நொய்டா: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது கணவரின் இறுதி சடங்கில் உறவினர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாததால், வீடியோ காலில் பார்த்து மனைவி கண்ணீர் விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 60 வயதுடைய ஒரு நபருக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கடந்த மே 11ம் தேதி, மாலையில் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால் 5:30 மணியளவில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு, 9 மணியளவில் வென்டிலேட்டர் ஆதரவுடன் சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால், அடுத்த 50 நிமிடங்களில் சுவாசக்கோளாறு மற்றும் இதயப் பிரச்னையால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த நபரின் மனைவி கொரோனா சிகிச்சையில் இருக்கிறார். மகள் குஜராத்திலும், உறவினர்கள் வாரணாசியிலும் உள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ளதால் அவர்களால் இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை. இதனால், மருத்துவமனை நிர்வாகம் சார்பிலேயே உடலை தகனம் செய்தனர். இறுதி சடங்கில் உறவினர்கள் யாரும் கலந்து கொள்ள முடியாமையாலும், தன்னாலும் தானும் சிகிச்சையில் உள்ளதாலும் தவிப்புக்கு உள்ளான அவரது மனைவி, கணவரின் இறுதி சடங்கை வீடியோ கால் மூலமாக பார்த்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE