சென்னை: தலைமை செயலாளர் சண்முகம், தாங்கள் சொல்வதை கேட்கவில்லை என திமுக எம்பி.,க்கள் புகார் கடிதம் வாசிக்க, திமுக எம்பிகள் அவதூறு பரப்பி அதிகாரிகளை குழப்பி வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தமிழக தலைமை செயலாளர் சண்முகத்தை சந்திக்க திமுக எம்.பி.,க்கள் சென்றனர். ஆனால் தலைமைச் செயலாளர் தங்களை கண்டுகொள்ளவில்லை, தாங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்கவில்லை. நாங்கள் பேசும்போது டிவி சத்தத்தை அதிகப்படுத்தினார் என புகார் கூறினர்.
இதற்கு மறுப்பு தெரிவித்த சண்முகம், ‛‛தி.மு.க. எம்.பி.க்கள் 10 முதல் 20 நபர்கள் வரை மனுக்கள் அடங்கிய கட்டுகளை எடுத்து வந்தனர்; போட்டோ, வீடியோ எடுத்தனர். கொரோனா நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில் இத்தனை பேர் அறைக்குள் வந்தது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு லட்சம் மனுக்களை ஒப்படைப்பதாக டி.ஆர்.பாலு தெரிவித்தார். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுப்பதாக கூறினேன். எத்தனை நாட்களுக்குள் அலுவலர்களுக்கு மனுக்களை அனுப்புவீர்கள்' என கேட்டனர்; தேதியை உறுதியாக கூற இயலாது என்றேன்.
அப்போது டி.ஆர்.பாலு 'பணியாளர்கள் குறைவாக உள்ளதால் தேதியை உறுதியாக கூற முடியாது என தலைமை செயலர் சொன்னார் என செய்தியாளர்களிடம் கூறவா' என கேட்டார். ‛இது தான் உங்களிடம் உள்ள பிரச்னை; எங்களின் சங்கடங்களை புரிந்து கொள்வதில்லை' என்றேன். அவர்களை அவமதிக்கும் எண்ணம் எதுவும் இல்லை. தலைமை செயலருக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லாதது போல டி.ஆர்.பாலு கருத்து தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது. தற்போதுள்ள நிலையை நன்கு அறிந்தவர்கள் இப்படி திரித்து பேசுவது மன வேதனையை அளிக்கிறது. உண்மையை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் மக்களும் புரிந்து கொள்வர்,'' என கூறினார்.

இது குறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நேர்மையாக செயல்படும் ஜென்டில்மேன் தலைமைச் செயலாளர் சண்முகம் மனதை திமுக கஷ்டப்படுத்தி உள்ளது. மோதுவதாக இருந்தால் தமிழக அரசுடன் மட்டுமே மோத வேண்டும், அதிகாரிகளை மிரட்டும் செயலில் திமுக ஈடுபடக்கூடாது. அரசு இயந்திரத்தை திறம்பட செயல்பட வைக்கும் அதிகாரிகளை குழப்பி, ஆட்டம் காண வைக்கும் செயலில் திமுக திட்டமிட்டு சதி செய்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.