சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

கோபத்தை கட்டுப்படுத்த முடியுமா?

Added : மே 15, 2020
Share
Advertisement
கோபத்தை கட்டுப்படுத்த முடியுமா?

சிலர் தங்கள் கோபமே ஒரு உந்து சக்தியாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், பெரும்பாலானோர் கோபத்தினால் பெரும் பாதிப்பையே அடைகிறார்கள். உண்மையில், கோபம் ஒரு உந்து சக்தியா? அல்லது பாதிப்பா? கோபத்தை ஏன் நாம் கைவிட வேண்டும்? தொடர்ந்து படித்தறியலாம் சத்குருவின் பார்வையை!

கேள்வியாளர்: சில சூழ்நிலைகளில், நாம் கோபத்தில் சமநிலை தவறிவிட்டு, அதன்பின்னர் நமது முட்டாள்தனத்தை நினைத்து வருந்துகிறோம். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிடுகிறது. நமது கோபத்தை நாம் எப்படி கட்டுப்படுத்த முடியும்?


சத்குரு:தற்போது நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா? இல்லை. உங்களிடம் இப்போது கோபம் இல்லை. இப்போது அது எங்கேயிருக்கிறது என்பதும் தெரியாது. அப்படியென்றால் இல்லாத கோபத்தை நீங்கள் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? இல்லாத ஒன்றை உங்களால் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்?
கோபம் என்பது, உங்களுக்கும் உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் ஒருவிதமான இனிமையற்ற நிலையை உண்டாக்குகிறது. பெரும்பாலான நேரங்களில் உங்களுடைய கோபத்திற்கு ஆளானவர்களைவிட, நீங்கள் அதிகமாகத் துன்பப்படுகிறீர்கள். மேலும் நீங்கள் கோபம்கொள்ளும்போது, மிக முட்டாள்தனமான விஷயங்களை நீங்கள் செய்யக்கூடும். இது நிச்சயமாக ஒரு புத்திசாலித்தனமான வாழ்க்கையில்லை.

கோபம் என்பது விருப்பு வெறுப்புகள் என்கிற வலிமையான உணர்விலிருந்து எழுகிறது. ஒரு குறிப்பிட்டவிதமான சிந்தனை மற்றும் உணர்வுகளோடு கூடிய ஆழமான அடையாளத்திலிருந்துதான் உங்கள் விருப்பு வெறுப்புகள் வருகின்றன. உங்களைப் பொறுத்தவரை, உங்கள் சிந்தனை மற்றும் உங்கள் உணர்வுகள்தான் வாழ்வதற்கான சிறந்த வழி என்று நினைக்கிறீர்கள். ஆக உங்கள் சிந்தனை மற்றும் உங்கள் உணர்வுகளுக்கு யாராவது ஒத்துவரவில்லை என்றால் அவர்களுடன் கோபம் கொள்கிறீர்கள். ஏதோ ஒன்றுடன் உங்களது விருப்பு, வெறுப்புகள் மற்றும் உங்களது அடையாளங்கள் அதிக வலிமை பெறும் நிலையில், நீங்கள் செய்வதெல்லாம் ஒன்றுதான் - படைப்பை விலக்கி வைக்கிறீர்கள். 'எனக்கு இது மிகவும் விருப்பமானது' என்று நீங்கள் கூறும்போது, அந்தக் கணத்தில், படைப்பிலுள்ள மற்றவைகளை பெருமளவு விலக்கி வைக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

எந்த அளவுக்கு உங்கள் விருப்பு, வெறுப்பு வலிமையாகிறதோ, அந்த அளவுக்கு நீங்கள் விலக்கிவைத்தலும் ஆழமாகிறது. யாரோ ஒருவரை அல்லது ஏதோ ஒன்றை நீங்கள் உங்களில் ஒரு பகுதியாக இணைத்துக் கொள்ளாத காரணத்தால்தான் கோபம் கொள்கிறீர்கள். உங்களது விடுதலைக்கான முக்கிய செயல்பாடே இணைத்துக் கொள்ளுதல்தான், விலக்குவது அல்ல. எல்லாவற்றையும் இணைத்துக்கொள்ளும்போது, நீங்கள் விடுதலை பெறுகிறீர்கள். அனைத்தும், இந்த ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும், உங்களுக்குள் இணைக்கப்படும்போது, நீங்கள் விடுபடுகிறீர்கள். விலக்கிவைத்தலில் நீங்கள் சிறைப்படுகிறீர்கள், நீங்கள் தனிமைப்பட்டு விடுகிறீர்கள்.

உண்மையில் நீங்கள் கோபம் கொள்ள விரும்புவதில்லை. உங்களுக்குள் ஏதோ ஒன்று நிகழும்போது அதற்கான காரணமாக வேறு சூழ்நிலைகளை அல்லது வேறு மனிதர்களை நீங்கள் காரணமாக நினைப்பதால்தான், இது உங்களுக்கு நிகழ்கிறது. மேலும் இது உண்மையும் அல்ல. கோபம் என்பதே நீங்கள் உருவாக்கிக் கொள்வதுதான் என்று மட்டும் பாருங்கள். நீங்கள் விரும்பாத ஒன்றை ஏன் நீங்களே உருவாக்கிக் கொள்கிறீர்கள்? இதற்கு ஒரே ஒரு அடிப்படையான காரணம்தான் இருக்க முடியும். அதாவது உங்களைப் பற்றியே நீங்கள் அறியாமையில் இருக்கிறீர்கள்.

உங்களுடைய உடலமைப்பு எப்படி இயங்குகிறது என்பதையும் இந்த உடலை எப்படி நிர்வகிப்பது என்பதையும் நீங்கள் அறிந்திருந்தால், நீங்கள் ஏன் கோபத்தை உருவாக்கப் போகிறீர்கள்? கோபமானது வெளிச்சூழ்நிலையை மட்டும் பாதிக்காமல், உங்கள் உள்சூழ்நிலையையும் பாதிக்கிறது. மக்கள் தங்களுக்குள் அளவற்ற கோபத்தை வளர்த்துக் கொண்டு, தங்களுக்கே ஆரோக்கியப் பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர். அதைப் பொறுத்து வெளிச்சூழல்களிலும் அதன் பின்விளைவுகள் நிகழும்.

நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பின்விளைவு உண்டு. உங்கள் செயலுக்கான விளைவை உங்களால் தவிர்க்க முடியாது. விளைவை உங்களால் தவிர்க்க முடியாது எனும்போது, உங்கள் செயலை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். தனக்குள்ளேயே கட்டுப்பட்டிருக்கும் ஒரு மனிதர் மட்டுமே தன் செயல்களையும் கட்டுப்படுத்த முடியும். அவர் மிகச்சரியாக சமநிலைக்கு வந்தபின்னரே இணக்கமான செயல் புரிகிறார். இருப்பினும் விளைவுகள் எப்போதும் இருக்கின்றன. ஏற்கனவே வாழ்வின் செயல்முறையில் இப்போதே உங்களுக்கு போதுமான விளைவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும்போது, உங்களுக்கு நீங்களே மேலும் புதிய விளைவுகளை உருவாக்கிக்கொண்டே செல்ல வேண்டியதில்லை.

குறிப்பாக, உங்களைச் சுற்றிலும் உள்ள சூழ்நிலைகள் மிகவும் மோசமாக இருக்கும்போதுதான், எப்படி உங்களை அதிகபட்ச இனிமையுடன் வைத்துக்கொள்வது மற்றும் அந்த இனிமையை உங்களைச் சுற்றிலும் எப்படி பரவவிடுவது என்று பார்க்க வேண்டும், இல்லையா? உங்களது செயல்கள் உங்கள் புத்திசாலித்தனத்திலிருந்து உருவானால், இப்படித்தான் நீங்கள் செயல்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லாதபோதுதான், இயன்ற அளவுக்கு உங்களை அற்புதமானவராக வைத்துக் கொண்டு, நீங்கள் விரும்பும்படி சூழ்நிலையை எப்படி நிகழச் செய்வது என்று பார்க்க வேண்டும். இது எல்லாவற்றையும் விட மிகவும் முக்கியமானது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதைத்தான் உங்களைச் சுற்றிலும் நீங்கள் பரவச் செய்வீர்கள். நீங்கள் கோபமாக இருந்தால், கோபத்தைப் பரவச் செய்வீர்கள். நீங்கள் கோபத்தில் இருக்கும்போது, உங்களைச் சுற்றியுள்ள சூழல்களிலும் இனிமையற்ற தன்மையே அதிகம் உருவாகும்.

