சென்னை : ''புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து, அங்கீகரிக்கப்பட்டவர்கள், 'ஆதார்' எண்ணை காட்டி, ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்களை பெற ஆணையிடப்பட்டு உள்ளது,'' என, உணவுத் துறை அமைச்சர், காமராஜ் தெரிவித்தார்.
சென்னை, தலைமை செயலகத்தில், ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பாக, உணவு வழங்கல் துறை, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுடன், நேற்று அமைச்சர் காமராஜ் ஆலோசனை நடத்தினார். பின், அவர் கூறியதாவது:அரிசி கார்டுதாரர்களுக்கு, ஏப்ரலில் தலா, 1,000 ரூபாய் வழங்கவும்; ஏப்., முதல் ஜூன் வரை, அனைத்து கார்டுதாரர்களுக்கும், கூடுதல் அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் ஆகியவை இலவசமாக வழங்கவும், 3,108 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.ஏப்ரலில், 98.77 சதவீதம் பேர், நிவாரண தொகையையும்; 96.3 சதவீதம் பேர் ரேஷன் பொருட்களையும் வாங்கினர்.
இம்மாதத்தில், 12ம் தேதி வரை, 73.37 சதவீதம் பேருக்கு, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.கடந்த, 2019 அக்., முதல், 2020 ஏப்., வரையிலான காலத்தில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களில், 71 ஆயிரம் பேருக்கு, ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால், ரேஷன் கார்டுகள் வழங்க முடியவில்லை.அவர்களின், மொபைல் போன் எண்களுக்கு, ரேஷன் கார்டு குறியீட்டு எண், எஸ்.எம்.எஸ்., தகவலாக அனுப்பப்பட்டு உள்ளது. அவர்கள், இம்மாதம் முதல், சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில், எஸ்.எம்.எஸ்., தகவல் அல்லது 'ஆதார்' அல்லது பதிவு செய்த மொபைல் போன் எண் என, ஏதேனும் ஒன்றை காட்டி, அத்தியாவசிய பொருட்களை பெற்று கொள்ள ஆணையிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE