ஆப்பரேஷன் தள்ளிவைப்பு: நோயாளிகள் பரிதவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆப்பரேஷன்' தள்ளிவைப்பு: நோயாளிகள் பரிதவிப்பு

Updated : மே 15, 2020 | Added : மே 13, 2020
Share
 'ஆப்பரேஷன்' தள்ளிவைப்பு: நோயாளிகள் பரிதவிப்பு

சென்னை,: கொரோனா பரவல் காரணமாக, அரசு மருத்துவமனைகளில், அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படுவதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில், கொரோனா பாதிப்பு, மார்ச்சில் ஆரம்பித்தது. இதனால், மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை மற்றும் டாக்டர்கள் பற்றாக்குறை காரணமாக, அவசர அறுவை சிகிச்சைகள் தவிர, மற்ற அறுவை சிகிச்சைகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, இதய ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சீர்செய்யும், 'ஆஞ்சியோ பிளாஸ்டி' சிகிச்சை, சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில், தினமும், 100க்கும் மேற்பட்ட அளவில் செய்யப்பட்டன. இப்போது, ஒரு மாதமாக நடக்கவில்லை.

தற்போது, கொரோனா பாதிப்பு அதி தீவிரமடைந்துள்ளது. எனவே, தொடர்ந்து, அனைத்து அறுவை சிகிச்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அவசர அறுவை சிகிச்சைகள் மட்டுமே நடக்கின்றன. இதனால், பல நோயாளிகள், உரிய நேரத்தில், அறுவை சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.இது குறித்து, இதய நோயாளி ஒருவர் கூறியதாவது:இதய ரத்தநாள அடைப்பை சரி செய்ய, ஆஞ்சியோ பிளாஸ்டி செய்வதற்கு, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு, ஒரு மாதத்திற்கு பின் வரும்படி கூறியதுடன், மாத்திரை மட்டும் வழங்கினர்.

வலி அதிகமானதால், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றேன்; அங்கும், அதே நிலை தான். மாத்திரை சாப்பிடும் நேரம் மட்டுமே, வலி இல்லாமல் இருக்கிறது. மற்ற நேரங்களில், உயிர் போகும் அளவிற்கு வலி ஏற்படுகிறது. என்னைப் போன்ற நோயாளிகளை, தனி கவனத்துடன் கவனிக்க வேண்டும் என, அரசு கூறுகிறது. மேலும், எனனைப் போன்றவர்கள், கொரோனாவால் பாதிக்கப்படும் போது, மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழப்பதும் தொடருகிறது. எனவே, ஆஞ்சியோகிராம் மற்றும் ஆஞ்சியோ பிளாஸ்டி போன்றவற்றை செய்ய, அரசு மருத்துவமனைகளுக்கு, சுகாதாரத்துறை உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X