ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; பூ வியாபாரி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; பூ வியாபாரி கைது

Added : மே 14, 2020
Share

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட பூ வியாபாரி கைது செய்யப்பட்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த அந்தேவனப்பள்ளியில், இந்தியா ஒன் என்ற தனியார் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 11:45 மணிக்கு ஏ.டி.எம்., மையத்தில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. உடனே அப்பகுதி மக்கள், ஏ.டி.எம்., மையத்திற்கு சென்றனர். அப்போது, வாலிபர் ஒருவர் பணத்தை கொள்ளையடிக்க, கடப்பாரை மூலம் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த மக்கள், ஏ.டி.எம்., மைய ஷட்டரை அடைத்து விட்டு, தேன்கனிக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால், பல லட்சம் ரூபாய் தப்பியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில், அஞ்செட்டி அடுத்த தேவன்தொட்டியை சேர்ந்த ராஜேஷ்குமார், 27, என்றும், அஞ்செட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே பூ வியாபாரம் செய்து வருவதும், கடன் காரணமாக ஏ.டி.எம்., மையத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கடந்த டிச., 13 அதிகாலை, தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் இருந்த இந்தியா ஒன் ஏ.டி.எம்., மற்றும் மார்ச், 20ல், இருதுக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகே இருந்த இந்தியா ஒன் ஏ.டி.எம்.,மையத்தில் கொள்ளை முயற்சி நடந்தது. இந்த இரு ஏ.டி.எம்., மற்றும் நேற்று கொள்ளை முயற்சி நடந்த ஏ.டி.எம்., மையங்களில் காவலாளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X