சென்னை : ''கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது, பொது மக்கள் கையில் தான் உள்ளது,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்தார்.சென்னை, தலைமைச் செயலகத்தில், நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அவர் பேசியதாவது:ஊரடங்கு உத்தரவு, மார்ச், 24ல் பிறப்பிக்கப்பட்டது. அன்று முதல், அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மத்திய-- மாநில அரசுகள் தெரிவித்த வழிமுறைகளை கடைப்பிடித்து, நோய் தடுப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டீர்கள்.தடுப்பது சுலபமல்லவைரஸ் நோய், முதலில் சிறிதளவு பரவி, பின் உயர்ந்து, அப்புறம் தணியும் என, மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அதுபோல் தான் பல்வேறு நாடுகளில் நடந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத் துறை, மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையின்படி, தமிழக அரசு செயல்பட்டதால், தமிழகத்தில், நோய் பரவலை தடுக்க முடிந்துள்ளது.கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவுகிறது. அரசு விதிமுறைகளை, பொது மக்கள் கடைப்பிடித்தால், தொற்று பரவலை தடுக்க முடியும்; மக்கள் ஒத்துழைப்பு இல்லாமல், தடுப்பது சுலபமல்ல.எனவே, அரசின் அறிவிப்பை ஏற்று, மக்கள் செயல்பட வேண்டும். நோய் பரவலை தடுப்பது, பொதுமக்கள் கையில் தான் உள்ளது.மக்களுக்கு தேவையான, அனைத்து வசதிகளையும், அரசு செய்து கொடுக்கிறது. அத்தியாவசிய பொருட்கள், தடையின்றி கிடைக்கின்றன. ஏழை மக்களுக்கு தேவையான பொருட்கள் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இறப்பு விகிதம் குறைவுதமிழகத்தில், உணவு பஞ்சம் என்ற, பிரச்னை இல்லை. வேளாண் பணிகளுக்கு, எந்த தடையும் கிடையாது. மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி, ஊரகப் பகுதிகளில், தொழிற்சாலைகள் இயங்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மாவட்ட கலெக்டர்கள் துரிதமாக செயல்பட்டதால், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைத்தன. மக்கள் ஒத்துழைப்பு அளித்தால், ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு, இயல்பு நிலைக்கு கொண்டு வரலாம்.நோய் பரவலை தடுக்க வேண்டும்; மக்கள் எவ்வித பாதிப்புக்கும் ஆளாகக் கூடாது என்ற எண்ணத்துடன், அரசு செயல்படுகிறது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்கான, அனைத்து நடவடிக்கைகளையும், அரசு எடுத்து வருகிறது.நோய் தடுப்பு பணியில், அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டதால், அதிகளவில் நோய் பரவாமல் தடுக்கும் முயற்சியில், வெற்றி கண்டுள்ளோம். அதே நேரத்தில், நோய் பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதிகமான சோதனைகள் செய்யப்படுவதால், அதிக எண்ணிக்கை வருகிறது. பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கிறோம். முறையான சிகிச்சை காரணமாக, இறப்பு சதவீதம் குறைந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை, 27 சதவீதமாக உள்ளது.அரசு உதவிமக்கள் அச்சப்படத் தேவையில்லை; தொற்று ஏறி தான் இறங்கும். நோய் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்கள் குணமடைய, அரசு உதவி செய்யும்.கோடை காலத்தில், குடிமராமத்து திட்டத்தை, அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த ஆண்டும், குடிமராமத்து திட்டத்தை, கலெக்டர்கள் விரைவாக செயல்படுத்த வேண்டும். மழை காலத்தில், தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிற்கு, விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். டெல்டா பாசன மாவட்டங்களில், நீர்நிலைகளை துார் வாரும் பணிகளை முடுக்கி விட வேண்டும்.அணைகளில் நீர் உள்ளது. எனவே, விரைவாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. மாநிலத்தில் தொழில் சிறக்கவும், விவசாயம் சிறக்கவும், அரசு பாடுபடும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE