் பெரிய புள்ளியாம். அவரே, அரிசி வாங்கிட்டாரான்னு, நெட்டிசன் போட்டு தாளிச்சிட்டாங்களாம். இதோடில்லாம, அப்ப தமிழ்நாடு பூராவும், இப்படித்தான், வசதியானவங்களா பார்த்து, நிவாரணம் குடுத்திருப்பாங்கன்னு, மக்களே பேசிக்கிறாங்களாம்,''
''ஆமா.. கேக்காம இருப்பாங்களா...'' என்ற மித்ரா, ''போலீசை தாக்கியவங்களை, கண்டுக்காம இருக்காங்களாம்,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள்.
''இதென்ன பிரச்னை மித்து?''''அக்கா... வேலம்பாளையத்தை சேர்ந்த போலீஸ்காரர், 'டாஸ்மாக்' கடை டியூட்டியை முடிச்சுட்டு, கிளம்பிட்டிருந்தார். அப்போ அங்க வந்த, ஒரு கும்பல் அவரை தாக்கிட்டு ஓடிட்டாங்க. இதில, அவருக்கு கையில பலமா அடிபட்டு, ஹாஸ்பிடலில் இருக்கிறார்,''
''போலீஸ்காரரை தாக்கும் 'சிசிடிவி' புட்டேஜூம் இருக்குது. சும்மா, எப்.ஐ.ஆர்., மட்டும் போட்டுட்டு கம்முன்னு இருக்காங்களாம். போலீசுக்கே இந்த கதியா?னு மத்த போலீஸ்காரர்களும் குமுறாங்க. இந்த விஷயத்தை, கமிஷனரும் கண்டுக்கலையாம்,''
''பெரிய ஆளு பின்னாடி இருக்கிறதால, போலீஸ் அடக்கி வாசிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்,'' சித்ரா ஆவேசப்பட்டாள்.
''அக்கா... எம்.பி., சொன்னதும் ரயில் விட்டுட்டாங்களாமா?'' அடுத்த மேட்டரை சொன்னாள் மித்ரா.''அவரு சொன்ன ரயில் விட்ருவாங்களா?''
''இல்லக்கா... ஒரு வாரமா, நார்த் இண்டியன் லேபர்ஸ் பிரச்னை பண்றாங்கன்னு,மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து, பீகாருக்கு ஒரு ரயில் ஏற்பாடு செஞ்சாங்க. ஆல்ரெடி, தெரிஞ்சுகிட்ட எம்.பி., உடனே பிரஸ்மீட் வச்சு, 'ரெண்டு நாளைக்குள்ள ரயில் விடலேன்னா, பெரிய பிரச்னையாயிடும்,'னு சொன்னார்,''
''ஏற்கனவே, திட்டமிட்டபடி ரயில் வந்தது. ஆனா, 'எங்கஎம்.பி., சொல்லித்தான் ரயில் விட்டாங்க'ன்னு, தோழர்கள் பிரசாரமே பண்றாங்களாம்,''
''இது யூசுவலா நடக்கிற விஷயம்தானே மித்து,'' சொன்ன சித்ரா, ''இந்த டாஸ்மாக் பிரச்னை இப்போதைக்கு ஓயாது போலிருக்கே,'' என்றாள்.
''அதுதான், லாக்டவுன் முடியற வரைக்கும் மதுக்கடை திறக்கக்கூடாதுன்னு, கோர்ட் உத்தரவு போட்டுடுச்சே...''
''அட... விஷயம் அதில்லடி. ஊரடங்கில், மாவட்டத்தில் பல இடங்களில் 'டாஸ்மாக்' கடைகளில் திருட்டு தனமாக சரக்கு எடுத்துட்டு போயி, மூனு, நாலு மடங்கு விலைக்கு வித்தாங்க. சில கடைகளில் வெல்டிங் வைச்சு, 'சீல்' உடைச்சு, மதுபாட்டிலை ஊழியர்களே கடத்தினாங்க,''
''ஆனா... இதைப்பத்தி அந்த அதிகாரி கண்டுக்கலையாம். இத்தனைக்கும், அவிநாசியிலுள்ள ஒரு கடையில், பகல் நேரத்தில், 'சீல்' உடைச்சு, 'சரக்கு' பெட்டிகளை காரில் கடத்தி போனாங்களாம். இது தெரிஞ்சு, மதுவிலக்கு போலீஸ் விசாரிச்சு, 3.96 லட்சம் மதிப்புள்ள சரக்கு வெளியே போயிடுச்சு,''
''கண்டிப்பா கேஸ் போடணும், புகார் குடுங்க'ன்னு அதிகாரிகிட்ட சொன்னதும், அவர்மறுத்துட்டாராம். அப்புறம் போலீசும், நமக்கென்னன்னு விட்டுட்டாங்களாம். விஷயம் என்னன்னா, பல கடைகளிலும் இப்படி நடந்ததால், சம்பந்தப்பட்டவர்கள், 'லகரங்களை' வாரி வழங்கியுள்ளனராம். அப்புறம் எப்படி, புகார் குடுப்பாரு...'' என சிரித்தாள் சித்ரா.
அப்போது வந்த நர்ஸ்,'டாக்டர் லுார்துசாமிகிட்டஅப்பாயின்மென்ட் கேட்டவங்க, வாங்க' என்றதும், அருகில் ஒரு தம்பதியினர் எழுந்து உள்ளே சென்றனர். டாக்டரும்ரவுண்ட்ஸ் முடித்து வெளியே செல்ல, சித்ராவும், மித்ராவும் உறவினரை பார்க்க சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE