ஆனைமலை:ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வரும், 19ம் தேதி முதல் மீண்டும் கொப்பரை ஏலத்தை துவங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.ஆனைமலை ஒன்றிய பகுதியில், பெரும்பாலான விவசாயிகள் தேங்காயை கொப்பரையாக மாற்றி, மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருமானம் ஈட்டுகின்றனர்.வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க ஆனைமலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்கப்பட்டு, வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், மார்ச், 24ம் தேதி முதல் ஏலம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதாலும், வரும், 17ம் தேதியோடு, மூன்றாம் கட்ட ஊரடங்கு நிறைவு பெறுவதாலும், 19ம் தேதி முதல் மீண்டும் கொப்பரை ஏலம் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளர் மணிவாசகம் கூறுகையில், ''விவசாயிகள், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, 19ம் தேதி முதல் ஏலம் நடத்தப்பட உள்ளது. விவசாயிகள், வியாபாரிகள் சமூக விலகலை பின்பற்றி ஏலத்தில் பங்கேற்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.தற்போது, தேங்காய் சீசன் நிலவுவதால், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உள்ள உலர்களங்களை, விவசாயிகள் இலவசமாக பயன்படுத்தி, கொப்பரையை உலர வைக்கலாம். கொப்பரையை வரும், 31ம் தேதி வரை, இலவசமாக கிடங்கில் இருப்பு வைத்து, விற்பனை செய்யலாம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE