புதுடில்லி ; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத், கில்ஜித் பல்திஸ்தான் பகுதிகளுக்கும் சேர்த்து, இந்திய வானிலை ஆய்வு மையம், வானிலை தகவல்களை சொல்ல துவங்கியது. காஷ்மீரில், இதுவரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை தனித்து காட்ட ஒரு எல்லைக்கட்டுப்பாட்டு கோடு கூகுள் மேப்பில் இருந்தது. வானிலை மையத்தின் அறிவிப்பிற்கு பின் இந்த கோடு நீக்கப்பட்டு ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்திய வரைபடத்தில் காண்பிக்கப்படுகிறது என்ற தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவ துவங்கியது.

இதன் உண்மை தன்மையை ஆராய்ந்த போது, இந்த தகவல் தவறு என தெரியவந்துள்ளது. இந்தியாவுக்குள் இருந்து சர்ச் செய்யும்போது போது மட்டுமே, காஷ்மீருக்கு இடையே இந்த எல்லைக்கட்டுப்பாட்டு கோடு தெரியாது. அதேசமயம், இந்தியாவை தவிர்த்து வெளிநாடுகளில் இருந்து கூகுள் இந்திய மேப்பை பார்த்தால், அந்த கோடு தெரியும். இதனால், கூகுள் மேப்பில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது என்பது தவறான தகவல் என தெரியவந்துள்ளது.
வானிலை தகவல்
கடந்த வியாழன் முதல், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை மண்டலத்திற்குள் கொண்டு வந்தது. ஜம்மு காஷ்மீர், லடாக்கின் வடக்கு பகுதியான கில்ஜித் பல்திஸ்தான் மற்றும் முசாபராபாத் ஆகிய பகுதிகள் இந்திய வானிலை மண்டலத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கிஜெர் பகுதியும் விரைவில் இந்திய வானிலை எல்லையில் சேர்க்கப்படும் என தெரிகிறது. இந்திய வானிலை மையத்தின் இணையதளத்தில் கில்ஜித் பல்திஸ்தானில் உள்ள ஸ்கார்டு பகுதிகளில் வெப்பநிலை மற்றும் வானிலை குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது..
பாகிஸ்தான் எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்த நடவடிக்கை சட்டரீதியில் செல்லாது. ஐ.நா., தீர்மானத்திற்கு எதிரானது எனக்கூறியுள்ளது.
வானிலை மையத்தின் வழியில் தூர்தர்ஷன்
இந்திய வானிலை மையத்தை தொடர்ந்து, தூர்தர்ஷன், அகில இந்திய வானிலை மையம் ஆகியவையும், இந்திய நகரங்களுடன், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்புர், முசாபராபாத், கில்ஜித் ஆகிய பகுதிகளுக்கும் வானிலை தகவல்களை கூற துவங்கியுள்ளன.