டோக்கியோ: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்கள், விடுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஜப்பானை சேர்ந்த வீடியோ சாட் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஆன்லைன் பார்ட்டி பிரபலமடைந்துள்ளது.
ஜப்பானில் நண்பர்கள் உடனான உறவுகளை வலுப்படுத்தவும், சக பணியாளர்களிடையே நெருக்கத்தை அதிகரிக்கவும் குழுவாக ஒன்று சேர்ந்து குடிக்கும் பழக்கம் நோமிகாய் (Nomikai ) என்றழைக்கப்படுகிறது. ஜப்பானில் மிகவும் பிரபலமான இந்த கலாச்சாரம் கொரோனா தாக்கத்தால் தடைப்பட்டிருந்தது. இதனை ஜப்பானிய மொழியில் வீட்டில் இருந்து குடிப்பது என்ற பொருள் தரும் ‛டாக்னோம்' (Tacnom) என்ற பெயரில் ஒரு வீடியோ சாட் நிறுவனம், கலாச்சாரத்தை இணையத்துக்கு மடைமாற்றம் செய்துள்ளது. முதல் இரண்டு மாதங்களில் மட்டும் 20.4 லட்சம் பேர் பயனர்களாக இணைந்துள்ளனர். ‛இந்தளவுக்கு வரவேற்பு இருக்குமென நான் நினைக்கவில்லை. நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன்' என டாக்னோம் தலைமை செயல் அதிகாரியான தகாஷி கியோஸ் கூறியுள்ளார்.

மற்ற ஆன்லைன் வீடியோ தளங்கள் போல் அல்லாமல், டாக்னோமை டவுன்லோடு செய்யவோ, பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு பயனர் யூ.ஆர்.எல் (URL Link) இணைப்பை மட்டும் உருவாக்கி, அவர்களது நண்பர்களுடன் பகிர்ந்து, 12 நபர்களுடன் ஒரே நேரத்தில் விர்ச்சுவல் பார்ட்டியை கொண்டாடலாம். ஜப்பானில் தேசிய அவசர நிலை மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மாகாண அரசுகள் மக்களை, தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாமென அறிவுறுத்தி உள்ளன.

ஜப்பானில் காலத்திற்கேற்ப சரி செய்து கொள்வது, சமூக மயமாக்கல் பிணைப்பு மற்றும் குழு கட்டமைப்பை ஏற்படுத்துதல் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் விர்ச்சுவல் பார்ட்டியில் பங்கேற்க பணம் செலுத்துகின்றன. மற்றொரு ஜப்பானிய மொபைல் கேம் நிறுவனமான கிரீ (Gree), தனது ஊழியருக்கு வீட்டில் உணவு மற்றும் மது அருந்துவதற்கு மாதம் ஒன்றிற்கு 3,000 யென்களை ஏப்ரல் முதல் அளித்து வருகிறது. சக ஊழியர்களுடன் ஆன்லைன் மது பார்ட்டியில் பங்கேற்கவும் ஆதரவு தெரிவித்து வருகிறது. வழக்கமாக கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளதால், ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்களும் டாக்னமுடன் இணைந்து தங்களது எண்ணங்களை பகிர்ந்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE