சென்னை: புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை குறித்து, மத்திய, மாநில அரசுகள் அறிக்கை அளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம், சாங்லி மாவட்டத்தில் உள்ள, தமிழகத்தைச் சேர்ந்த, 400க்கும் மேற்பட்டோரை மீட்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாஷ், மனு தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.எல்.ரவி ஆஜரானார்.
அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரதாப்குமார் ஆஜராகி, மஹாராஷ்டிராவில் இருந்து, 962 பேர், தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்ட விபரங்களை தாக்கல் செய்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்க்க, மத்திய அரசுடன் ஆலோசித்து, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் எடுத்ததா என்பதை அறிய விரும்புகிறோம்.
மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக தலைமை செயலரை, வழக்கில் சேர்க்கிறோம்.
'மீடியா'க்களில், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பரிதாப நிலையை பார்க்கும்போது, யாராலும் கண்ணீரை அடக்க முடியாது.
கை குழந்தைகளுடன், மூட்டை முடிச்சுகளுடன், வழியில் கொடுக்கப்படும் உணவை சாப்பிட்டு, நடந்தே செல்கின்றனர்.அவர்களுக்கு உதவ, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்திய, மாநில அரசுகள், கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்:
* ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விபரங்கள், மத்திய அரசிடம் உள்ளதா; அவர்களின் எண்ணிக்கை என்ன; அவர்களின் சொந்த மாநிலம் எது?
* ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வெளி மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை என்ன; அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட உதவிகள் என்ன?
* மாநில எல்லையை கடந்து செல்ல, அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனரா; தடுக்கப்படுகின்றனரா; தடுக்கப்பட்டால், அவர்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படுகிறதா?
* சொந்த மாநிலம் செல்லும் வழியில், எத்தனை பேர் இறந்துள்ளனர்; அவர்கள் எல்லாம் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்களின் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீடு என்ன?
* பஸ்கள், ரயில்களில், எவ்வளவு பேர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்; மீதி இருப்பவர்களை அனுப்ப, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?
* புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிதி உதவி, வேலைவாய்ப்பு வழங்கும்படி, மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதா?இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
விசாரணையை, வரும், 22ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE