நிவாரணம் 2020!ரூ.20 லட்சம் கோடிக்கான முதல் தவணை வெளியீடு| Nirmala Sitharaman announces major stimulus package to fight covid-19 | Dinamalar

நிவாரணம் 2020!ரூ.20 லட்சம் கோடிக்கான முதல் தவணை வெளியீடு

Updated : மே 13, 2020 | Added : மே 13, 2020 | கருத்துகள் (35)
Share
புதுடில்லி :'கொரோனா' வைரஸ் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய்க்கான முதல் தவணை அறிவிப்பை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். இன்றும் அது தொடரும் என, அவர் அறிவித்துள்ளார். சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன், சலுகை, வசதிகளை அறிவித்துள்ள அவர், வருங்கால வைப்பு நிதிக்கான அரசின் உதவி தொடரும்
Nirmala Sitharaman, stimulus package, fight covid-19, Union Finance Minister, relief package, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown, நிவாரணம் 2020! ரூ.20 லட்சம் கோடிக்கான முதல் தவணை வெளியீடு

புதுடில்லி :'கொரோனா' வைரஸ் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்கும் வகையில், 20 லட்சம் கோடி ரூபாய்க்கான முதல் தவணை அறிவிப்பை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார்.

இன்றும் அது தொடரும் என, அவர் அறிவித்துள்ளார். சிறு, குறு நிறுவனங்களுக்கு கடன், சலுகை, வசதிகளை அறிவித்துள்ள அவர், வருங்கால வைப்பு நிதிக்கான அரசின் உதவி தொடரும் என்றார். ரியல் எஸ்டேட் துறையினருக்கு சலுகை, வருமான வரியில், 25 சதவீதம் குறைப்பு, ரிட்டர்ன் தாக்கல்செய்ய கால அவகாசம் என, பல்வேறு தரப்பினருக்கு நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால், பல்வேறு துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொழில் துறை வேகம் எடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள்

எடுக்கப்பட்டுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம், 'டிவி' மூலம், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, 'பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார திட்டங்கள் அறிவிக்கப்படும்' என்றார். 'இந்த அறிவிப்புகளை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்து வரும் நாட்களில் வெளியிடுவார்' என்றும் கூறினார்.

அதன்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர், அனுராக் தாக்குர் மற்றும் அதிகாரிகள், நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:'சுய சார்பு பாரதம்' என்ற கோஷத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் முன்னெடுத்தார். இது, நம் நாட்டை, உலகத்தில் இருந்து தனிமைப்படுத்துவதற்காக அல்ல; உலக நாடுகளில், நம் நாடு சிறந்த இடத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்கான கோஷம்.
இந்த இலக்கை நோக்கி, கடந்த சில ஆண்டுகளாகவே, பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை துவக்கினார். மக்களுக்கு நேரடி பணப் பலன், விவசாயிகளுக்கு நன்மைகள் கிடைப்பது, 'மேக் இன் இந்தியா' போன்ற, பல முற்போக்கு நடவடிக்கைகள், இந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டன.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அந்த வகையில், இந்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பார்லிமென்ட் கூட்டத் தொடர் முடிந்த நிலையில், உடனடியாக ஊரடங்கு அமலுக்கு வந்தது.
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொள்வதற்காக, பிரதமர் மோடி, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, விரிவான தொலைநோக்கு திட்டத்தை
உருவாக்கியுள்ளார்.அதற்கு முன்னதாக, பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்தோம். நாடு முழுதும், 41 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில், 52 ஆயிரத்து, 606 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. வருமான வரி செலுத்துவோருக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய், 'ரீபண்ட்' தரப்பட்டது. இவ்வாறு பல்வேறு தரப்பினருக்கு, பல்வேறு திட்டங்களை அறிவித்தோம்.
அந்த வரிசையில், பிரதமரின் தொலைநோக்கு திட்டமான, சுயசார்புடையதாக, நம் நாட்டை உருவாக்க, பல்வேறு திட்டங்களை, தொடர்ந்து அறிவிக்க உள்ளோம். இந்த அறிவிப்புகள், அடுத்து வரும் நாட்களிலும் தொடரும்.தற்போது, முதல்கட்டமாக, 15 திட்டங்களை அறிவிக்கிறோம்.


குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்இந்தப் பிரிவினருக்கு ஆறு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

1. இந்தத் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இடுபொருட்கள் வாங்குவது முதல், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது, தொழிலை மீண்டும் துவங்குவது வரை பல பிரச்னைகள் உள்ளன. அதையடுத்து, அவர்களுக்கு உள்ள மொத்த கடனில், 20 சதவீதம், சிறப்புக் கடனாக வழங்கப்படும் .இவ்வாறு, ௩ லட்சம் கோடி ரூபாய்க்கு, பிணையில்லா கடன் வழங்கப்படும். மொத்தம், 25 கோடி ரூபாய் வரை கடன் பாக்கி வைத்துள்ள, 100 கோடி ரூபாய் விற்றுமுதல் செய்யும் நிறுவனங்கள், இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மொத்தம், நான்கு ஆண்டுகளுக்கானது இந்தக் கடன். அதில், முதல் ஆண்டில் அசலை செலுத்த வேண்டியதில்லை. வரும், அக்., 31 வரை, இந்தக் கடன் வசதியைப் பெறலாம். இதன் மூலம், 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும்.

2. ஏற்கனவே கடுமையான கடனில் பாதிக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய், கூடுதல் கடனாக வழங்கப்படும். இதற்காக சிறப்பு நிதித் தொகுப்பு உருவாக்கப்படும். இதன் மூலம், இரண்டு லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். வாராக் கடனில் உள்ள நிறுவனங்களும், இதைப் பெறலாம்.

3. ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வரும் நிறுவனங்கள், விரிவுபடுத்த நிதியில்லாமல் திண்டாடும் நிலையும் உள்ளது. இதற்காக, 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, நிதித் தொகுப்பு உருவாக்கப்படும். இதன் மூலம், 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை, முதலீடுகள் இந்தத் துறையினருக்கு கிடைக்கும்.

4. எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் தொகுப்பில், யார் யார் சேர்க்கப்படுகின்றனர் என்பதில் திருத்தம் செய்யப்படுகிறது. அதாவது, அதிக தொகை முதலீட்டாளர்களும் சேர்க்கப்படுகின்றனர்; மொத்த விற்றுமுதலை கூடுதலாகப் பெற்றுள்ளவர்களும் சேர்க்கப்படுகின்றனர். உதாரணத்துக்கு, நேற்று வரை, 25 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்பவையே, குறு நிறுவனங்களாகக் கருதப்பட்டன; இன்று முதல், 1 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யும் நிறுவனங்களும், குறு நிறுவனங்களாகக் கருதப்படும். அதேபோல், 5 கோடி ரூபாய் வரை விற்றுமுதல் உள்ள நிறுவனங்களும், குறு நிறுவனங்களாகக் கருதப்படும். இது சேவைத் துறையினருக்கும் பொருந்தும்.இந்த இரு துறையினரும், இனி பல்வேறு சலுகைகளைப் பெற முடியும்.

5. அரசின், 200 கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு, இனி சர்வதேச, 'டெண்டர்' கோரப்படாது. இதன் மூலம் இந்தத் துறையினர், அரசு டெண்டரை அதிக அளவில் பெற முடியும். இது சுய சார்புக்கான நடவடிக்கை; மேலும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தையும் ஊக்குவிக்கும்.

6 . வைரஸ் பாதிப்பு உள்ளதால், தொழில் கண்காட்சிகள் உள்ளிட்டவை நடப்பதற்கு, சாத்தியம் இல்லை.எனவே, சிறு, குறு நிறுவனங்கள், தங்கள் பொருட்களை இ- மார்க்கெட்டிங் எனப்படும், 'ஆன்லைன்' வாயிலாக விற்பனை செய்ய வாய்ப்பு வழங்கப்படும். மேலும், இந்தத் துறையினருக்கு அரசு நிலுவை வைத்துள்ள அனைத்து தொகைகளும், 45 நாட்களுக்குள் அளிக்கப்படும்.


வருங்கால வைப்பு நிதி1.பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதியில், ஏற்கனவே சில சலுகை அளிக்கப்பட்டது.அதாவது, 100 ஊழியர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்களில், மாத சம்பளம், 15 ஆயிரத்துக்கு குறைவாக பெறுவோர், 90 சதவீதம் இருந்தால், நிறுவனம் செலுத்த வேண்டிய, 12 சதவீத தொகை மற்றும் ஊழியருக்கான, 12 சதவீத தொகையை, மத்திய அரசே ஏற்கும் என, அறிவித்திருந்தோம்.அதன்படி, மார்ச், ஏப்., மே மாதம் வரை வழங்கியுள்ளோம். இதன் மூலம், 3.67 லட்சம் நிறுவனங்களைச் சேர்ந்த, 72.2 லட்சம் தொழிலாளர்களுக்காக, 2,500 கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. வரும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தொகையையும், மத்திய அரசே செலுத்தும்.

2. பி.எப்., திட்டத்துக்காக தற்போது, நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து, தலா, 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அடுத்த மூன்று மாதங்களுக்கு, 10 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும்; நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். இதன் மூலம், நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களிடம் கூடுதல் பணப் புழக்கம் இருக்கும்.
நாடு முழுதும், 6.5 லட்சம் நிறுவனங்கள் மற்றும் 4.3 கோடி ஊழியர்கள் கையில், 6,750 கோடி ரூபாய் பணப் புழக்கம் இருக்கும்.மத்திய மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களுக்கு, இந்தச் சலுகை
கிடையாது.


வங்கி சாரா நிதி நிறுவனங்கள்1.வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 30 ஆயிரம் கோடி ரூபாய், சிறப்பு பணப் புழக்க திட்டம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை பங்கு சந்தையில், இந்த நிறுவனங்களின் கடன் பத்திரங்களை, மத்திய அரசு வாங்கும். அதற்கு, மத்திய அரசு முழு பொறுப்பாகும். இதனால், இந்த நிறுவனங்களிடம் பணப் புழக்கம் அதிகரிக்கும். இவர்களிடம் கடன் பெறும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, இந்தச் சலுகை, பேருதவியாக இருக்கும்.

2. குறைந்த மதிப்பீடு உள்ள நிதி நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ஏற்கனவே உள்ள, பகுதி கடன் உறுதி திட்டம் தொடரும். இதன்படி, அந்த நிறுவனங்களின், முதல், 20 சதவீத இழப்பை, மத்திய அரசு ஏற்கும். இந்த திட்டத்தால், இந்த நிறுவனங்களிடம், 45 ஆயிரம் கோடி ரூபாய் பணப் புழக்கம் ஏற்படும்.


மின் பகிர்மான நிறுவனங்கள்'டிஸ்காம்' எனப்படும் மின் பகிர்மான நிறுவனங்கள், பெரும் நிதிச் சுமையில் உள்ளன. மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு உரிய தொகையை அவற்றால் செலுத்த முடியவில்லை. இது ஒரு சுழற்சி போல், அனைத்து தரப்பையும் பாதிக்கிறது. இப்படிப்பட்ட நிலுவைத் தொகை, 94 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது. இத்தொகையைச் செலுத்தும் வகையில், 'டிஸ்காம்' நிறுவனங்களுக்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்படும். இதற்காக, 'டிஸ்காம்' நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடி, மின் நுகர்வோருக்குக் கிடைப்பதை, மின் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.


கான்ட்ராக்டர்கள்ரயில்வே, சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, மத்திய பொதுப் பணித்துறை உட்பட அனைத்து அரசு அமைப்புகளுக்கான வேலைகளையும் மேற்கொள்ளும் கான்ட்ராக்டர்களுக்கான பணிகள், ஆறு மாதங்
களுக்கு நீட்டிக்கப்படுகின்றன. பணிக் காலமும், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது; கூடுதல் கட்டணம், அபராதம் ஏதும் இதற்குக் கிடையாது. கான்ட்ராக்டர்களிடம் பணப் புழக்கம் இருக்கும் வகையில், அவர்கள் அளித்துள்ள வங்கி உத்தரவாதத் தொகையில் ஒரு பகுதி, அவர்களிடம் கொடுக்கப்படும்.


ரியல் எஸ்டேட்மார்ச் மாதத்துடன் முடிக்க வேண்டிய கட்டுமானத் திட்டங்கள், கொரோனாவால் தாமதப்பட்டுள்ளதால், 'கடவுளின் செயல்' என்று கருதி, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
இது குறித்து, மாநில அரசுகள், சுயமாக அறிவிப்புகளை வெளியிடலாம். இது தொடர்பாக, மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை, மாநிலங்களை அறிவுறுத்தும். புதிய பணிக்களுக்கான அனுமதி மற்றும் நிறைவு சான்றிதழ் ஆகியவை, ஆறு மாதங்களுக்கு நீட்டித்து வழங்கப்படும்.


வருமான வரி சீர்திருத்தம்1.சம்பளதாரர் அல்லாதோருக்கான, டி.டி.எஸ்., எனப்படும் வருமான வரி பிடித்தம், 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. இது, உடனடியாக அமலுக்கு வருகிறது. வரும், 2021, மார்ச், 31 வரை நடைமுறையில் இருக்கும். இதன் மூலம், 50 ஆயிரம் கோடி ரூபாய் பணம் புழக்கத்தில் இருக்கும்.

2.தொண்டு நிறுவனங்கள், வர்த்தகமல்லாத நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கான அனைத்து வரி, 'ரீபண்ட்'களும், உடனடியாக வழங்கப்படும்.

3.நடப்பு, 2019- 2020 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலம், அந்தந்தப் பிரிவினருக்கு ஏற்ப, ஜூலை, 31 மற்றும் அக்டோபர், 31 ஆக உள்ளது. இது, நவ., 30 வரை நீட்டிக்கப்படுகிறது. அதேபோல், வரி தணிக்கைக்கான காலம், செப்., 30ல் இருந்து, அக்., 31 வரை நீட்டிக்கப்படுகிறது.

4.இதைத் தவிர, செப்., 30ல் முடிவடையும் வரி மதிப்பீட்டுக் காலம், டிச., 31 வரையும்; 2021, மார்ச், 31ல் முடியும் மதிப்பீட்டுக் காலம், 2021, செப்., 30 வரையும் நீட்டிக்கப்படுகிறது. வரி தொடர்பான பிரச்னைகளுக்கு சுமுகத் தீர்வு காணும் திட்டம், இந்தாண்டு, டிச., வரை நீட்டிக்கப்படுகிறது. இதற்கு கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


ஊக்குவிக்கும்!நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள், எம்.எஸ்.எம்.இ., எனப்படும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சந்தித்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது. இது தொழில் துறைக்கான பணப்புழக்கத்தை அதிகரித்து, அவர்களுடைய போட்டியிடும் திறனை ஊக்குவிக்கும்.நரேந்திர மோடி, பிரதமர்


வலுவாக்கும்!இந்த பொருளாதார அறிவிப்புகளுக்காக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டிலேயே, உத்தர பிரதேசத்தில்தான், அதிகளவில், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் உள்ளன. இந்த அறிவிப்பால், மாநிலத்தில் உள்ள, மூன்று கோடி மக்கள் பயனடைவர். இத்துடன், மாநில அரசின் சார்பிலும், 36 ஆயிரம் நிறுவனங்களுக்கு, 2,000 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட உள்ளது.யோகி ஆதித்யநாத்உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,


ஏமாற்றம் அளிக்கிறது!லட்சக்கணக்கான ஏழைகள், பசியால் வாடும், வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. பிரதமர் தெரிவித்த, 20 லட்சம் கோடி ரூபாயில், 3.6 லட்சம் கோடி ரூபாய்க்கு மட்டுமே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மீதமுள்ள, 16.4 லட்சம் கோடி ரூபாய் எங்கே? இந்த நேரத்தில், தொழிலாளர் சட்டங்களில், பா.ஜ., ஆளும் மாநில அரசுகள் திருத்தம் செய்வது,
தவறான நடவடிக்கை.சிதம்பரம்முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,


மிகப் பெரிய பூஜ்யம்!இந்த கண்துடைப்பு அறிவிப்புகள் மூலம், மக்களை முட்டாளாக்க பார்க்கின் றனர். அமைப்பு சாரா நிறுவனங்கள், பொது செலவினம், வேலைவாய்ப்பை பெருக்க எந்த அறிவிப்பும் இல்லை. மாநில அரசுகளுக்கும் எந்த அறிவிப்பும் இல்லை. இது ஒரு மிகப் பெரிய பூஜ்யம்.மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,


நிறைய பயன்!சிறு, குறு தொழில்களுக்காக, பிணையம் இல்லாமல் கடன் வழங்குவதாக அறிவித்தது முக்கியமான அம்சம். நிறுவனங்களின் புனர்வாழ்வுக்காக, 20 ஆயிரம் கோடி ஒதுக்கியதன் மூலம் இரண்டு லட்சம் சிறு, குறு தொழில்கள் பயன்பெறும்.கே.பி.முருகன், முன்னாள் தலைவர், மடீட்சியா, மதுரை.


வரவேற்கிறோம்!நலிவடைந்த தொழிலாளர்களுக்கு கடன் வசதி, வருங்கால வைப்பு நிதியை, மூன்று மாதங்களுக்கு அரசு செலுத்துவது ஆகியவை, ஆறுதலான விஷயங்கள். ஏற்றுமதியாளர்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோருக்கு பயன்
தரும் வகையிலான அறிவிப்புகள் வெளிவரும் என நம்புகிறோம். கே.கே.தினேஷ், பொதுச் செயலர், சவுராஷ்டிரா தொழில் வர்த்தக சங்கம், மதுரை.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X