விதிமுறையை பின்பற்றாததால் 146 கடைகளுக்கு சீல் வைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விதிமுறையை பின்பற்றாததால் 146 கடைகளுக்கு 'சீல்' வைப்பு

Added : மே 14, 2020
Share

திருச்சி: ஊரடங்கு காலக்கட்டத்தில், விதிமுறைகளை தளர்த்திய அரசு, தனிக்கடைகளை திறக்கலாம் என உத்தரவிட்டது. அதேசமயம், திருச்சி மாநகரப் பகுதியில், கடந்த சில நாட்களாக, வியாபாரிகள் அனைத்து விதமான கடைகளையும் திறந்து வைத்திருந்தனர். கடைகளுக்கான நேரம் வரையறை மீறியும், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை பின்பற்றாமலும், இரவு வரை, இந்தக் கடைகளில் வியாபாரம் நடந்துள்ளது. இதையறிந்த கோட்டை போலீசார், மாநகர பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். 'அனைத்து விதமான கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கும் வரை, கடைகளை திறக்க வேண்டாம்' என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தினர். இதனால், நேற்று திருச்சி மாநகரில் முக்கிய கடை வீதிகளான பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, என்.எஸ்.பி., ரோடு போன்ற இடங்களில் உள்ள, அனைத்து விதமான கடைகளும் அடைக்கப்பட்டன.

அதேபோல், திருச்சி போலீஸ் சரகத்தில் உள்ள திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அதில் திறந்திருந்த, 12 ஆயிரத்து,647 தனிக்கடைகளில், சமூக இடைவெளிக்கான குறியீடு செய்யப்படாத, 663 கடைகள் மீது, நேற்று போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவற்றில், அரசு விதிமுறைகளை கடைப்பிடிக்காத, 146 கடைகள், வருவாய்த் துறையினரால், 'சீல்' வைக்கப்பட்டன. மேலும், திறந்திருக்கும் மற்ற கடைகளில், பெயின்ட் போன்ற பொருட்களால், சமூக இடைவெளிக்கான குறியீடுகளை நிரந்தரமாக இருக்கும்படி அமைக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X