பொருளாதார மேம்பாட்டுக்கு ரூ.20 லட்சம் கோடி திட்டம்: பிரதமர் மோடி அறிவிப்பு

Updated : மே 13, 2020 | Added : மே 12, 2020 | கருத்துகள் (89+ 99)
Share
Advertisement
PM modi, narendra Modi, corona update, covid 19 India ,India fights corona,coronavirus crisis, coronavirus update, lockdown, quarantine, curfew, india, coronavirus, covid 19,மோடி,ஊரடங்கு,நீட்டிப்பு

புதுடில்லி: கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பை, நம்மால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்; வைரசால் ஏற்பட்டுள்ள நெருக்கடி, எதிர்பாராதது தான். ஆனால், நம்மால் நிச்சயம், பாதுகாப்புடன் மீளமுடியும்; வாருங்கள் ஒரு கை பார்ப்போம்! சுய சார்புடன் வீறு கொள்வதே, நம்மிடம் உள்ள ஒரே வழி. படிப்படியான முன்னேற்றம், வளர்ச்சி என சிந்திப்பதற்கெல்லாம், இப்போது நேரமில்லை. நாம், அதிரடி மாற்றங்களுக்கு தயாராக வேண்டும். பொருளாதார மேம்பாட்டுக்காக, 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதற்கான திட்டங்களை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் அறிவிக்க உள்ளார். நான்காம் கட்ட ஊரடங்கு, வித்தியாசமானதாக இருக்கும். இதுபற்றி, 18ம் தேதிக்கு முன் அறிவிக்கப்படும்.

- நேற்று இரவு, 8:00 முதல், 8:38 மணி வரை, பிரதமர் மோடி உரை.

கொரோனா பரவலை தடுக்க, நாட்டில், மார்ச் 25-ம் தேதி முதல், ஊரடங்கு அமலில் உள்ளது. சில தளர்வுகளுடன், மே 17-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், நாட்டில், நோய்த் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, மாநில முதல்வர்களுடன் நேற்று முன்தினம், பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

இதில், பல்வேறு மாநில முதல்வர்கள், தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். ஊரடங்கு துவக்கியது முதல், 'டிவி' வாயிலாக, மூன்று முறை நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, பல கட்ட ஆலோசனைகளுக்குப் பின், நான்காவது முறையாக நேற்று இரவு, 8:00 மணிக்கு, மீண்டும் உரையாற்றினார்.


நிறைய பாடம் கற்கிறோம்


அதில், அவர் பேசியதாவது: உலகம் முழுதும், கொரோனா வைரசுக்கு, மூன்று லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது. ஒரு வைரஸ், ஒட்டுமொத்த உலகத்தை சின்னாபின்னமாக்கி இருக்கிறது. கொரோனாவுக்கு எதிராக, நான்கு மாதங்களாக, உலகமே போராடி வருகிறது. உலகம் முழுதும், இந்த வைரஸ் பெரும் நாசத்தை ஏற்படுத்தி விட்டது; 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனித இனத்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத மிகப் பெரிய பாதிப்பு இது. நாம் இதற்கு முன், இப்படி ஒரு பேரிடரை கேள்விப்பட்டதும் இல்லை; பார்த்ததும் இல்லை. இந்த வைரஸ், மனிதர்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்து உள்ளது.


இனி சுய சார்புடன் இருப்போம்


கொரோனாவுக்கு பிந்தைய உலகை, இந்தியா வழிநடத்த வேண்டும். தொற்றுக்கு எதிரான போரில், நாம் முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். இது, விட்டுவிடும் நேரமல்ல; நாம் வெற்றி பெற வேண்டும். உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை, இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. உலகுக்கே, இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி, உலகின் வளர்ச்சிக்கு வித்திடும். இனி யாரையும் சார்ந்திராமல், சுய சார்புடன் இருப்போம் என, 130 கோடி மக்களும் உறுதி ஏற்போம்.

'உலகம் எப்போதும் ஒரே குடும்பம்' என்பது தான், இந்தியாவின் நிலை. நமக்கு எப்போதும் சுயநலம் இருந்ததில்லை. உலகின் கொள்கைகளை, இந்தியா மாற்றி அமைத்து வருகிறது. வலிமையான இந்தியாவை உருவாக்க, இதுவே சரியான தருணம். இதை, நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த, 21ம் நுாற்றாண்டு, இந்தியாவுக்கானது என்பதை நிரூபிக்க வேண்டிய நேரமிது. இந்தியா மிகச்சிறப்பாக செயலாற்றும் என, உலகம் இப்போது நம்புகிறது. மனிதகுலத்தின் நலனுக்கு, நம்மால் பெரிய பங்களிப்பை செய்ய முடியும்.


ஐந்து முக்கிய காரணிகள்


இந்தியாவின் வளர்ச்சியில், ஐந்து முக்கிய காரணிகள் உள்ளன. பொருளாதாரம், உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப அடிப்படையிலான செயல்பாடுகள், மக்கள் தொகை, தேவை மற்றும் சப்ளை ஆகிய ஐந்தும், இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணிகளாக உள்ளன. இந்த காரணிகளைக் கைக்கொண்டு, சுய சார்புடன் முன்னேறுவோம். படிப்படியான முன்னேற்றம், வளர்ச்சி என, நாம் பெருமைப்படக் கூடாது. தடாலடியான மாற்றங்கள் கொண்டு வரப்படும்; அதைப் பயன்படுத்தி, நாம் முன்னேற்றப் பாதையில் செல்வோம்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு, 20 லட்சம் கோடி ரூபாய்க்கு, பொருளாதார சிறப்பு திட்டங்கள், அறிவிக்கப்பட உள்ளன. ரிசர்வ் வங்கியின் இந்த நிதியில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் பற்றி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று முதல் அறிவிப்புகள் வெளியிடுவார். இந்த திட்டங்கள் மூலம், நாட்டின் வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்கும். நம் நாட்டுத் தயாரிப்புகளாக, பொருட்கள் மற்றும் சேவைகளை, உலக நாடுகளுக்கு அளிப்பதில், நாம் முதலிடம் பெற வேண்டும் என்பதே, இந்த திட்டங்களின் முக்கிய நோக்கம்; இந்த திட்டங்கள் மூலம், இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்லும். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் நோக்கம், அறிவிக்கப்பட இருக்கும் புதிய திட்டங்களால், முற்றிலும் நிறைவேறும்.


நம்மால் முடியும்; செய்து காட்டுவோம்!


அனைத்து தரப்பு மக்களும் பலனடையும் வகையில், இந்த திட்டங்கள் இருக்கும். மக்கள் அனைவரும் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வரும் வேளையில், இந்த திட்டங்கள் பெரும் வரப்பிரசாதமாக அமையும். தொழிலாளர்கள், சிறு வியாபாரிகளுக்கு இந்த திட்டங்கள், புத்துயிர் அளிக்கும். ஏழைகள், நடுத்தர மக்களின் நலன்களும் பாதுகாக்கப்படும். வைரசால் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், இந்த திட்டங்கள் இருக்கும்.

உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதில், நாம் பெருமை கொள்ள வேண்டும். கதரும், கைத்தறியும் அதிகம் வாங்க வேண்டும் என, நான் உங்களை கேட்டுக் கொண்டேன்; அதை வெற்றிகரமாக செய்து காட்டினீர்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 10 சதவீதம், கொரோனா மீட்பு பணிக்கு வழங்கப்படும். கொரோனா பாதிப்பை சமாளிக்க, உள்நாட்டு தொழில் துறையே உதவி செய்தது.

இன்று நம்மிடம் வளங்கள் உள்ளன; நம்மிடம் சக்தி உள்ளது. உலகின் மிகச் சிறந்த திறமையாளர்கள், நம்மிடம் உள்ளனர். நாம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குகிறோம்; நம் தரத்தை மேம்படுத்துகிறோம். நம்மால் முடியும்; செய்து காட்டுவோம்! நம்மிடம் வலுவான தீர்வு இருந்தால், எந்த பாதையும் கடினம் இல்லை.

பல நிலநடுக்கங்களை நாம் சந்தித்துள்ளோம். இயற்கையால் ஏற்பட்ட பேரிடர்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளோம். தனித்தன்மை கொண்ட இந்தியாவால், எதையும் வெற்றிகரமாக சமாளிக்க முடியும். இந்த வைரஸ் பாதிப்பு ஆரம்பித்த போது, இந்தியாவில் இருந்து ஒரு, 'பி.பி.இ., கிட்' கூட கூட உற்பத்தி செய்யப்படவில்லை. அப்போது நம்மிடம், 'என்95' முக கவசங்களும், மிக குறைந்த எண்ணிக்கையில் தான் இருந்தன.


உலகுக்கே நாம் வழிகாட்டுவோம்!


ஆனால் இன்று, நாள் ஒன்றுக்கு, இரண்டு லட்சம், பி.பி.இ., கிட்களையும், என்95 முககவசங்களையும் தயாரித்து வருகிறோம்.கொரோனா பெருந்தொற்று, நம்முடன் நீண்ட காலம் இருக்கும். இதிலிருந்து தப்பிக்க, முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

நான்காம் கட்டமாக ஊரடங்கு மீண்டும் நீடிக்கப்படுவது பற்றி, 18ம் தேதிக்கு முன் அறிவிக்கப்படும். ஆனால், இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இதன் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இந்தியா, தன்னிறைவு நாடாக மாறும். இதை, யாராலும் தடுக்க முடியாது. உலகுக்கே இந்தியா வழிகாட்டும்! இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


வளர்ச்சிக்கு உதவும்!


கொரோனா வைரஸ் பரவி வரும் இந்த நெருக்கடியான நேரத்தில், பிரதமர் மோடி, இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், மிகப் பிரமாண்டமான பொருளாதார சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த நெருக்கடி நிலையை நாடு எதிர்கொள்வதற்கு, இந்தத் திட்டம் மிகவும் உதவியாக இருக்கும். 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டம், நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் பயணிப்பதற்கு பெரிதும் உதவும்.
- சி.பானர்ஜி, இயக்குனர் ஜெனரல், இந்திய தொழில் கூட்டமைப்பு


அனைவருக்கும் பயன்!


பிரதமர் அறிவித்துள்ள, 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார திட்டம், நம் நாட்டை சுய சார்புடையதாக மாற்றும் மிக முக்கியமான நடவடிக்கை. பொருளாதாரத்தை மேம்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தால், இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பயன் அடைவர்.
- சிவ்ராஜ் சிங் சவுகான், மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,


இன்று தெரியும்!


நிவாரண தொகை முன்னரே அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். யார் யாருக்கு எவ்வளவு வழங்கப்படும் என்பது பற்றிய விபரங்கள் இல்லை. நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெளிவுபடுத்திய பின் தான், எந்தெந்த துறையினருக்கு, எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியவரும்.
-பூபேஷ் பாகேல், சத்தீஸ்கர் முதல்வர், காங்.,


வரவேற்கக் கூடியது!


மிகச் சிறந்த அறிவிப்பு. பிரதமர் அறிவித்துள்ள, 20 லட்சம் கோடி ரூபாய் திட்டம், நாட்டின் மொத்த பட்ஜெட்டில், 60 சதவீதம்; நம் நேரடி வரி மற்றும் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலில், 90 சதவீதம்; அண்டை நாடான பாகிஸ்தானின், ஜி.டி.பி., எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட, இரண்டு மடங்கு அதிகம். விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர், தொழில் துறையினர் மற்றும் தொழிலாளர்களுக்கு சிறந்த பொருளாதார மீட்பு உறுதியை அவர் அறிவித்துள்ளார்.
- சேகர், ஆடிட்டர், சென்னை


மீண்டு வரும்!


சரியான நேரத்தில், தேவையான அறிவிப்பை, பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகள், குறிப்பாக, சிறு, குறு தொழில்கள் மீண்டு வரும் என்று நம்புகிறோம்.
- தீபக் ஜெயின், தலைவர், ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பாளர் சங்கம்


அதிருப்தி அளிக்கிறது!


பிரதமரின் அறிவிப்புகள், ஊடகங்களுக்கு வேண்டுமானால் தலைப்பு செய்தியாக இருக்கலாம். வெளிமாநிலத் தொழிலாளர் விவகாரத்தில், மனித நேயமில்லாமல், சிந்தனையில்லாமல் செயல்பட்டதால், நாடு அதிருப்தியில் உள்ளது.
- ரண்தீப் சுர்ஜேவாலா, செய்தித் தொடர்பாளர், காங்.,


நம் ரிசர்வ் வங்கி மிகவும் வலுவானது!


இதை வழங்க முடியுமா, சாத்தியமா என்றெல்லாம் கேட்கின்றனர். நம் மத்திய ரிசர்வ் வங்கி, மிகவும் வலுவானது. அதிகாரிகள் இந்தப் பணத்தை, பயனாளர்களிடம் எப்படிச் சேர்க்கின்றனர் என்பதில் தான் வெற்றி இருக்கிறது.
-வ.நாகப்பன், பொருளாதார நிபுணர்


தொழிலாளர் சட்டம் புனரமைப்பு!


ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி மற்றும் பொருளாதார உதவிகளோடு சேர்ந்தது தான், இந்த, 20 லட்சம் கோடி. பழையனவற்றைக் கழித்து விட்டாலும், 15 லட்சம் கோடி, புதிய உதவித் திட்டத்தில் இருக்கும்.இதில் முக்கியமானது சுய சார்பு தான். மாநிலங்களில், 200 தொழிலாளர் சட்டங்களும், மத்திய அளவில், 50 சட்டங்களும், 1946க்கு முன்பு உருவாக்கப்பட்டவை. அவற்றைச் சீர்திருத்த, இதைக் காட்டிலும் நல்ல நேரம், வேறு கிடையாது. அதைத் தான், பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார்.
- ஸ்ரீராம் சேஷாத்ரி, பொருளாதார நிபுணர்


புதிய தொழில்முனைவோருக்கு வாய்ப்பு!


பண மதிப்பிழப்பு நடவடிக்கையில், 16 லட்சம் கோடி ரூபாயை அரசு கையில் எடுத்துக் கொண்டது; இப்போது, அதே அளவுக்கான தொகையை, தொழிற்துறையினரிடம் வழங்கப் போகிறது. பெருந்தொழில்களுக்கு ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம், வரிச் சலுகை வழங்கப்பட்டு விட்டதால், இந்த நிதி உதவித் தொகுப்பில், புதிய தொழில்முனைவோருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
-ஷ்யாம் சேகர், பொருளாதார நிபுணர்


இது ஒரு நல்ல துவக்கம்விவசாயத்தைக் காப்பாற்ற வேண்டியது அவசியம். மேலும், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் தான், நம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 60 சதவீத பங்களிப்பைச் செய்கிறது. மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு, எம்.எஸ்.எம்.இ.,க்கள் தான். அவர்களையும் இந்நேரத்தில் காப்பாற்றுவது அவசியம். அந்த நோக்கில் பார்த்தால், இத்திட்டம் ஒரு நல்ல துவக்கம்!
- ரமேஷ் சேதுராமன், தொழில் துறை ஆலோசகர்


வழிநடத்துகிறார்!


உலகிலேயே மிகப் பெரிய பொருளாதார மீட்பு திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 21ம் நுாற்றாண்டில், உலக நாடுகளை, இந்தியா வழி நடத்தி செல்லும். அந்த வகையில், கொரோனா வைரஸ் மீட்பு நடவடிக்கைகளில் அவர், நாட்டு மக்களை முன்னின்று நடத்தி வருகிறார்.
-ஜே.பி. நட்டா, தேசிய தலைவர், பா.ஜ.,

Advertisement
வாசகர் கருத்து (89+ 99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
babu -  ( Posted via: Dinamalar Android App )
13-மே-202022:53:03 IST Report Abuse
babu சாதனை பட்டியல் விவரப்படி பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாவற்றிலும் நஷ்டம். லாபமா நடத்த தெரியலை(மந்திரிங்களுக்கு சம்பந்தமில்லை சம்பளம் (கமிசனும்) பெறுவது மட்டுமே கடமை) அப்படீன்னுதான் பாதியையும் தனியாருக்கு வித்தாங்க. வரி வருமானத்தில் இவ்வளவு அமௌண்ட் சேர்ந்திருக்குன்னா இல்லை இனிமேல்தான் பிழிய போறாங்களா? பாவம் மக்கள்
Rate this:
Cancel
Murthy - Bangalore,இந்தியா
13-மே-202018:13:12 IST Report Abuse
Murthy புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவரவர் வீட்டிற்கு செல்ல வழி செய்யுங்கள்.
Rate this:
Cancel
Abbavi Tamilan - Riyadh,சவுதி அரேபியா
13-மே-202016:34:03 IST Report Abuse
Abbavi Tamilan இதுவரை ரேஷனில் போடப்பட்ட அரிசி எல்லாம் இத்திட்டத்தின் கீழ் போட்டதாக கணக்கு காட்டப்படும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X