சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

கொரோனாவுக்கு மருந்து -- இந்தியா தயார் நிலையில்!

Updated : மே 16, 2020 | Added : மே 16, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement
உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும், கொரோனா வைரசுக்கு ஏற்ற புதிய மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என, உலக நாடுகளின் விஞ்ஞானிகள், முயற்சித்து வருகின்றனர்.'ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்' எனப்படும், நவீன, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வெவ்வேறு நோய்களுக்கு, தற்போது பயனில் இருக்கும், 4,000 மருந்துகளில் எவை ஓரளவாவது, கொரோனாவுக்கு மருந்தாக முடியும் என, ஐதராபாதில்
hyderabad news, coronavirus, coronavirus drug, IICT, covid 19, covid drug, Indian Institute of Chemical Technology, கொரோனா,மருந்து,இந்தியா, தயார் நிலையில்!

உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும், கொரோனா வைரசுக்கு ஏற்ற புதிய மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என, உலக நாடுகளின் விஞ்ஞானிகள், முயற்சித்து வருகின்றனர்.

'ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்' எனப்படும், நவீன, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வெவ்வேறு நோய்களுக்கு, தற்போது பயனில் இருக்கும், 4,000 மருந்துகளில் எவை ஓரளவாவது, கொரோனாவுக்கு மருந்தாக முடியும் என, ஐதராபாதில் உள்ள, சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்பின் கீழ் இயங்கும், இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம், இனம் கண்டுள்ளது.இந்த பட்டியலில் உள்ள, 25 மருந்து வேதிப் பொருட்களை, இந்தியாவில் தயாரிக்க, தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, இந்த நிறுவனம்.


அறுக்கத் தெரியாதவனுக்கு ஆயிரம் கதிர் அரிவாள்இவை, கொரோனா நோய்க்காக தயாரிக்கப்பட்ட மருந்துகள் இல்லை. செய்தி படிக்க வாங்கும் செய்தித்தாளை சுருட்டி, கரப்பான் பூச்சியை அடிக்கப் பயன்படுத்துவது போல, எந்த நோய்க்காக உருவாக்கப்பட்டதோ அதுவன்றி, இன்னொரு காரணத்துக்கு பயன்படும்படி, அதை மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஏற்கனவே உள்ள மருந்துகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.“புதிய மருந்து என்றால் புதிய மூலக்கூறு. அதை கண்டுபிடிப்பதற்கு, பல ஆண்டுகள் ஆகும். அவ்வளவு காலம், நாம் காத்திருக்க முடியாது,'' என்கிறார், இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின், முனைவர் சந்திரசேகரன்.மேலும் புதிய மருந்தை கண்டுபிடித்தாலும், அதை முதலில் செல்களில் பரிசோதிக்க வேண்டும். பின், சில விலங்குகளில் பரிசோதிக்க வேண்டும். அதன்பின், மனிதர்களிடம் ஆபத்து இல்லை என, கண்டறியும் முதற்கட்ட பரிசோதனை செய்ய வேண்டும்.இந்த மருந்தால், ஏதோ ஓரளவாவது பயன் இருக்கிறது என்றால், நோயாளிகளிடம், இரண்டாம் கட்ட பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், தீங்கான நிரந்தர பக்க விளைவுகள் இல்லை என்ற, மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு பின் தான், மருந்தை விற்பனை செய்ய அனுமதி கிடைக்கும்.இதற்கும் சில ஆண்டுகள் பிடிக்கும்.
“இந்தியா தவிர, அமெரிக்கா, ஜப்பான் போன்ற முன்னணி நாடுகளின், மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகள், இதுவரை பல்வேறு நோய்களுக்காக, ஒப்புதல் அளித்துள்ள, 4,000 மருந்துகளை அலசி ஆராய்ந்து, கொரோனா நோய்க்கு எவை பயன்படும் என்பதை, நாங்கள் தேடி, பட்டியல் செய்தோம்.''மேலும், இதுவரை, மருத்துவ சிகிச்சை ஆய்வுகளில், நோய்க்கு குணம் தரும் என, சாத்தியம் காட்டிய மருந்துகளையும் இணைத்து, 25 மருந்துகளை பட்டியல் செய்துள்ளோம். இவற்றை இந்தியாவில் தயாரிப்பது குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறோம்,'' என்கிறார், இந்த ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர், முனைவர் எஸ்.சந்திரசேகர்.


latest tamil news
காலத்தே செய்த உதவி


ஏற்கனவே உள்ள ஒரு மருந்தை, வேறு பயன்பாட்டுக்கு மாற்றியமைக்கும் போது, அவற்றுக்கு, முன்னரே, மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதி இருக்கும். எனவே, இன்னொரு முறை, செல்பரிசோதனை, விலங்குகளில் பரிசோதனை, முதற்கட்ட பரிசோதனை தேவையில்லை.அந்த மருந்தால், கொரோனா நோயாளிகளுக்கு ஏதாவது குறிப்பிடத்தகுந்த பயன் உள்ளதா என, இரண்டாம் கட்ட பரிசோதனை நடத்தினால் போதும்.“தொற்று கூடுதலாக பரவி வரும் நிலையில், காலம் கடந்து கண்டுபிடிப்பதால் பயனில்லை. இப்போதே, ஏதாவது மருந்து வேண்டும். எனவே தான், ஏற்கனவே அனுமதி உள்ள மருந்துகளில், எது பயன் தரும் என தேடி, பட்டியல் செய்து, அது குறித்து ஆராய்ச்சி செய்ய நாங்கள் முடிவெடுத்தோம்,'' என்கிறார் முனைவர் சந்திரசேகரன்.

கொரோனா வைரஸ், சுவாச பாதையில் புகுந்து, நுரையீரலை பாதிக்கிறது. எனவே, வைரசுக்கு எதிராக செயல்படும், 'ஆன்டி வைரல்' மருந்துகள், சுவாச நோய்க்கு எதிராக செயல்படும் மருந்துகள், நுரையீரல் பாதிக்கப்படும்போது அதற்கு உதவி புரியும் மருந்துகள்...மேலும், 'செப்சிஸ்' எனப்படும், குருதியில் சீழ்ப்பிடிப்பு ஏற்படும் போது, அந்த பாக்டீரியா தொற்றை சரிசெய்ய உதவும் மருந்துகள் என, கொரோனா நோயின் பல்வேறு பரிமாணங்களை, சிகிச்சை செய்ய உதவும் மருந்துகளை தேடி, பட்டியல் செய்துள்ளனர்.


ஆன்டி வைரல் மருந்து

துாங்குபவரை எழுப்பலாம். துாங்குவது போல நடிப்பவரை எழுப்புவது கடினம். அதுபோல, செல் சுவர் கொண்ட பாக்டீரியாவுக்கு எதிராக, 'ஆன்டிபயாடிக்' எளிது. ஆனால், உயிரே அற்ற, வெறும் கார்போஹைட்ரேட் போன்ற பொருட்களால், மேலே பொதி மட்டும் கொண்ட வைரஸ்களுக்கு எதிரான மருந்து கண்டுபிடிப்பது எளிதல்ல.''உயிர் இருந்தால் தானே கொல்ல முடியும். வைரசுக்கு உயிரே இல்லை. மனித செல்களுக்குள் சென்ற பின் தான், கொரோனா வைரஸ் உயிர் பெறுகிறது,'' என்கிறார், சந்திரசேகரன்.எப்படி, மோடி வித்தை காட்டி, செல்களுக்குள் புகுந்து, நம்மை ஆட்டிப் படைக்கிறதோ, அதேபோல, ஆன்டி வைரல் மருந்து கொண்டு, எப்படி வித்தை காண்பித்து, வைரசை அழிக்கலாம்.மனித செல்களுக்குள் புகுந்த பின், வைரஸ் தன்னைத் தானே பிரதி எடுக்க முயற்சி செய்கிறது. பழங்காலத்தில், பனையோலையில் எழுதிய காவியங்களை படித்து, கூடுதல் மறு சுவடியாக்கம் செய்தது போல, நம் செல்லின், 'ரைபோசோம்'கள் வைரசின், ஆர்.என்.ஏ.,வை படித்து, அதன் நகல்களை உருவாக்கும்.இந்த ஒவ்வொரு நகல்களும், அடுத்த தலைமுறை குட்டி குட்டி வைரசாக, மற்ற செல்களில் செல்லும். கிருமி சுவாச பாதை முழுதும் பரவும். ஒவ்வொரு செல்களிலும், 1,000 குட்டி வைரஸ்கள், புற்றீசல் போல வெளிவரும்.


உயிரின் மொழி

தமிழ் வார்த்தைகளும், வாக்கியங்களும், அ, ஆ, இ, ஈ... என, 247 எழுத்துகளால் ஆனவை. நம், டி.என்.ஏ., வைரசின் மரபணு தொடர்களும், அடினின் (ஏ), தைமின் (டி), குவானின் (ஜி), சைடோசின் (சி) என்ற, நான்கே நான்கு எழுத்துகளால் ஆனவை. ஆர்.என்.ஏ.,வில், தைமினுக்கு பதிலாக யுராசில் (யு) இருக்கும்.அதாவது, நான்கு நிற பூக்களை கோர்த்த, கதம்ப மாலை போல, டி.என்.ஏ., மற்றும் ஆர்.என்.ஏ., மரபணு வரிசை இருக்கும்.பொதுவாக, ஆர்.என்.ஏ., - டி.என்.ஏ., போன்ற மரபணு தொடரின் அடிப்படை அலகுகளான, ஏ.யு.ஜி.சி., மூலப்பொருட்களை, செல்கள் தமக்குள் தயாரிக்கும்.மஞ்சள் செவ்வந்தி, வெள்ளை சம்பங்கி, சிவப்பு கோழிக்கொண்டை பூ, பச்சை மரிக்கொழுந்து ஆகிய, நான்கு வண்ண பூவை வைத்து, கதம்ப மாலை கட்டுவது போல, வைரசின், ஆர்.என்.ஏ., மரபணு தொடர், வரிசை குலையாமல் அச்சடித்தது போல, அடினின் (ஏ), யுராசில் (யு), குவானின் (ஜி), சைடோசின் (சி) ஆகிய, வேதிப்பொருட்களை கோர்த்து, புத்தம் புதிய, ஆர்.என்.ஏ., தொடர் உருவாக்கும்.வைரசின், ஆர்.என்.ஏ., தொடரை, நகலாக்கம் செய்து, புதிய மரபணு வரிசை உருவாக்கும், ஆர்.என்.ஏ., நகலெடுக்க வினையை, டி.என்.ஏ., சார்ந்த, ஆர்.என்.ஏ., பாலிமரசு வினை எனக் கூறுவர்.பனையோலையை ஒருவர், உரக்க படிக்க படிக்க, மற்றவர்கள், வேகவேகமாக படி எடுப்பது போல தான், 'ரைபோசோம்' எனும் செல் உறுப்பு, வைரசின், ஆர்.என்.ஏ., தொடரை படித்து நகல் செய்யும்.ஓலைச்சுவடியை வேகவேகமாக, நகல் எடுக்கும் போது, சில சமயம் ஒரு சிலர், 'கல்' என்று இருப்பதை, தவறாக, 'கள்' என்று பிழையாக எழுதி விடலாம் அல்லவா! அது போல, வைரசின், ஆர்.என்.ஏ.,வை, நம் செல்களின் ரைபோசோம்கள் படித்து, நகல் செய்யும் போது, வேண்டுமென்றே பிழை செய்ய வைக்க முடியுமா...இது தான், பொதுவாக, ஆன்டி வைரல் மருந்துகளின் தத்துவம்.


மின்னுவதெல்லாம் பொன்னல்ல!


'அடெனோசின் டிரை பாஸ்பேட்டு' எனும் வேதிப்பொருள் கொண்டு தான், செல்களின் உள்ளே, அடினின் உருவாக்கப்படுகிறது. வெள்ளியும், ஈயமும் பார்வைக்கு பளபளவென ஒன்று போல இருக்கும். அதுபோல, வைரஸ், ஆர்.என்.ஏ., நகலெடுக்க, வினைக்கு தேவையான, அடெனோசின் டிரை பாஸ்பேட்டு எனும் வேதிப் பொருள் போலவே, 'பவிபிரவிர்' எனும் மருந்துப்பொருள் உள்ளது.பவிபிரவிர் செல்களுக்குள் சென்ற பின், பவிபிரவிர்- ஆர்.டி.பி., என்ற வேதிப்பொருளாக மாறும். உள்ளபடியே, இந்த, பவிபிரவிர் தான், பவிபிரவிர்- ஆர்.டி.பி., போல பாசாங்கு செய்யும்.அதாவது ஒவ்வொரு முறை, 'ல்' என்று தட்டச்சு செய்தால், 'ள்' என்று மட்டுமே வருமாறு, கணினி விசைப்பலகை அமைந்தால், தட்டச்சு செய்யும் ஆவணம் குப்பையாக மாறும் அல்லவா...'அல்லவா' என்ற வார்த்தை கூட, 'அள்ளவா' என்று மாறி, அர்த்தமே மாறி விடும் இல்லையா?

இப்படி, ஆர்.என்.ஏ., நகலெடுக்கத்தில் கையை வைத்தால், தவறான வைரஸ் ஆர்.என்.ஏ., உருவாகி, புதிய வைரஸ் குட்டிகள் ஏற்படாது. பவிபிரவிர் போலவே, 'ரெம்டிசிவிர்' மருந்தும் செயல்படுகிறது. இதுபோன்ற வேதிப்பொருள்களுக்கு, 'பாசாங்கு நியூக்லியடைட்' என்று பெயர்.இது போன்ற ஆன்டி வைரல் மருந்துகள், ஆர்.என்.ஏ., சங்கிலியுடன் பிணைந்து செயல்படும் போது, வைரஸ், தான் இரட்டிப்பாகி கொண்டிருக்கிறோம் என்ற பிரமையை உருவாக்கும். ஆனால், உண்மையில் வைரஸ் இரட்டிப்பாகாது. இதன் மூலம், இரட்டிப்பாவதைத் தடுத்து, மேலும் மேலும் வைரஸ் உடலுக்குள் பல்கிப் பெருகுவதை தடுக்கும்; கிருமி தொற்று, மேலும் கடுமையாவது தடைபடும்.

இங்கே ஒரு சிக்கல் உள்ளது. நம் செல்களில் வைரஸ் கொண்டு வரும், ஆர்.என்.ஏ., தவிர, வேறு நகல் பணிகளும் நடைபெறுகிறது. இதற்கும் சேதாரம் ஏற்பட்டால், 'நோய் குணம், நோயாளி மரணம்' என்று ஆகிவிடும் அல்லவா!ஆனால், பொதுவாகவே, எல்லா வைரஸ், ஆர்.என்.ஏ., நகல் எடுப்பதிலும் இந்த எழுத்துப்பிழை ஏற்படுகிறது. ஆனால், மனித செல்களின் இயல்பு, படி எடுத்தல் நிகழ்வில், 500ல் ஒன்று என்ற விகிதத்தில் தான், இந்த பிழை ஏற்படுகிறது.எனவே, நோய் கிருமி தாக்கி முற்றிய நிலையில், இந்த மருந்தால் ஏற்படும் பயன், தீங்கை விட கூடுதலாக இருக்கும்.


நம் கையே நமக்கு உதவி


கடந்த சில மாதங்களில், சீனாவில் வூஹான் மற்றும் ஷென்சென் ஆகிய நகரங்களில், 320 கொரோனா நோயாளிகளிடம் இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது. பவிபிரவிர் அளிக்கப்பட்ட நோயாளிகள், நான்கு நாட்களில் வைரஸ் பரிசோதனையில், 'நெகடிவ்' என்ற நிலையை அடைய, மருந்து அளிக்கப்படாத நோயாளிகள், 11 நாட்களுக்கு பிறகு தான், வைரஸ் நெகடிவ் நிலையை அடைந்தனர்.எனவே, இந்த மருந்து, கைமேல் பலன் தரும் என, சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.''சமீபத்தில் தான், இந்த ஆய்வு முடிவு வெளிவந்தது என்றாலும், இந்த மருந்து குறித்த தகவல்கள் வந்த உடனேயே, நாங்கள் இந்த வேதிப் பொருள் தயாரிப்பு குறித்த ஆய்வை தொடங்கி விட்டோம்.
''நான்கே வாரங்களில் இந்த வேதிப் பொருளை உற்பத்தி செய்யும் வழிமுறையை கண்டடைந்து விட்டோம். மருந்து உற்பத்தி செய்யும் நிறுவனத்தோடு கூட்டு சேர்ந்து, 1 கிலோ சோதனை முறையில் மருந்து தயாரிப்பு நடத்தியும் காட்டி விட்டோம்.''இனி, இந்த மருந்து, இந்திய நோயாளிகளுக்கு தேவை என்றால், எங்கள் முறையில், இந்தியாவிலேயே இதை தயாரிக்க முடியும்,'' என்கிறார் பெருமிதத்துடன் முனைவர் சந்திரசேகர்.அத்தோடு, மேலை நாடுகளில் இருக்கும் விலையை விட, நம் தயாரிப்பு, விலை வெகு குறைவாக இருக்கும் என்கிறார், நம்பிக்கையுடன்.
உலகம் முழுதும் கொரோனா தொற்று வீரியமடைந்து வரும் நிலையில், ஏதாவது மருந்து பலன் தந்தால், முதலில் அவரவர், தம் நாட்டின் தேவைகளை தான் முதலில் கவனிப்பர்.பின் தான், அடுத்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்வர். ஆனால், நாம், வேறு நாடுகள் ஏற்றுமதி செய்யும் வரை காத்திருக்க தேவையில்லை.''இந்த ஒரு மருந்து அல்ல; நாங்கள் தேர்வு செய்து வைத்துள்ள, 25 மருந்துகளில் ஏதாவது சில பயனுள்ளவை என, மருத்துவ உலகம் இனம் கண்டால், உடனே அவற்றை, இந்தியாவில் தயார் செய்ய செய்முறையை கண்டுபிடித்து வைத்துள்ளோம்,'' என்கிறார் சந்திரசேகர்!

த.வி.வெங்கடேஸ்வரன்
முதுநிலை விஞ்ஞானி, விக்யான் பிரச்சார்,
புதுடில்லி.
தொடர்புக்கு:இ - மெயில்: ttv123@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-மே-202022:07:20 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு செய்தி வெளக்கத்த படிச்சா சரியான பாதையிலதான் போகுறாங்கன்னு புரியுது இப்பம் வேற வழியில்ல
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
16-மே-202018:00:05 IST Report Abuse
Elango ஆராய்ச்சிக்கு அதிகம் நிதி ஒதுக்க வேண்டும். என் அண்ணன் ஒருவரின் மகன் அய்ய்ம்ஸ் படிக்கிறான் அவர்களுக்கே thesis அதிகபட்சம் இரண்டு லட்சம் தான் ஒதுக்கப்படுகிறதாம்... மாநில அரசு மருத்துவ கல்லுரிகளில் அதுவும் கிடையாது, COPY செய்கிறார்கள் .. பொதுவாக ஆராய்ச்சியாளர்கள் இரண்டு மூன்று வருடம் ஒரு ஆராய்ச்சி வேலை செய்ய வேண்டியது இருக்கும். அரசு ஊக்கம் தராமல் எப்படி செய்ய முடியும் ?? சீனா இதில் சிறப்பாக செயல் படுகிறது. ஆராய்ச்சி western journal மொழி பெயர்த்து பதிப்பிக்க நல்ல சம்பளத்துடன் இந்தியர்களை வேலைக்கு வைத்துள்ளது (எனக்கு தெரிந்த ஒருவன் அப்படி வேலை செய்கின்றான்)
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
16-மே-202016:34:24 IST Report Abuse
S. Narayanan கொரோனவை முற்றிலுமாக அழிக்கும் மருந்துதான் நமக்கு தேவை. கட்டுப்படுத்தும் மருந்துக்கலவை நமக்கு தேவை இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X