உடுமலை:உடுமலை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் மீண்டும் பணிகள் துவங்கின.வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், 'கொரோனா' ஊரடங்கு காரணமாக, கடந்த, மார்ச் 25ம் தேதி முதல், பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதால், நேற்றுமுன்தினம் முதல், வட்டார போக்குவரத்து பகுதி அலுவலகத்தில் பணிகள் துவங்கியுள்ளன.ஏற்கனவே, ஆர்.டி.ஓ., அலுவலக பணிகள் அனைத்தும் 'ஆன்லைன்' மூலமே செயல்படுத்தப்படும் நிலையில், தற்போது இணையதளம், 'மொபைல் ஆப்' மூலம், விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடுமலை வட்டார போக்குவரத்து, பகுதி அலுவலகத்தில், தினமும், 10 பேருக்கு ஓட்டுனர் உரிமம் மற்றும், 10 பேருக்கு புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும், 10 பேருக்கு, எல்.எல்.ஆர்., என, நாள் ஒன்றுக்கு 30 பேர் மட்டுமே விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே போல், வாகனங்கள் பதிவு மற்றும் எப்.சி.,புதுப்பிக்கும் பணியும் நடந்து வருகிறது.இந்த அலுவலகத்திற்கு, வழக்கமாக, 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிகளுக்கு வந்து செல்லும் நிலையில், தற்போது கூட்டத்தை குறைக்கும் வகையில், இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அலுவலகத்திற்குள், 'ஆன்லைன்' மூலம், விண்ணப்பித்து, பணம் செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுககின்றனர். வருபவர்கள் கட்டாயம், முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளி பராமரிக்கும் வகையில், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.சோப் ஆயில் கொண்டு கைகளை கழுவிய பிறகே, அனுமதிக்கப்படுகின்றனர்.உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா கூறுகையில், 'இணையதளம் மூலம், விண்ணப்பித்து, வரும் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
வரும் நபர்களுக்கு நோய் தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், உடல் வெப்பம் அளவீடும் கருவி மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. சமூக இடைவெளி பராமரிப்பு, கை கழுவும் அமைப்பு, எலக்ட்ரானிக் கையெழுத்து பகுதியில் சானிடைசர், குறைந்த அளவே, விண்ணப்பங்கள் வருகின்றன. புதிய வாகன பதிவுக்கு, பி.எஸ்.,6 ரகம் மட்டுமே பதிவு செய்யமுடியும் என்பதால், வாகனப்பதிவும் குறைவாக உள்ளது,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE