இந்தியா என்ற யானை கொரோனா வைரசால் சோர்ந்து படுத்துவிட்டது. அதற்குத் தக்கச் சிகிச்சை கொடுத்து, சத்தான உணவு கொடுத்து முன்பு இருந்ததைவிட நன்றாக உழைக்க வைக்கவேண்டும்.
அதற்காகத்தான் இந்த 20 லட்சம் கோடி செலவு.யானைக்கு எப்படித் தீனி போடுவது? பயிர் விளைந்திருக்கும் வயலில் யானையை மேயவிடலாம். அனால் அது சாப்பிடும் தானியத்தைவிட அதன் கால்பட்டு அழியும் தானியம்தான் அதிகமாக இருக்கும். அந்தத் தானியத்தை அறுவடை செய்து நெல்லை அரிசியாக்கி அரிசியைச் சோறாக்கி சமைத்துப் போட்டால் யானை பல நாட்களுக்குவயிறாரச் சாப்பிடும். சாப்பிட்ட பின் இன்னும் உற்சாகமாக வேலை செய்யும். அதைத்தான் அரசு செய்ய முயன்றிருக்கிறது.
முதுகெலும்பை பலப்படுத்த முயற்சி
இருபது லட்சம் கோடியைக் கொடுப்பது என்று முடிவு செய்தாகி விட்டது. அதை அப்படியே மக்களிடம் பிரித்துக் கொடுத்துவிட்டால் என்னவென்று ஒரு மகானுபாவர் சொன்னார். அப்படிச் செய்தால் ஆளுக்கு 15,384 ரூபாய் 62 காசு கிடைக்கும். ஆனால் பணவீக்கம் பத்தே நொடிகளில்
அந்தப் பணத்தை முழுங்கி ஏப்பம் விட்டுவிடும்.பணக்காரர்கள் வீட்டுக் கல்யாணத்தில் செய்வதுபோல் பணத்தை வாரி இறைக்காமல் பதவிசாகச் செலவு செய்து நாட்டின் முதுகெலும்பைப் பலப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.நன்றாக இயங்கும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் உடனே செயல்பட மூன்று லட்சம் கோடிவரை பிணைச் சொத்து இல்லாத கடன் வசதி, நலிவுற்றிருக்கும் நிறுவனங்களை மீண்டெழச் செய்ய 20,000 கோடி ரூபாய் கடன் வசதி, வளர வாய்ப்புள்ள நிறுவனங்களில் 50,000 கோடி முதலீடு, அரசு வாங்கும் பொருட்களில் 200 கோடிரூபாய் வரையிலான டெண்டர்களில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அதிகப்
பங்களிப்பு என்று சலுகை மழையே பொழிந்திருக்கிறார் நிதியமைச்சர்.
சலுகைகள் குவிப்பு
சிறு, குறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் எவை எவை என்பதை அவை செய்திருக்கும் முதலீடுகளை வைத்தே வரையறுக்கிறார்கள். அந்த வரையறைகளை இன்னும் விரிவுபடுத்தி இன்னும் பல நிறுவனங்களை இந்தப் போர்வைக்குள் கொண்டுவந்து சலுகைகளைக் குவித்திருக்கிறார்கள்..
வருங்கால வைப்பு நிதி விவகாரத்தில் சலுகைகள், மின்சாரம் வினியோகம் செய்யும் நிறுவனங்களுக்கு 90,000 கோடி பணம், வங்கிகள் போகத் தனியார் நிதி நிறுவனங்களுக்கும், வீட்டுக் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கும் சலுகை களைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். குறைந்து போயிருக்கும் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யும் முயற்சிகள் இவை. அரசு ஒப்பந்தக்காரர்களுக்கும் ரியல் எஸ்டேட்டுக்காரர்களும் ஒத்துக்கொண்ட வேலையை முடிக்க ஆறுமாதம் அதிக
அவகாசம் கொடுத்திருக்கிறார்கள்.வருமான வரிப் பிடித்தத்தை 25 சதவிகிதம் குறைத்திருக்கிறார் நிதியமைச்சர். 10 சதவிகிதம் பிடிக்க வேண்டிய இடத்தில் 7.50 சதவிகிதம் பிடித்தால் போதும். இதனால் நாட்டில் பணப்புழக்கம் 50,000 கோடி அதிகமாகும். வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி தேதிகளை நவம்பர் 30, 2020 வரை தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.யானை சோர்ந்துவிட்டது
என்பதைப் பார்த்த மன்னர் உடனே நடவடிக்கை எடுத்துவிட்டார். இந்த நடவடிக்கைகளால் பலன் கிடைக்குமா? அது யானைக்கு உணவு கொடுக்க வேண்டிய பாகன்கள் கையில் தான் இருக்கிறது.
மன்னர் தரச் சொன்ன உணவை பாகன்கள் தாமதிக்காமல், ஊழல் செய்யாமல், கலப்படம் செய்யாமல் கொடுக்கவேண்டும். அப்படிச் செய்தால் நம் நாடு நிஜமாகவே தன்னிறைவு பெற்றுவிடும்.கி.மு., - கி.பி. என்பது போய் கொ.மு., - கொ.பி. (கொரோனாவுக்கு முன் - கொரோனாவுக்குப் பின்) என்ற புது வரலாறு வந்துவிட்டது. கொ.பி.யில் உலகமே அண்ணாந்து பார்க்கும் வல்லரசாக இந்தியா உயர்ந்து நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கு
இருக்கிறது.-ஆடிட்டர் ஸ்ரீதரன் மதுரை varalotti@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE