பொது செய்தி

இந்தியா

ஊட்டச்சத்து குறைபாடால் குழந்தைகள் உயிரிழப்பு அதிகம்

Updated : மே 14, 2020 | Added : மே 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஊட்டச்சத்து குறைபாடால் குழந்தைகள் உயிரிழப்பு அதிகம்

நாட்டில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பில், 68 சதவீதம், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு உரிய ஊட்டச்சத்து கிடைக்காததே காரணமாக உள்ளது.
அதேபோல், குறைந்த எடையுடன் பிறப்பது, குறைந்த கர்ப்ப காலத்தில் பிறப்பது போன்றவை, பிறந்த குழந்தைகள் உயிரிழப்புக்கு, 83 சதவீத காரணமாக உள்ளது என்பது, ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.இந்த விகிதங்களை குறைப்பதில் சற்று முன்னேற்றம் கண்டாலும், பல மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையே, பெருத்த இடைவெளி இருப்பதாக ஆய்வறிக்கை கூறியுள்ளது.



ஆய்வு



கடந்த, 2000 மற்றும் 2017ம் ஆண்டு வரையில், குழந்தைகள் மற்றும் கர்ப்ப கால உயிரிழப்புகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், இந்திய பொது சுகாதார அறக்கட்டளை, சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் மையம் ஆகியவை இணைந்து, இந்த ஆய்வை மேற்கொண்டன. இதில், தேசிய அளவிலான புள்ளி விபரங்கள், மாநில மற்றும் மாவட்டங்கள் இடையே யான வித்தியாசம் உள்ளிட்டவை பட்டியலிடப்பட்டுள்ளன.

இது குறித்து, இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் கூறிஉள்ளதாவது:தற்போது நாம், கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகிறோம். அதே நேரத்தில், மற்ற மருத்துவ மற்றும் சுகாதார பிரச்னைகளையும் கவனிக்க வேண்டும். இது, நாட்டின் ஒட்டுமொத்த சுகாதார நிலையை மேம்படுத்த உதவும்.அந்த வகையில், இந்த ஆய்வறிக்கை, நமக்கு பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த, 2000ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2017ம் ஆண்டில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு, 49 சதவீதம் குறைந்துள்ளது.ஆனால், மாநிலங்களுக்கு இடையேயான வித்தியாசம், ஆறு மடங்கும், மாவட்டங்களுக்கு இடையேயான வித்தியாசம், 11 மடங்கும் உயர்ந்துள்ளன. கடந்த, 2017ல், நாடு முழுதும், 5 வயதுக்குட்பட்ட, 10.40 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில், 5.7 லட்சம் குழந்தைகள், பிறந்த உடன் இறந்துள்ளன. கடந்த, 2000ல் இவை முறையே, 22.4 லட்சம் மற்றும் 10.2 லட்சமாக இருந்தன.




குறைவு



கடந்த, 2000ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2017ல்,பிறந்த குழந்தைகள் இறப்பது,38 சதவீதம் குறைந்துள்ளது.ஆனால், மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடு, ஐந்து மடங்கும், மாவட்டங்களுக்கு இடையேயான வேறுபாடு, எட்டு மடங்கும் உயர்ந்துள்ளன.கடந்த, 2000ம் ஆண்டோடு ஒப்பிடுகையில், 2017ல், 5 வயதுக்குட்பட்ட மற்றும் பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் குறைந்து உள்ளன.

ஆனால், மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் இடையேயான வேறுபாடு அதிகரித்துள்ளது. அதாவது, சில மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டாலும், மற்ற மாநிலங்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை.கடந்த, 2017ல் உள்ள புள்ளி விபரங்களை பார்க்கும்போது, சர்வதேச அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள, 2030ம் ஆண்டுக்கான நீடித்த வளர்ச்சி இலக்கை, நம் நாடு எட்டுவதற்கு சாத்தியமில்லை.

மிகப் பெரிய அளவில் முயற்சி செய்தால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பை குறைக்கும் இலக்கை வேண்டுமானால் எட்டலாம். ஆனால், பிறந்த குழந்தைகள் உயிரிழப்பு இலக்கை எட்டுவது மிகவும் கடினம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பை தடுக்க, 34 சதவீத மாவட்டங்களில் அதிக முயற்சி தேவை. அதேபோல், பிறந்த குழந்தைகள் உயிரிழப்பைத் தடுக்க, 60 சதவீத மாவட்டங்களில் கடும் நடவடிக்கை தேவை.



ஊட்டச்சத்து



ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பில், 68 சதவீதம், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு உரிய ஊட்டச்சத்து கிடைக்காததே காரணமாக உள்ளது. அதேபோல், குறைந்த எடையுடன் பிறப்பது, குறைந்த கர்ப்ப காலத்தில் பிறப்பது போன்றவை, பிறந்த குழந்தைகள் உயிரிழப்புக்கு, 83 சதவீதம் காரணமாக உள்ளது. அதனால், கர்ப்ப காலத்தில் இருந்து, 5 வயது வரை, குழந்தைகளுக்கு உரிய ஊட்டச்சத்து கிடைப்பதற்கான நடவடிக்கைகளும் தேவை.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


மாநிலங்கள் மோசம்



ஆய்வறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த, 2017ம் ஆண்டில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பில், உத்தர பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு, மூன்று லட்சத்து, 12 ஆயிரத்து, 800 குழந்தைகள் உயிரிழந்தன. அதில், பிறந்த உடன் இறந்த குழந்தைகள் மட்டும், ஒரு லட்சத்து, 65 ஆயிரத்து, 800. பீஹாரில், 75 ஆயிரத்து, 300 பிறந்த குழந்தைகளுடன், 5 வயதுக்குட்பட்ட, ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 500 குழந்தைகள் இறந்துள்ளன.ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் பலியில், 1,000 குழந்தைகளுக்கு, 10 என்ற அளவில், கேரளா உள்ளது. அதுவே உத்தர பிரதேசத்தில், 60 ஆக இருந்தது. பிறந்த குழந்தைகள் உயிரிழப்பில், 1,000 குழந்தைகளுக்கு, ஏழு என்ற அளவில் கேரளா சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால், உத்தர பிரதேசத்தில், 32 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயிர் இழப்பை குறைக்கும் நடவடிக்கைகள், நாகாலாந்தில், 2.7 சதவீதமாகவும்; தெலுங்கானாவில், 6.5 சதவீதமாகவும் உள்ளன. பிறந்த குழந்தைகள் இறப்பு விகிதம் குறைப்பு, நாகாலாந்தில், 1.8 சதவீதத்தில் இருந்து, தமிழகத்தில், 5.5 சதவீதம் வரை உள்ளது. அதாவது, தெலுங்கானா மற்றும் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளன. ஆனால், நாகாலாந்தில், இறப்பு விகிதத்தை குறைக்கும் நடவடிக்கை மிகவும் குறைவாக உள்ளது.இவ்வாறு மாநிலங்களுக்கு இடையேயான வேறுபாடு அதிகம் உள்ளது. அதேபோல் ஒரு மாநிலத்துக்குள்ளேயே, மாவட்டங்கள் இடையேயான வேறுபாடும் அதிகம் உள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. - நமது சிறப்பு நிருபர் -



Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-202007:23:48 IST Report Abuse
ஆப்பு முதல்ல ஜனத்தொகை பெருக்கத்தை குறைக்கற வழியைப் பாருங்க. தடுக்கி விழுந்தா இன்னொருத்தன் மேலே விழுற மாதிரி இருக்கு நிலைமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X