கோபம், அளவற்ற தீவிரத்தன்மை கொண்டது. தீவிரத்தனம் என்ற ஒன்றை மட்டும்தான் மனிதன் தேடிக் கொண்டிருக்கிறான். திகில் படங்கள், சண்டைப் படங்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் போன்றவை இவ்வளவு பிரபலமாக இருப்பது ஏனென்றால், மக்கள் எங்கோ, சிறிது தீவிரத்தை விரும்புவதுதான் காரணம். தீவிரமாக இருப்பதற்கு அவர்கள் அறிந்துள்ள ஒரே வழி, உடல் செயல், கோபம் அல்லது துன்பம் இவைதான். அதனால்தான் போதைப் பொருட்களும், பாலுறவும் உலகத்தில் இவ்வளவு பெரிய விஷயங்களாக இருக்கின்றன. குறைந்தபட்சம் ஒருசில கணங்களாவது மக்கள் சிறிதளவு தீவிரத்தை உணர்ந்துவிட விரும்புகின்றனர். தீவிரத்தன்மை பல விஷயங்களிலிருந்தும் உங்களை விடுவிக்கிறது. கோபம் கூட பல விஷயங்களிலிருந்து உங்களை விடுவிக்கக்கூடும். ஆனால் கோபத்தில் உள்ள பிரச்சனை என்னவென்றால், அது உங்களுக்குள் வெறும் தீவிரமாக மட்டும் இல்லாமல் சுற்றியுள்ள சூழல்களோடும் அது சிக்கிப்போய் விடுகிறது.

உங்களது கோபம் மட்டும்தான், உங்களைச் செயல்பட வைக்கும் உந்துசக்தியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் உங்கள் வாழ்க்கையில் கோபம்தான் நீங்கள் உணர்ந்த மிகத் தீவிரமான உணர்ச்சியாக இருந்திருக்கிறது. நீங்கள் கோபத்தைப் புனிதப்படுத்துவதற்கு அதுதான் காரணம். மேலும் உங்கள் செயலாற்றலுக்கு அது ஒரு உந்து சக்தியாக உள்ளது. துரதிருஷ்டவசமாக, தீவிரமான ஆனந்தத்தையோ அல்லது தீவிரமான அன்பையோ நீங்கள் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை. உண்மையில் அன்பும், கருணையும் கூட உங்களைச் செயல்படச் செய்யும் உந்துசக்தியாக இருக்க முடியும். மிகவும் மென்மையாக, ஆனால் மிக அற்புதமாக, திறன்மிக்கதாக அது இருக்கும்.

பணியிடத்திலும், வீட்டிலும், நீங்கள் கோபமானவர்களோடு வாழ விரும்புகிறீர்களா அல்லது ஆனந்தம் நிரம்பியவர்களோடும், அமைதி நிரம்பியவர்களோடும் வாழ விரும்புகிறீர்களா? அமைதியும், ஆனந்தமும் நிறைந்த மக்களோடுதான் நீங்கள் வாழ்வதற்கு விரும்புவீர்கள், இல்லையா? உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் கூட அதையேதான் உங்களிடம் எதிர்பார்க்கின்றனர் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைத்து மனிதர்களும், எப்போதும், அமைதியும், ஆனந்தமும் நிறைந்தவர்களுடன்தான் வாழவும் பணிபுரியவும் காத்திருக்கின்றனர்.

நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X