உள்நாட்டு பொருட்கள் மட்டும் விற்பனை சுதேசி மயமானது ராணுவ, கேன்டீன்| Dinamalar

உள்நாட்டு பொருட்கள் மட்டும் விற்பனை சுதேசி மயமானது ராணுவ, 'கேன்டீன்'

Added : மே 14, 2020
Share

புதுடில்லி : ''சி.ஆர்.பி.எப்., மற்றும் பி.எஸ்.எப்., உள்ளிட்ட துணை ராணுவ படையினருக்கான, 'கேன்டீன்'களில், ஜூன், 1ம் தேதி முதல், உள்நாட்டில் தயாரான பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும்,'' என, உள்துறை அமைச்சர், அமித் ஷா அறிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டெழுவது குறித்து, பிரதமர், நரேந்திர மோடி, நேற்று முன்தினம் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, 'மக்கள் உள்ளூர் தயாரிப்புகளை வாங்க வேண்டும்' என, கூறினார்.இதை பின்பற்றி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட, பல்வேறு துணை ராணுவ படையினரின் கேன்டீன்களில், ஜூன், 1ம் தேதி முதல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என, மத்திய உள்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து, உள்துறை அமைச்சர், அமித் ஷாவின், 'டுவிட்டர்' பதிவில், கூறப்பட்டுள்ளதாவது: 'கொரோனா பாதிப்பில், நாடு தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். இது, இந்தியாவை உலகின் தலைமைக்கான பாதையில், நிச்சயம் கொண்டு செல்லும்' என, பிரதமர், மோடிகூறியுள்ளார்.இதன்படி, ஜூன், 1 முதல், அனைத்து துணை ராணுவ படையினரின் கேன்டீன்களும், உள்நாட்டில் தயாரான பொருட்களை மட்டுமே விற்பனை செய்யும்.இந்த கேன்டீன்களில், 10 லட்சம் துணை ராணுவத்தினர் உறுப்பினர்களாக உள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினர், 50 லட்சம் பேர், நம் நாட்டில் உற்பத்தி யானவற்றை பயன்படுத்துவர்.

துணை ராணுவத்தினரின் கேன்டீன்களில், ஆண்டு தோறும், 2,800 கோடி ரூபாய் மதிப்பில், பொருட்கள் விற்பனை நடைபெறுகிறது.உள்நாட்டு பொருட்களை பயன்படுத்துவோர், அதன் நன்மை குறித்து, மற்றவர்களுக்கும் தெரிவித்து, ஊக்கப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X