மதுரை : கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள, மருத்துவம், போலீஸ் துறையினருக்கு கவச உடை, முக கவசம், கையுறை போன்ற தற்காப்பு உபகரணங்கள் வினியோகிக்க கோரிய வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மதுரை, சொக்கிகுளம் சத்தியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு:தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவம், போலீஸ் உட்பட பல்வேறு துறையினர், தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.இவர்களுக்கு, சமூக பரவல் மூலம் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. பரவலை தடுக்க, பி.பி.இ., எனப்படும் தற்காப்பு கவச பொருட்கள் முக்கியம் என, உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அரசு துறைகளின் ஊழியர்கள், தன்னார் வலர்களுக்கு கவச உடை, முக கவசம், கையுறை, ரப்பர் பூட்ஸ் போன்றவற்றை வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனு செய்தார்.காணொலியில், நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பில், 'மருத்துவம், வருவாய், உள்ளாட்சி, போலீஸ், தீயணைப்பு உட்பட கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர், உள்துறை செயலர், சுகாதாரத்துறை செயலருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி தற்போதைய நிலை குறித்து, மே, 20ல், அறிக்கைதாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE