பொள்ளாச்சி:பொள்ளாச்சி பழ மார்க்கெட்டில், மாங்காய் மற்றும் மாம்பழங்கள் வரத்து இருந்தும்விற்பனை மந்தமாக உள்ளது. இதனால், கிடைத்த விலைக்கு விற்பனை செய்யவேண்டியதுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.பொள்ளாச்சி பழ மார்க்கெட்டில், அன்னாசி பழம், முலாம் பழம் என பல்வேறு பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மேலும், சீசனுக்கு ஏற்ப பழங்களின் வரத்து இருக்கும்; உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படும்.
ஆண்டுதோறும் மாம்பழ சீசன் காலத்தில், விற்பனை களை கட்டும். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வியாபாரிகள் வாங்கிச் செல்வர். இந்தாண்டு கொரோனா வைரஸ் காரணமாக விற்பனை மந்தமாக உள்ளது. வியாபாரிகள் வருகை இல்லாததால், மாம்பழம் தேக்கமடைந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.வியாபாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி, சேத்துமடை, ஒடையகுளம், உடுமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாம்பழம் மற்றும் மாங்காய் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு, நடுச்சோலை, கிளிமூக்கு, செந்துாரம், பங்கனப்பள்ளி, மல்கோவா, நீலம், அல்போன்சா உள்ளிட்ட மாங்காய், பழ ரகங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.ஆண்டுதோறும் இந்த மாதங்களில், கிலோ, 50 ரூபாய்க்கு மேல் விலை நிர்ணயிக்கப்படும்.
விற்பனையும் விறு, விறுப்பாக இருக்கும்.இந்தாண்டு, கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வியாபாரிகள் வருகை இல்லை. போக்குவரத்து வசதியில்லாததால், வெளியூர் வியாபாரிகள் வருவதில்லை.தினமும், 20 - 30 டன் வரை வரத்து இருந்தாலும், விற்பனை மந்தமாக நடக்கிறது. தற்போது, கிலோவுக்கு, 10 முதல், 20 ரூபாய்க்கு விற்பனை செய்தாலும், வாங்குவதற்கு ஆளில்லை.
மாங்காய் தேக்கமடைந்துள்ள நிலையில், உள்ளூரில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் ஊறுகாய் நிறுவனங்கள் கொள்முதல் செய்கின்றன. தற்போது, பழக்கடைகள் மற்றும்தள்ளுவண்டியில் வியாபாரம் செய்வதற்காக மாம்பழங்களை வாங்கிச்செல்கின்றனர்.விறுவிறுப்பான விற்பனை இல்லாததால், கேட்கும் விலைக்கு கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதால் நஷ்டம் ஏற்படுகிறது. கட்டுபடியான விலை கிடைக்காததால், தோட்டங்களில் மாங்காய் பறிப்பதையே கைவிட்டுள்ளனர். மரத்திலேயே பழுத்துவீணாகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
விலையில்லாததால் கலக்கம்மாங்காய் வியாபாரிகள் கூறுகையில், 'தோட்டங்களில் மாங்காய் பறிக்க, ஆட்கள் போதுமான அளவு கிடைக்காததால், மரங்களிலேயே பழுத்து வீணாகும் நிலையும் உள்ளது. மாந்தோட்டங்களை குத்தகைக்கு எடுத்தோர், மா மரங்களில், பூவெடுக்கும் தருணம், காய் பிடிக்கும் போதும் மருந்து தெளித்து பல்வேறு வகையில் பல லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர்.ஊரடங்கால், மாம்பழ வர்த்தகம் இந்தாண்டும், பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. மா சாகுபடி விவசாயிகள், மொத்த குத்தகைக்கு எடுத்த வியாபாரிகள், என, இருதரப்பிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE