தொழிலாளர், மின் கட்டணம், சம்பள பிரச்னை அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு தீர்வு காண டான்ஸ்டியா வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிலாளர், மின் கட்டணம், சம்பள பிரச்னை அதிகரிப்பு: மத்திய, மாநில அரசு தீர்வு காண 'டான்ஸ்டியா' வேண்டுகோள்

Added : மே 14, 2020
Share

ஈரோடு: 'தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தொழிலாளர், மின் கட்டணம், சம்பள பிரச்னைகளில் சிக்கி உள்ளதால், மத்திய, மாநில அரசுகள் தேவையான உதவிகள் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க (டான்ஸ்டியா) தலைவர் அன்புராஜன், பொதுச் செயலாளர் ஹிந்துநாதன் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.
மத்திய, மாநில அரசுக்கும், ரங்கராஜன் குழுவுக்கும் அவர்கள் அனுப்பிய மனுவில் கூறியதாவது: தமிழகத்தில், 50 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஊரடங்கால் கடுமையாக பாதித்துள்ளன. மீண்டும் இவர்கள் தொழில் துவங்கி, மீண்டு வருவது சிரமமாகும். இதற்கிடையில், ரங்கராஜன் குழு அமைத்துள்ளதை வரவேற்றாலும், அக்குழு, 15 நாளில் அறிக்கை வழங்காமல், மூன்று மாதத்துக்குப்பின் அறிக்கை தருவது பெரிய இழப்பாகும். சிறு, குறு நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் படித்தவர்கள் அதிகம் என்பதால், கூலி பணி, சிறு, குறு தொழில்களில் பணி செய்ய வருவதில்லை. பிற மாநில தொழிலாளர்கள் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண தள்ளுபடி வழங்க வேண்டும். ஊரடங்கு காலத்தில் இயங்காத தொழில் நிறுவனங்களுக்கு, 20 சதவீத கட்டணத்தை மட்டும் பெற வேண்டும். தொடர்ந்து மின் கட்டணம் செலுத்த அவகாசம் தர வேண்டும். நிறுவனங்களின் வங்கி கடனுக்கான வட்டியை அரசு ஏற்க வேண்டும். வெளி மாநில தொழிலாளர்கள் தங்கும் வசதியை, தொழில் பேட்டைகளில் உருவாக்க வேண்டும். தொழில் நிறுவனங்களின் பில்களுக்கு பணம் பெற முடியாத நிலை உள்ளதால், ஜி.எஸ்.டி., செலுத்த அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X