சென்னை : 'கொரோனா தொற்று பாதித்த சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகள் தவிர்த்து, தமிழகத்தின் மற்ற பகுதிகளில், இன்று முதல், மது கடைகள் செயல்படும்' என, தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டாஸ்மாக் விடுத்த செய்தி குறிப்பு:உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மதுபான கடைகள், இன்று முதல் திறக்கப்படும். சென்னை காவல் துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், மதுபான கடைகள் திறக்கப்பட மாட்டாது.மேலும், மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளிலும், கடைகள் இயங்காது.மதுபான கடைகள், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை திறக்கப்படும். தினமும், ஒரு கடையில், 500, 'டோக்கன்'கள் மட்டுமே, வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.
கடைக்கு வரும் அனைவரும், கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.டாஸ்மாக் சார்பில், தினமும், ஒரு வண்ணத்தில், டோக்கன் வழங்கப்பட உள்ளது. அதன்படி, ஆரஞ்சு, பச்சை, சிவப்பு, நீலம் உட்பட, ஏழு வண்ணங்களில், டோக்கன்கள் அச்சிடப்பட்டு உள்ளன. அவற்றில், கடை எண், கிழமை, நேரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. வரிசையில் நிற்கும் மது பிரியர்களுக்கு, காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரை, கடை ஊழியர்கள், டோக்கன்களை வினியோகிப்பர். அந்த டோக்கன்களை கடைகளில் கொடுத்து, மது வகைகளை வாங்கி கொள்ளலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE