பொது செய்தி

தமிழ்நாடு

வளர்ச்சிக்கு வித்திடும் அறிவிப்புகள்! கோவை தொழில் துறையினர் நம்பிக்கை

Added : மே 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வளர்ச்சிக்கு வித்திடும் அறிவிப்புகள்! கோவை தொழில் துறையினர் நம்பிக்கை

கோவை:தொழில் துறையினரின் நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், மத்திய அரசு அறிவிப்புகள் வெளியிட்டுள்ளதாக, கோவை தொழில் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.வருமான வரியை குறைத்திருக்கலாம்!கோவிந்தராஜன், முன்னாள் பேராசிரியர், பொருளாதார துறை, பாரதியார் பல்கலை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வழங்கப்படும், 3 லட்சம் கோடி கடன் நிவாரணம் வரவேற்கத்தக்கது; தொழில் துறையை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. டி.டி.எஸ்., எனும் முன்வரி பிடித்தம், 25 சதவீதம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு சற்று ஏமாற்றம் தருகிறது. மாறாக, ஓராண்டுக்கு தனி நபர் வருமான வரியை, 50 சதவீதமாக குறைத்திருந்தால் நுகர்வை ஊக் குவித்திருக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். பொருளாதாரம் என்பது சங்கிலித்தொடர் செயல்பாடுதான். பொருளாதாரத்தின் அடிப்படையாக இருக்கக்கூடிய வேளாண்மை, கிராமப்புற தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அடுத்த அறிவிப்புகள் இருந்தால் பொருளாதார ஊக்குவிப்பாக இருக்கும்.புத்துயிர் தரும் அறிவிப்புபால்தங்கம், ஆடிட்டர், கோவை: மத்திய அரசின் அறிவிப்பு கோவைக்கு மிகவும் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. கோவையை சுற்றிலும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் நிறைய உள்ளன. சிறுகுறு தொழில்களுக்கு உதவும் வகையில் பிணையில்லாமல், 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என்பது தொழில் நிறுவனங்களுக்கு புத்துயிர் தரும் விதத்தில் உள்ளது. நான்கு ஆண்டுகளில் கடனை திரும்ப செலுத்தலாம். முதல் ஓராண்டு காலம் கடன் தவணை வசூலிக்கப்படாது. வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் கடன் உதவி உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. அதேபோல், டி.டி.எஸ்., வரிப்பிடித்தம், 25 சதவீதம் குறைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் பயனுள்ளதாக உள்ளன.நடைமுறை சிக்கல்ஜேம்ஸ், தலைவர், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டேக்ட்): எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு பிணையில்லாமல், 3 லட்சம் கோடிகடன், குறுந்தொழில்களுக்கு முதலீட்டு வரம்பு, 25 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடியாக உயர்த்தப்படுவது, கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் உள்ளிட்ட அறிவிப்புகளை வரவேற்கிறோம். ஆனால், வங்கிகளை தொடர்புகொள்ளும் போதுதான் நடைமுறை அனுபவம் தெரியவரும். தொழிலாளர்களுக்கு எந்தவொரு சிரமமும் இல்லாமல், மீண்டு எழுவதற்கு நடைமுறை சிக்கல்களுக்கு அரசு தீர்வுகாண வேண்டும்.பிற நாடுகளுக்கு 'செக்'கல்யாணசுந்தரம், தலைவர், தமிழ்நாடு பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம் (டேப்மா): குறுந்தொழில்களுக்கு முதலீட்டு வரம்பு, 25 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தவிர, ஆண்டு விற்பனை, 5 கோடி வரையுள்ள நிறுவனங்கள் என, பல்வேறு தரப்பினருக்கும் நிறைய சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன. 200 கோடிக்கும் குறைவான அரசு டெண்டர்கள் இனி இந்திய நிறுவனங்கள் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனா உள்ளிட்ட பிற நாடுகள் இந்திய சந்தை ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த முடியும். சிறு தொழிலாளர் உள்ளிட்டோரின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது வரவேற்பையும், மகிழ்ச்சியையும் தருகிறது. பலன் குறைவுதான்நல்லதம்பி, தலைவர், கோவை சிட்கோ தொழில் பேட்டை உற்பத்தி யாளர்கள் நலச்சங்கம் (கொசிமா): எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு மூன்று லட்சம் கோடி கடன், மேலும் மூன்று மாதங்களுக்கு அரசே பி.எப்., தொகை செலுத்தும் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. ஆனால், ஊரடங்கு சமயத்தில் சிறு, குறு நிறுவனங்களுக்கு வட்டி தள்ளுபடி குறித்த அறிவிப்பு இல்லாதது வருத்தம் அளிக்கிறது. ஓராண்டுக்கு கடன் தவணை வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எங்களுக்கு சுமை அதிகரிக்கும். எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு வரையறை மாற்றியமைக்கப்பட்டுள்ளதன் மூலம் அதிகம் பலன்பெறுவது நடுத்தர நிறுவனங்கள்தான். சிறு, குறு நிறுவனங்களின் உரிமைகள் பறிக்கப்படும் வாய்ப்புள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-மே-202007:13:48 IST Report Abuse
ஆப்பு ரயில்களை எல்லாம் ஜூன் 30 வரை முடக்கப் போறாங்களாம். உங்க பாராட்டை அடக்கி வாசிங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X