ஓசூர்: இணையதளம் வழியாக நடந்த புறாக்கள் அழகு போட்டியில், ஓசூர் தனியார் நிறுவன ஊழியர் பராமரித்து வரும் புறா முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது.
இந்தியன் பீஜியன் ஒபன் கிளப் அமைப்பினர், கொரோனா நிவாரண நிதிக்கு உதவி செய்யும் வகையில், இணையதளம் வழியாக புறாக்களுக்கான அழகு போட்டிகளை நடத்தினர். இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருந்து, 24 புறாக்கள் பங்கேற்றன. புறாக்களின் கண் பார்வை, அதன் இறகுகளின் தன்மை, அழகு மற்றும் அதன் நடை ஆகியவை பார்க்கப்பட்டு, அதில் எந்த புறா சிறந்ததாக உள்ளது என கடந்த, 8 முதல், 10 வரை, யு டியூப், வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம், புறாக்களின் புகைப்படம் மற்றும் வீடியோ இடம் பெற செய்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் பதிவான, 2,956 வாக்குகளில், 479 வாக்குகள் பெற்று, ஓசூர் அருகே கசவுகட்டா பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தாண்டவமூர்த்தி வளர்த்து வரும் புறா, முதல் பரிசை தட்டி சென்றது. 417 வாக்குகள் பெற்ற புதுச்சேரியை சேர்ந்த சதீஷ் என்பவரின் புறா இரண்டாமிடம், சென்னையை சேர்ந்த தியாகராஜன் புறா மூன்றாமிடம் பெற்றது. புறா அழகு போட்டியில், பங்கேற்றவர்கள் கட்டிய நுழைவு கட்டணம், கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. அதேபோல், தனியார் ஊழியர் தாண்டவமூர்த்தி, தன் புறாவிற்கு முதல் பரிசாக கிடைத்த, 5,000 ரூபாயை, கொரோனா நிதிக்கு வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE