புதுடில்லி: சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தன்னிறைவு இந்தியா திட்டத்தின் கீழ் 2வது கட்ட திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா அறிவித்தார்.
நிருபர்களை சந்தித்த நிர்மலா கூறியதாவது: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், சிறு விவசாயிகள் தெருவோர வியாபாரிகள், சிறுவணிகர்கள் போன்றோருக்கு இன்று திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. 3 திட்டங்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும், ஒன்று தெருவோர தொழிலாளர்களுக்காகவும், 2 திட்டங்கள் சிறு விவசாயிகளுக்கும் உள்ளது. விவசாயிகளுக்கு இன்னும் பல திட்டங்கள் இனி வரும் நாட்களில் வரும்.

2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிசான் கிரெடிட் கார்டு வழங்கி 25 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் 3 கோடி விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் 4.22 லட்சம் கோடி அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சிரமப்படாமல் இருக்க கடனை திருப்ப செலுத்தும் காலம் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் 1 முதல் ஏப்.,30 வரை 86 ஆயிரம் கோடி அளவுக்கு 63 லட்சம் கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு ரூ.29,500 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.