சென்னை, மே 14-தமிழகத்தில், 8 லட்சம் ஏக்கரில், நெல் சாகுபடி நடக்க வாய்ப்பு உள்ளதாக, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில், 73 ஆயிரம் ஏக்கரில், கோடை பருவ நெல் சாகுபடி நடந்து வருகிறது. இதற்காக, ஊரடங்கு விதிகளில், விவசாயிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளை, விவசாயிகளின் வீடுகளுக்கே எடுத்து சென்று, வேளாண் துறையினர் வழங்கியுள்ளனர். இதைத் தொடர்ந்து, ஜூன் மாதம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை பருவ நெல் சாகுபடி துவங்க உள்ளது.
இப்பருவத்தில், இம்மாவட்டங்களில், 2.58 லட்சம் ஏக்கரில், நெல் சாகுபடி நடக்க உள்ளது. மற்ற மாவட்டங்களில், கார், சொர்ணவாரி ஆகிய, இரண்டு பருவங்களில், 5.44 லட்சம் ஏக்கரில், நெல் சாகுபடி செய்யப்பட உள்ளது. மொத்தமாக, மாநிலம் முழுதும், 8.02 லட்சம் ஏக்கரில், நெல் சாகுபடி நடக்க வாய்ப்பு உள்ளதாக, வேளாண் துறையினர் கூறுகின்றனர். பல மாவட்டங்களில், சாகுபடிக்கு தேவையான நிலத்தடி நீராதாரம் திருப்திகரமாக உள்ளது. தென் மேற்கு பருவ மழை, இம்மாதம் துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சாகுபடிக்கு தேவையான நீர், தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளதாக, வேளாண் துறையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE