லண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்த அமலாக்க துறை முயற்சி செய்வதற்கு எதிரான மனுவை லண்டன் சுப்ரீம் கோர்ட்டில் முறையிட அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
‛வங்கிகளில் நான் பெற்ற 100 சதவீதக் கடன்களையும் செலுத்தி விடுகிறேன், எனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு விஜய் மல்லையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்குத் தப்பி ஓடினார். அவரை இந்தியா அழைத்து வரும் முயற்சியில் அமலாக்கப் பிரிவினர், சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதற்கான பணிகள் லண்டன் உச்சநீதிமன்றத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மீட்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். முதல் கட்டமாக ரூ.6 லட்சம் கோடிக்கான திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இந்த திட்டங்களை பாராட்டிய விஜய் மல்லையா, மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: கொரோனா வைரசிலிருந்து பொருளாதாரத்தை மீட்க இந்திய அரசு ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அறிவித்ததற்கு நான் வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். இந்திய அரசு அவர்களின் தேவைக்கு ஏற்றார்போல் ரூபாய் நோட்டுகளை அச்சிடலாம். ஆனால், என்னைப் போன்ற சிறு பங்களிப்பாளர் 100 சதவீதம் கடனை வங்கிகளிடம் திருப்பிச் செலுத்துகிறேன் எனப் பலமுறை கோரிக்கை விடுத்தும் தொடர்ந்து புறந்தள்ளப்படுகிறது.
நான் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய அனைத்துக் கடன்களையும் செலுத்திவிடுகிறேன், நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டு, எனக்கு எதிரான வழக்குகள் அனைத்தையும் கைவிடுங்கள் என மத்திய அரசிடம் கேட்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE