புதுடில்லி: சொந்த ஊர் திரும்பிய வெளிமாநில தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த இரண்டு மாதங்களுக்கு அவர்களுக்கு இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: 12 ஆயிரம் சுய உதவி குழு மூலம் 3 கோடி மாஸ்க், 1.2 லட்சம் லிட்டர் சானிடைசர் தயாரிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற ஏழைகளுக்கு உதவ, புதிதாக 7,200 சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நகர் புறங்களில் வீடற்றவர்கள் தங்க வைக்கும் முகாம்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களுக்கு 3 வேலை உணவு வழங்கப்படுகிறது. அவர்களுக்கு முகாம் அமைக்கவும், உணவு வழங்கவும், மாநிலங்களுக்கு ரூ.11,002 கோடி வழங்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 4,200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் மே 13 வரை 14.62 கோடி மனித வேலைநாட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்தை விட நடப்பு மே மாதத்தில் 40 சதவீதம் - 50 சதவீதம் வரை கூடுதலான மக்கள் , 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். கொரோனா காலத்தில் 100 நாள் வேலைவாய்ப்புதிட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஊதியம் ரூ.182ல் இருந்து ரூ.202 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 1.87 லட்சம் கிராமங்களில் 2.33 கோடி பேருக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது
இந்த திட்டத்தில், சொந்த ஊர் திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்கள் நாட்டில் எங்கு சென்று வேலை செய்தாலும் நலத்திட்டங்களை பெறும் வசதி நடைமுறைபடுத்தப்படுகிறது. சொந்த ஊர் சென்ற தொழிலாளர்களுக்கு உரிய வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சி துறை கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. சொந்த ஊர் வந்தவர்களை கண்டறிந்து பதிவு செய்யும் பணி நடக்கிறது. வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவ 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் பயன்படுத்தப்படும்.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடுத்த இரு மாதம் இலவசமாக 5 கிலோ அரிசி அல்லது கோதுமை இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம் 8 கோடி பேர் பயனடைவார்கள். இதற்காக ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ரேசன் கார்டு இல்லாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்கும் இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE