கோல்கட்டா: ''சீனாவில் இருந்து வெளியேறி, இந்தியாவுக்கு வரும் பன்னாட்டு நிறுவனங்களால், நாடு பயனடையும் என்பதை உறுதியாக கூற முடியாது,'' என, நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுனர், அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

அவர், தனியார், 'டிவி'க்கு அளித்த பேட்டி:கொரோனா பரவ, சீனா தான் காரணம் என்கின்றனர். அதனால், 'சீனாவில் இருந்து வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தொழில் துவங்கும்; அதன் காரணமாக இந்தியா வளர்ச்சி பெறும்' என, சிலர் கூறுகின்றனர். அதில் உண்மையில்லை. சீனா, அதன் யுவான் கரன்சி மதிப்பை குறைத்தால், அந்நாட்டின் பொருட்கள் விலை குறையும். அவற்றை யாராவது வாங்க மறுப்பரா!உலக நாடுகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிட்ட சதவீதத்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அளித்து உள்ளன.

ஆனால், இந்தியா, ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே, அதாவது, 1.70 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கே ஊக்கச் சலுகை அறிவித்துள்ளது.மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. அவர்களிடம் பணம் இல்லை. அரசு, அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு, மக்களின் கைகளில் பணம் வழங்க வேண்டும். சாதாரண மக்கள் தான், நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்துகின்றனர்; பணக்காரர்கள் அல்ல. வெளி மாநில தொழிலாளர்கள், பல மாநிலங்களை கடந்து, தங்கள் ஊர் செல்கின்றனர். அதனால் அவர்களுக்கு உணவு, இருப்பிடம் அளித்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE