சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

மக்களே... இனி உங்கள் சாமர்த்தியம்!

Added : மே 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

மக்களே... இனி உங்கள் சாமர்த்தியம்!

முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசின் நடவடிக்கையால், 'ஒண்ணுமே புரியலே உலகத்திலே' என, தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர், மக்கள்.அரசு, நாளொரு உத்தரவு, பொழுதொரு கட்டுப்பாடு பிறப்பித்து, எப்படியாவது, 'கொரோனா' வைரசை, நம் நாட்டிலிருந்து விரட்டி அடிக்க, தலையாலே தண்ணி குடித்துப் பார்க்கிறது. அதற்கு, மக்கள் ஒத்துழைத்தால் தானே!நம் மக்கள், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், வீட்டுக்குள்ளே அடங்கி கிடக்காமல், கூட்டம் கூட்டமாய் சென்று, கொரோனாவை இலவசமாய் வாங்கி வருகின்றனர்.'சாண் ஏறினால், முழம் சறுக்குகிறது' என்பது போல, அரசின் முயற்சியால், சிறிது கட்டுப்பாட்டுக்குள் இருந்த நோய் தொற்று, மக்களின் அலட்சியத்தால், கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது.
ஆரம்பத்தில் தனிமைப்படுத்துதல், மருந்து கொடுத்தல், ஊரடங்கு, சமூக இடைவெளி என, கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆர்வம் காட்டிய அரசு, தற்போது அலட்சியமாய் உள்ளது என்றால், அதற்கு இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும்.ஒன்று, ஜனத்தொகை அதிகம் உள்ள நம் நாட்டில், மக்களைக் கட்டுப்படுத்துவது என்பது, கடினமான செயல். அடுத்து, அரசின் உத்தரவுகளுக்கு,
மக்கள் கட்டுப்பட மறுக்கும் போக்கு.காவலர்களும், அதிகாரிகளும், தொற்று நோய் பற்றிய விபரீதத்தை, கரடியாய் கத்தி எடுத்துரைத்தாலும், நம் மக்கள் கேட்டால் தானே!ஒரு பக்கம், கண்ணுக்குத் தெரியாத கிருமி; மற்றொரு பக்கம், அடங்க மறுக்கும் மக்கள் என, போராடி பார்த்து, அரசு அலுத்து விட்டது. இனி இவர்களை
கட்டுப்படுத்த முடியாது என, அரசு முடிவெடுத்து, 'மக்களே... உங்கள் சாமர்த்தியம்' என, கைகழுவி விட்டது என்று தான் தோன்றுகிறது.கிருமி விஸ்வரூபம் எடுத்து, பாதிப்பும், உயிரிழப்பும் அதிகமாகி போனதால், 'தலைக்கு மேலே போன வெள்ளம், சாண் போனால் என்ன, முழம் போனால் என்ன...' என, அரசு நினைக்கிறதோ, என்னமோ!
மக்களே... இனி நம்மை, நாமே தான் காத்துக் கொள்ள வேண்டும் எனும் போது, ஒரு பொறுப்புணர்ச்சி வரத் தானே செய்யும். நம் மக்களுக்கு, அது தான் தேவை!

'ஓவர் டைம்' காப்பாற்றும்!

வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊரடங்கு காரணமாக, நம் நாட்டில் தொழில்கள் ஸ்தம்பித்தன; சம்பளத்தில், 'வெட்டு' விழுந்தது. தினக்கூலிகள் வருமானம், முற்றிலும் நின்று போனது. புதிய தொழில் முனைவர்கள், நிலைகுலைந்து போயினர்.ஐம்பது நாட்கள், நிறுவனத்தை மூடியதால், உரிமையாளர்கள், தங்களிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் தர வழி இல்லை; கடன் தருவோரும் இல்லை. இதில் இருந்து எப்படி மீண்டு வர போகிறோம்?நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வேலை வாய்ப்பு தேடி, பாமர மற்றும் படித்த இளைஞர்கள், மும்பை நோக்கி தான் செல்கின்றனர்.இந்தியாவின் பொருளாதார தலைநகரம், மும்பை தான். மஹாராஷ்டிரா மாநில அரசு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை, எட்டு மணி நேரத்தில் இருந்து, 12 மணி நேரமாக உயர்த்தி உள்ளது;
தொழிலாளர் நல விதிகளையும், தளர்த்தி உள்ளது.ஒடிசா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், கோவாவும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை, 12 மணி நேரமாக உயர்த்தி உள்ளன.ஊழியர்களுக்கு, 'ஓவர்டைம்' ஊதியம் உண்டு. 'கொரோனா' காரணமாக நேரிட்ட, உற்பத்தி மற்றும் சம்பள இழப்பை ஈடுகட்ட, இந்த கூடுதல் வேலை நேரம் உதவும்.சிறிய, நடுத்தர ஊர்களில், ஓவர்டைம் பார்த்தால், இரட்டிப்பு ஊதியம் தருவதில்லை. இதை கண்காணித்து, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.ஆட்குறைப்பு, சம்பள வெட்டு, வார விடுமுறை ரத்து போன்ற ஏதும் இல்லாமல், மீண்டும் தொழில்துறை சகஜநிலைக்கு திரும்ப, சில கடுமையான மாற்றங்களை, நாம் அனைவரும்
சுமக்கத் தான் வேண்டும்.இந்த இக்கட்டான நிலையில், கம்யூ., போன்ற கட்சிகள், தொழிலாளர்களை போராட்டத்திற்கு துாண்டலாம்; ஆனால், அது நல்லது இல்லை என்பதை உணருங்கள், மக்களே!

இப்படி செய்யலாமே!

எம்.ஏ.செல்வராஜ், முன்னாள் தலைவர், தமிழக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த மார்ச்சில், 8.26 லட்சம், பிளஸ் 2 மாணவர்களும்; 8.16 லட்சம் பிளஸ் 1 மாணவர்களும், பொதுத் தேர்வு எழுதினர். கொரோனா நோய் தொற்று காரணமாக, விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறவில்லை.தற்போது உள்ள சூழ்நிலையில், பொது மதிப்பீட்டு மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி நடந்தால், பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உண்டாக வாய்ப்புள்ளது.போக்குவரத்து சீர் அடையாத நிலையில், வெவ்வேறு இடங்களில் தங்கியுள்ள ஆசிரியர்களை, மதிப்பீட்டு மையங்களுக்கு வரவழைத்து, ஒருங்கிணைப்பது கடினமாகும்.சமூக இடைவெளியில், ஆசிரியர்கள் அமர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி மேற்கொண்டால், அதிக எண்ணிக்கையில் அறைகள் தேவைப்படும்.
யாரேனும் ஒருவருக்கு, நோய் தொற்று இருந்தால், அந்த மையத்தையே மூடும் சூழ்நிலை உருவாகும்.எனவே, பொது மதிப்பீட்டு மையத்திற்கு வரும், ஆசிரியர்கள் ஒவ்வொருவரிடமும், 'டம்மி' எண் போடப்பட்ட, 200 விடைத்தாள்களையும், விடைக் குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு ஆகியவற்றைக் கொடுத்து, 10 நாட்கள் அவகாசம் வழங்கலாம்.அவரவர் வீட்டிலேயே அமர்ந்து, விடைத்தாள்களைத் திருத்த அறிவுறுத்த வேண்டும். திருத்தப்பட்ட விடைத்தாள்களையும், மதிப்பெண் பட்டியலையும், மீண்டும் மையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற ஏற்பாட்டைச்
செய்யலாம்.பின், அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம், விடைத்தாள்கள் சரியாக திருத்தப்பட்டுள்ளனவா என, ஆய்வு செய்து, சரி செய்து கொள்ளலாம். இந்நேரத்தில், இதுவே சரியான நடைமுறையாக இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ragu - Vellore,இந்தியா
14-மே-202010:06:07 IST Report Abuse
Ragu That's it. Unless public has the sense of responsibility, no one can help containing the virus I agree with Dr. Meenakshi Pattabiraman, the reason for Govt.'s reluctance. It's quiet demoralizing to see irresponsible gathering among the public. Unfortunately the death toll will go up and can't blame Government for this
Rate this:
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
14-மே-202007:16:21 IST Report Abuse
venkat Iyer திரு.பட்டாபிராமன் கூறியது சரியான கருத்தாக நினைக்கின்றேன்.ஊரடங்கு என்பது நான்கு அல்லது ஐந்து பேருக்கு மேல் நெருக்கமாக கூட்டம் போடக்கூடாது என்பது ஓராண்டுகளுக்கு மக்கள் இனிமேல் பழகிக்க வேண்டும். சமூக விலகல்,கை கழுத்து மற்றவர்களை தொடாமல் இருப்பது இவற்றை கடை பிடிக்காமல் உனது உயிருக்கு உத்திரவாதம் கிடையாது.எதை எதையோ நடைமுறை வாழ்க்கைக்கு பயன்படுத்தும் நிலையில் ,இந்த நோயை கட்டுப்படுத்தும் நிலையில் கிருமிநாசினி களை பயன்படுத்துவதும் உடலில் நல்ல ஊட்டச்சத்துக்களை சாப்பிடுவதும் இதன் மூலம் உடம்பில் ஸ்டெமினாவை பூஸ்ட் செய்வதும் மக்கள் பழகி கொள்ள வேண்டும்.போதை வஸ்துக்களை சாப்பிடுபவர்களின் மீது நோய் தொற்று பரவுதல் வாய்ப்பு உள்ள நிலையில் குடியை குறைக்கும் சூழலை நோய் கொண்டுவந்து உள்ளது.சில பழக்கவழக்கங்களை மாற்ற மாட்டேன் என்று சொல்பவர்களின் வாழ்க்கை கேள்விக்கு உரியது. ஐம்பது நாட்கள் புரியும் வகையில் விழிப்புணர்வை கொடுத்தாகிவிட்டது. இதற்கு மேல் நாட்டின் பொருளாதாரத்தினை சீரழிந்து மேலும் அவகாசம் கொடுத்து உனக்கு புத்திமதி கொடுக்க வேண்டியதில்லை. கடவுள் உனது பழக்கவழக்கத்தினை மாற்றினால் தான் உனக்கு உயிர் கொடுப்பார் என்று நம்புகின்றேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X