நல்லதே இனி நடக்கும!

Added : மே 16, 2020 | |
Advertisement
நல்லதே இனி நடக்கும!இதோ, இன்னும் சில நாட்கள் தான்... இத்தனை நாட்களாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த நாம், வெளியே வந்து, மாமூலான வாழ்க்கை, வேலை, செயல்பாடுகளை மேற்கொள்ளப் போகிறோம்.நம்பிக்கை தானே வாழ்க்கை... மீண்டும் எழப் போகிறோம். இதுவரை இருந்தது நமக்கு, தற்காலிக பின்னடைவு தானே தவிர, நிரந்தரமான ஊனமில்லை. வெளியே வரும்போது, நம் எண்ணங்கள் ஏற்படுத்தப் போகும் அதிர்வலைகள் தான்,
 நல்லதே இனி நடக்கும!

நல்லதே இனி நடக்கும!
இதோ, இன்னும் சில நாட்கள் தான்... இத்தனை நாட்களாக வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்த நாம், வெளியே வந்து, மாமூலான வாழ்க்கை, வேலை, செயல்பாடுகளை மேற்கொள்ளப் போகிறோம்.
நம்பிக்கை தானே வாழ்க்கை... மீண்டும் எழப் போகிறோம். இதுவரை இருந்தது நமக்கு, தற்காலிக பின்னடைவு தானே தவிர, நிரந்தரமான ஊனமில்லை.
வெளியே வரும்போது, நம் எண்ணங்கள் ஏற்படுத்தப் போகும் அதிர்வலைகள் தான், நம் வாழ்க்கையை தீர்மானிக்கப் போகிறது.


ஏதோ ஒரு மன அழுத்தம்பயம் தான், நம்மை இப்போது வரை ஆட்சி செய்தது. தனிமை முடிந்து, இப்போது, வெளியே வரும் போது, ஏதோ ஒரு மன அழுத்தம், இருக்கத் தான் செய்யும்.வெகுநாள் வீட்டில் அடைந்து விட்டு, நம் அன்றாட அலுவல்களை புதிதாக கவனிக்க துவங்கும் போது, அந்தப் பணியில், 100 சதவீத ஈடுபாடும், கவனமும், சுறுசுறுப்பும் இருக்காது தான். எங்கே துவங்கப் போகிறோம், யாரை தொடர்பு கொள்வது, செய்த வேலைக்கான ஊதியத்தை எப்படி வாங்குவது, இப்படி பல எண்ண ஓட்டங்கள், நம்மிடம் சவாரி செய்யும்.
அந்த ஓட்டங்களை சரி செய்து, மற்றவர்களை ஒருங்கிணைத்து, கைகோர்த்து செல்லப் போகும் நேரம் இது.சிறு வயதில் நாம் படித்த கதை தான். ஒரு காட்டில், கொலைப்பசியோடு சிங்கம் அலைந்து கொண்டிருந்தது. மாலை வரை ஆகியும், இரை கண்ணில் படவில்லை. கடைசியாக ஒரு மான், சிங்கத்தின் கண்ணில் பட்டுவிட்டது. அந்த மானும், சிங்கத்தைப் பார்த்து விட்டது.

மானை சிங்கம் துரத்த, மானும் ஓட, கடைசியில் மான் தப்பித்து விட்டது.சிங்கம் நாக்கை தொங்கப் போட்டபடி பரிதாபமாக வந்தது. அதைக் கண்ட நரி, 'என்ன காட்டு ராஐா... ஒரு மானைக் கூட உங்களால் பிடிக்க முடியவில்லையே' என, நையாண்டி செய்தது. சிங்கம் பொறுமையாக, நரியை அருகில் அழைத்து, 'நரியாரே, ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நான் ஒடுவது என் பசியை ஆற்றிக்கொள்வதற்காக. 'ஆனால், மான் ஓடுவது, தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக. பசிக்காக ஓடும் ஓட்டம் பெரிதா; உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் ஓட்டம் பெரிதா; சொல்லுங்கள்' என்றது.நரி, கப்சிப் ஆனது.ஆம்! உலகில் உள்ள அனைவரும் மான் போலத் தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். இது, போட்டிகள் நிறைந்த உலகம். எப்படியும் வென்றே ஆக வேண்டும். இந்த ஓட்டத்தில், ஓடும் பலருக்கு பல வித காரணங்கள்
உள்ளன. ஆனால், வென்றே ஆக வேண்டும் என்பது மட்டுமே, அனைவரின் நோக்கம்.நேர்மையாக ஓடி வெற்றி காண்போர், பல காலங்களுக்கு நிலைத்திருப்பர்; எதிரிகளிடம் பாராட்டு பெறுவர். இந்த ஓட்டம், தற்போது நமக்கு தேவையானது.இந்த இக்கட்டான நேரத்திலிருந்து மீண்டு வெளியே வரும் போது, ஒரு எதிர்மறை உணர்வு பரவவும் வாய்ப்பு உண்டு. எதற்காக பிறந்தோம்; எல்லாமே தப்பாக நடக்கிறது; சூழ்நிலையும் கொடுக்கவில்லை; நான் கண்டிப்பாக தேற மாட்டேன்; நான் அனைத்தையும் இழந்து விட்டேன் என்ற உணர்வு மேலோங்கியிருக்கும்.
அந்த உணர்வு, நம்மை மட்டுமல்லாது, நம்மை சார்ந்தோரையும், சமுதாயத்தையும் கூட பாதித்து விடும். இந்த நேரத்தில், நமக்கு தேவையெல்லாம், நல்ல அதிர்வலைகள் தான்!'உலகம் பிறந்தது எனக்காக; ஓடும் நதிகளும் எனக்காக; மலர்கள் மலர்வதும் எனக்காக; அன்னை மடியை விரித்தாள் எனக்காக...' என்ற சந்தோஷமான எண்ணம் தான் வேண்டும்.
நல்ல அணுமுறை உள்ள மனிதனுக்கு, ரோஐா தான் கண்ணில் படும்; முட்கள் அல்ல. ஆம். நம் அணுகுமுறைகளைப் பொறுத்தே, நம் வாழ்க்கை அமைகிறது.


நல்ல முடிவை தரும்மஹாத்மா காந்தியடிகள், ஒரு முறை, ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியிருந்தது. அவரின் பயணத்தை கெடுக்கும் விதமாக, ஒரு ஆங்கிலேய அதிகாரி, அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில், 'நீங்கள் கடந்து வரும் பாதை முழுதும் வெறும் கற்களையும், முட்களையும் நிரப்பி வைத்திருப்பேன்' என்று எழுதியிருந்தார்.'உங்கள் அன்பிற்கு நன்றி நண்பரே. நான் அந்தப் பாதையில் செருப்பில்லாமல் நடந்து வருவேன்' என்று, மஹாத்மா காந்தி பதில் எழுதினார்.
ஆம். ஒரு விஷயத்தை நாம் எப்படி அணுகுகிறோமோ அதைப் பொறுத்துத் தான், அந்த செயலின் விளைவுகளும் இருக்கும்.

நல்லதே நடக்கும் என்ற எண்ணத்தில் செய்யும் செயல்கள் எல்லாம், நல்ல முடிவுகளைத் தான் தரும்.நல்ல எண்ணங்கள் எப்படி ஏற்படுகின்றன... நம் நம்பிக்கைகள், அணுகுமுறைகள், எதிர்பார்ப்புகளை பொறுத்தே அவை அமைகின்றன. நம்பிக்கை என்பது, நம் செய்கைகளின் வெளிப்பாடே.நம் எண்ணங்கள் தான், உணர்வுகளின் வெளிப்பாடு; நடத்தையின் ஒரு கூறு. நம் நல்ல நடத்தை தான், நம் மனநிலையை பிரதிபலிக்கும். இதை செய்தால் நல்லது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால், நல்லதே நடக்கும். நல்ல அணுகுமுறை என்பது, இழந்ததை பற்றி கவலைப்படாமல், இருப்பதை வைத்து வாழ்வது.இந்த அணுகுமுறை, நமக்கு இப்போது அவசியம் வேண்டும்.நல்ல விஷயங்களை பேசும் போதும், நல்ல விஷயங்களை உணரும் போதும், மற்றவர்களிடம் நாம் வைத்திருக்கும் உறவு முறைகள் தான், நம் அணு முறைகளை தீர்மானிக்கின்றன.ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற சூழல்கள், உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் வந்திருக்கிறது.போர், இயற்கை சீற்றம், கொடிய நோயின் பரவல், பொருளாதார சரிவு போன்ற பல காரணங் களால், பல விதமான போராட்டங்களை சந்தித்து, பல நாடுகள், மீண்டு வந்திருக்கின்றன.நம் நாடும், இதுபோன்ற பல இடர்பாடுகளை சந்தித்துள்ளது. இப்போது, நம் நாட்டின் முன் இருக்கும் முதல் கேள்வி, இனி, எப்படி நாம் எழுந்து வரப் போகிறோம் என்பது தான்.
இந்தியாவிற்கு இருக்கும் மிகப் பெரிய பெருமை, தனித்தனி மாநிலங்களாக இருந்தாலும், ஏதோ ஒரு சக்தி, நம்மை ஒன்றிணைக்கிறது.

