கொரோனாவுக்கு முன்னும்- கொரோனாவுக்கு பின்னும்

Added : மே 14, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 கொரோனாவுக்கு முன்னும்- கொரோனாவுக்கு பின்னும்

கொரோனா ஊரடங்கில் உழன்ற இத்தனை நாள் போனது போகட்டும். இனி எப்போது நிலைமை சீரடையும் என்பதே எல்லோருடைய ஏக்கமாக உள்ளது.கொரோனா வருவதற்கு முன் நாடும் வீடும் இருந்த நிலை வேறு. கொரோனா வந்ததற்கு பின் இது முற்றிலும் தாறுமாறு.அதிலும் குறிப்பாக அலுவலகங்கள், ஊழியர்கள், வியாபாரிகள் இந்த இரண்டு மாத காலத்துக்குள் என்னென்ன மாற்றங்களை கண்டுள்ளார்கள்?


வேலைவாய்ப்பு இல்லைசிறு குறு பெரு வணிகர்கள் நிறுவனங்கள் முற்றிலும் முடங்கிப் போய் கிடக்க தனியார் நிறுவனங்களிலோ புதிதாக வேலை வாய்ப்புகள் உருவாகும் சாத்திய கூறுகள் அனைத்தும் அறுபட்டு போயுள்ளது. ஆக அனைத்து தரப்புகளிலுமே முக்கிய செலவுகளை குறைக்க வேண்டியிருக்கும்.அலுவலகத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் நிறுவனத்தின் பொருளைக் கொண்டே வேலை செய்தது மாற்றம் அடைந்து, நம் பொருளைக் கொண்டே எப்போது வேண்டுமானாலும் பணி செய்யலாம் எங்கிருந்து வேண்டுமானாலும் பணி செய்யலாம் என்ற நிலை வந்துள்ளது.
முன்பு தினசரி வரையறுத்து வைக்கப்பட்ட திட்டப்பணிகள் இன்றோ நித்தம் திருத்தியமைக்கப்பட்டபடி உள்ளன. முன்பு தகவல் சேகரிப்புகளில் குவிந்த கவனம் இன்று தகவல் பரிமாற்றத்தில் உயிர் பெறுகிறது. அறிவு சார்ந்த யோசித்தலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தைவிட இக்கடின காலத்தை மாற்றி அமைக்க இடம் கொடுக்கிற முயற்சிகளையே ஊக்குவிக்கிறார்கள். இப்படி ஊழியர்களின் நிலை ஊசலாடிக்கொண்டு இருக்கிறது.


விற்பனை இல்லைசில நிறுவனங்களில் விற்பனையே இல்லை. ஆனாலும் அவர்கள் ஊழியருக்கு சம்பளம் கொடுத்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடி நிலை. அரசு பணியாளர்களுக்கும் அகவிலைப்படி முதல் ஈட்டிய விடுப்பு துய்ப்பது வரை எண்ணற்ற கெடுபிடி உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது. பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய உத்தரவிட்டிருப்பதால் ஊதியக் குறைப்புக்கு சாத்தியங்கள் உருவாகியுள்ளன. இதனால் ஊக்கத்தொகை, பதவி உயர்வுக்கான சாத்தியங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பெற்றுக் கொண்டிருந்த சம்பளத்துக்கேற்ப செலவுகளை கட்டமைத்துக் கொண்டு வாழ பழகியிருந்து விட்டு, பின் அது குறைக்கப்படும்போது குறைந்த வருமானத்துக்கு ஏற்ப வாழக்கூடிய துர்பாக்கியமான சூழல் ஏற்படுகிறது. ஒரு சராசரி குடிமகன் தான் பெற்ற கடனுக்கேற்ப செலுத்த வேண்டிய மாதத்தவணைகளை செலுத்தியே ஆக வேண்டும். அது போக மீதம் இருப்பதை வைத்தே குடும்பம் நடத்த வேண்டும். அதனால் நிச்சயம் செலவுகளை குறைத்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறான்.


தேவையற்ற செலவுகள்செலவுகளை குறைக்க வேண்டி வரும் போது எவையெல்லாம் அத்தியாவசியம் எவையெல்லாம் அநாவசியம் என நம் மனம் வகை பிரிக்க தொடங்கிவிடும். நம் அலைபேசியில் இடப்பற்றாக்குறை ஏற்படும்போது ஒரு மாதமாக உபயோகப்படுத்தாத செயலிகளை அழிக்க நம் ஆணைக்காக தொடுதிரை காத்திருக்கும். அது போல வீடுகளில் பார்வையைச் சுழற்றினால் ஒரு வருடத்திற்கும் மேலாக நாம் உபயோகிக்காத பொருட்கள் எல்லாமே அநாவசியமாய் வாங்கிக் குவித்த பொருட்களாகத்தான்
கண்ணுக்கு தெரியும். எப்போதோ தேவைப்படும் ஒரு நாளுக்காக வாங்கப்பட்டவையாக இருக்கும். அது இல்லாமலும் கூட நம்மால் இயல்பாக வாழ முடியும். சில பொருட்களை சமூக அந்தஸ்துக்காக வாங்கிக் குவித்திருப்போம். மலிவாக கிடைக்கிறது என்பதற்காக சில, நேரத்தை மிச்சப்படுத்துகிறது என்பதற்காக சில என இப்படி ஏதோவொரு காரணத்துக்காக வாங்கியிருப்போம். இனி அது போன்ற பொருட்களை அவசியத் தேவையா என சீர்துாக்கிப் பார்த்து வாங்க வேண்டிய காலத்தில் இருக்கிறோம்.மாதா மாதம் துணி எடுத்த நிலை மாறி பழையபடி பண்டிகைகளுக்கு துணிக்கடை பக்கம் போனால் போதும் எனும் நிலை ஏற்படலாம். கட்டுமான பணிகள், வீட்டுக்கு வண்ணமடித்தல் உள்ளிட்ட சில வேலைகள் தள்ளிப்போகும் வாய்ப்புகள் உண்டு. வீட்டிலிருக்கும் தொலைக்காட்சியின் அளவு சிறியதாக இருப்பதாக பிள்ளைகள் முனகினால் உடனே புதியதாய் பெரிய தொலைக்காட்சி வாங்கியிருப்போம். இனி புதிதாக ஒரு பொருளை வாங்க பெரிதும் யோசிக்க வேண்டியிருக்கும்.


கொண்டாட்டங்கள் இல்லைஉலகமயமாக்கலின் பிரதிபலிப்பால், விலை குறைவாகக் கிடைத்த பன்னாட்டு பொருட்களை வாங்கும் நிலை பரவலாகியிருந்தது. இனி மக்களின் வாங்கும் சக்தி குறைவதனால் அனைத்திலும் இது எதிரொலித்து ஒரு தேக்க நிலையை உருவாக்கும்.
இதெல்லாம் நடுத்தர மக்களுக்கே சிரமம் எனும் போது கொரோனாவினால் முற்றிலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் சாமான்ய மக்களுக்கு இது அளவிட முடியாத வேதனை. அன்றாட உணவுக்கே அடுத்தவர் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலை. அன்றாடம் உழைத்து கூலி பெற்று குடும்பம் நடத்திய நிலை மாறியுள்ளது.
ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை எனும் கதையாக யாரை யார் தேற்றுவது எனும் நிலைதான் சில காலத்துக்கு ஓடும் போலிருக்கிறது.இக்கொடிய காலத்தில் கொண்டாட்டங்களுக்கு, திருவிழாக்களுக்கு, சுபநிகழ்வுகளுக்கு வாய்ப்பு இல்லை. எண்ணற்ற திருவிழாக்கள் ஒவ்வொரு ஊர்தோறும் ரத்து
செய்யப்பட்டுவிட்டது. எண்ணற்ற மக்கள் அது சார்ந்து பொருளீட்டி அடுத்த சில மாதங்களுக்கான வாழ்வுக்கு உரம் ஏற்ற இந்த திருவிழாவை நம்பியே இருந்திருப்பர். அதெல்லாம் ஒரு கனாக்காலம் என்று சொல்லும்படியாகிப் போன தவக்காலத்தில் வாழ்கிறோம்.திருவிழா சமயங்களில் கொண்டாட்டத்துக்கு இடையே எண்ணற்ற தான தர்மங்கள் நடைபெறும். திருவிழா நடைபெறாத இன்றைய சூழலில், இருப்பவர்கள் இல்லாதோருக்கு உதவி செய்வது இறைவனுக்கு செய்யும் சேவை.


விவசாயிகளின் உழைப்புஇந்த இக்கட்டான காலக்கட்டத்தில் மக்கள் ஒன்றை அறிந்து கொண்டார்கள். வீட்டில் இருந்தாலும் உண்ண உணவு வேண்டுமே. அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் காய்கறிகளையும், பழங்கள், மளிகை பொருட்களையும் வாங்கி அடுக்கிக்கொள்ள பறந்தனர். விவசாய பணிகளை வழக்கம் போல செய்யலாம் என துவக்கத்திலேயே அரசு பச்சை கொடி காட்டியது. விவசாயிகள் அயராத உழைப்பால் தான் அன்றாடம் நாம் பசியாறிக் கொண்டிருக்கிறோம். கொரோனா எதிர்ப்பு போராளிகளைப் போலவே அவர்களும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் விவசாயம் சார்ந்த தொழில்களே முன்னிலை பெறும்
என யூகிக்கின்றனர்.


பணக்கார தந்தை2000ல் வெளிவந்து விற்பனையில் சக்கைபோடு போட்ட 'ரிச் டாட் புவர் டாட்' (Rich Dad poor Dad) எனும் புத்தகத்தில் பணக்கார தந்தை எட்டாம் வகுப்பில் தோல்வியடைந்திருப்பார். ஏழை தந்தையோ வாத்தியாராக இருக்கும் பட்ஜெட் குடும்பம். அவரவர் பிள்ளைகள் பள்ளி சுற்றுலா செல்ல வேண்டி தன் தந்தையிடம் பணம் கேட்பர். பணக்கார தந்தை 'உனக்கு எப்போது வேண்டுமோ சொல்; அப்போது தருகிறேன்' என்பார்.

ஏழை தந்தையோ ரொம்ப யோசிப்பார். அப்புத்தகத்தில் 'குறிப்பிட்ட பணத்தில் எப்படி குடும்பம் நடத்துவது என்று யோசித்து அப்படி முடியாத பட்சத்தில் செலவுகளை அடுத்தடுத்த மாதத்துக்கு ஒத்தி வைப்பவர் ஏழை தந்தை என்றும் இன்னின்ன செலவுகளுக்கு ஏற்ப வருமானத்தை பெருக்கிக் கொள்பவர் பணக்கார தந்தை' என்றும் சின்னதாக ஒரு சூத்திரம் சொல்லப்பட்டிருக்கும்.நம் கையிலும் இதுபோன்ற இரண்டு விருப்பத்தேர்வுகள் உண்டு.கொரோனா காலத்தில் இதை செய்வது சற்றே கடினம் என்றாலும் நம் எண்ணங்களை வலிமையாக்கி ஆக்கபூர்வமாய் செயல்பட்டு பொருள் ஈட்டுவோம். நாட்டுக்கு துணை நிற்போம்!பவித்ரா நந்தகுமார்எழுத்தாளர்ஆரணி. 79044 92281Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
17-மே-202006:04:42 IST Report Abuse
 Muruga Vel தமிழ்ல தானே செய்தி .. ஆங்கிலத்துல கருத்து போடறாங்க ..
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
18-மே-202013:48:15 IST Report Abuse
Sathyanarayanan Bhimaraoசில பேருக்கு தமிழில் எழுதத் தெரியாது. இது ஒரு குறையல்ல. ....
Rate this:
Cancel
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
14-மே-202014:13:43 IST Report Abuse
OUTSPOKEN Thanks for your Nice article. May things written in this article are true and such kind of mistakes happens almost in every house. I hope people change hereafter
Rate this:
Cancel
Ramakrishnan Sitaraman - Chennai,இந்தியா
14-மே-202010:21:16 IST Report Abuse
Ramakrishnan Sitaraman Very well written ma. We should bring good practices on austerity perfected by parents. Simple living happy living.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X