எத்தனை மொழிகள், எத்தனை கலாசார மாற்றங்கள், மனதளவில் எத்தனை வேறுபாடுகள் இருந்தும் என்ன...எத்தனை போராட்டங்கள், எத்தனை அன்னிய படையெடுப்புகள், உள்ளும் வெளியிலும் எத்தனை சுரண்டல்கள்... அத்தனை இருந்தும் அள்ள அள்ளக் குறையாத வேரூன்றிய கலாசாரம், காலத்தில் அழியாத பண்பாடு போன்றவற்றை நாம் கொண்டுள்ளோம்.இவை இருக்கும் வரை, எந்த நேரத்திலும், குறிப்பாக இந்த நேரத்தில், நாம் இந்தியர்களிடம் ஒற்றுமை இருந்தால், நாம் முன்னேறி செல்லலாம்.நம் நாட்டில் இப்போது, இரண்டு முக்கிய பிரச்னைகள் இருக்கின்றன. ஒன்று, வறுமை; இன்னொன்று, படிப்பறிவு இல்லாத பாமரத்தன்மை. இந்த இரண்டிற்குமே, நாம் தான் தீர்வு காண வேண்டும்; அன்னிய சக்திகள் இதில் ஊடுருவ முடியாது; உதவியும் செய்ய மாட்டார்கள்.
எனவே, 'நாம் இந்தியர்கள் இல்லை; நாமே இந்தியா' என்று, நாம் அனைவரும் உணர வேண்டும்.மற்ற நாடுகளுக்கும், நமக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம், அந்நிய மக்கள் அவரவர்கள் பொறுப்பை உணர்ந்து, தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர். வேலை நிறுத்தம் என்று வந்தால் கூட, தங்கள் கடமையை முடித்து விட்டு, மற்ற நேரங்களில் தான் போராட்டம் செய்வர்.தங்களை ஆள்வோரை விட, தங்கள் நாட்டின் மேல், அவர்களுக்கு பற்று அதிகம். அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்று வம்பு பேசாமல், நம்மை ஆளும் தலைவன், ஒரு சிறு தவறு செய்தால் கூட, அவரை மன்னிக்க மாட்டார்கள்.
இங்கு நிலைமையே வேறு. நம் நாட்டில் எந்தப் பிரிவில் வேலை செய்பவர்களாகட்டும், அவர்கள் செய்யும் வேலையின் நடுவே, நாடு என்ற உணர்வோ, கடமை உணர்ச்சியோ இல்லாமல், போராட்டம் செய்வர்.


மனிதநேயம்இது, கல்வியை மட்டுமல்ல, நம் அன்றாட வாழ்க்கையையும், பெரிதும் பாதிக்கிறது. இனி, போராட்டமோ, அரசியல் காழ்ப்புணர்ச்சியோ, தனி மனித வெறுப்போ இல்லாமல், மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துள்ளது.ஆண், பெண் சமத்துவத்தின் தேவை, சுற்றுப்புற சுகாதாரம், சகிப்புத் தன்மை, கடவுள் பக்தி, இயற்கையிடம் நேசம், நம் இதிகாசங்களின் பெருமை உணர்தல், கலாசாரம், தனி மனிதனின் சிறப்பியல்பு, நாட்டு ஒற்றுமை நமக்கு இருந்தே ஆக வேண்டும்.இப்போது, நம் வாழ்க்கை போகும் பாதை, கரடு முரடாக இருக்கலாம்; பள்ளம், சதுப்பு நிலமாக இருக்கலாம்; வளைந்து வளைந்து செல்லலாம்; வெற்று மணல் மேடாக இருக்கலாம். அடைகின்ற இலக்கு, வெற்றி எனில், பாதை எப்படி இருந்தால் என்ன?மலர்கள் பூத்துக் குலுங்கும் பாதையாக, அது மாற வேண்டுமானால், நல்ல எண்ணம் என்ற மண்ணில், அதை நட்டால் தான், வாசம் வீசும் மலர்கள் பூக்கும்.
நீங்கள், இந்த விடுமுறையை, உங்கள் இஷ்டம் போல் செலவழித்திருப்பீர்கள்; நினைத்த நேரத்தில் எழுந்திருப்பீர்கள்; நினைத்த நேரத்தில் துாங்கியிருப்பீர்கள்; எந்த வேலையையும், குறிப்பிட்ட நேரத்திற்கு முடித்திருக்க மாட்டீர்கள்.தற்போது, நேரத்திற்கு ஏற்றாற்போல, உடனடியாக மாற வேண்டிய சூழல் ஏற்படலாம்.
உங்கள் பணி, உங்களுக்கு முதலில் கடினமாக இருக்கும். பின், மனதை மாற்றிக் கொள்ள பழகுங்கள்.நம் வாழ்க்கை இது தான்: இங்கே தான், நம் பயணம் தொடங்குகிறது என்று தீர்மானித்தவுடன், அந்த வேலையை பிடித்த மாதிரி மாற்றிக் கொள்ளுங்கள். கொஞ்ச நாட்களில், அதுவே பழகி, பிடித்ததாகி விடும். மாற்றங்களை நீங்கள் தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.ஒரு வினாடியிலோ, ஒரு நாளிலோ, உங்களை முழுமையாக மாற்றி விட முடியாது. நீங்கள் நினைத்தால் தான், உங்களை நல்ல விதமாக மாற்றிக் கொள்ள முடியும்.குழுவாக வேலை செய்வது, பணத்தை நிர்வாகம் செய்வது, பலதரப்பட்ட மக்களை எதிர்கொள்வது, தங்கள் சொந்த வாழ்க்கையும், வெளி உலக வாழ்க்கையும், எப்படி மாற்றிக் கொள்வது போன்ற எல்லாம் உங்கள் அனுபவங்கள் மூலமே பெற முடியும்.புதிய சவால்களை சந்திக்கக் கூடிய வேலைகளை, தைரியமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை, அந்த வேலையை முடிக்கக் கூடிய தகுதியோ, திறமையோ, உங்களுக்கு இல்லை என்றால்
வளர்த்துக் கொள்ளுங்கள்.யாரையும் அண்டி இருக்காதீர்கள். தற்சார்பு தான், வரும் காலத்தில் நாம் பின்பற்ற வேண்டிய பொருளாதாரம். இதைத் தான், பிரதமர் மோடியும் வலியுறுத்தியுள்ளார்.


புரிந்து கொள்வோம்அனைவருக்கும் கொடுங்கள். எந்த ஒரு நல்ல காரியங்களை செய்தாலும், அதை ஆதரிப்பது, செயல்படுத்துவது முதலில் நீங்களாக இருக்கட்டும். இது, மேலே மேலே உயர உதவும். மனிதன் தன் மனநிலையை மாற்றிக் கொள்வதன் மூலம் தான், வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியும்.உலகம் மாற வேண்டும் என, நினைப்போர், தங்களை மாற்றிக் கொண்டாலே வெற்றி தான். இதை புரிந்து கொள்வோம்.கடலில் குதித்தாகி விட்டது. இந்தப் பக்கம் திரும்பி வர இயலாது. கரை சேர்ந்தே ஆக வேண்டும் அல்லது
கடலில் மூழ்கியாக வேண்டும். நாம் நம்பிக்கையோடு கரை சேர்வோம்.தவறான அணுகுமுறை கொண்டோரிடம் மகிழ்ச்சி தங்குவதில்லை. தானும் மகிழ்ச்சியாக இருந்து, அடுத்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்போரிடம் துன்பம் தங்குவதில்லை.
துன்பத்திலும் மகிழ்ச்சியாக இருப்போரிடம், தோல்விகள் தங்குவதில்லை!-தொடர்புக்கு: -மல்லி கிஷோர் மனிதவள ஆலோசகர்அலைபேசி: 99625 16138இ - மெயில்: krshore@goripe.com

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறதுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X