சிவப்பு விளக்கு பகுதிகளால் வைரஸ் பரவல் அதிகரிக்கும்| Dinamalar

சிவப்பு விளக்கு பகுதிகளால் வைரஸ் பரவல் அதிகரிக்கும்

Added : மே 16, 2020 | கருத்துகள் (1)
Share

வாஷிங்டன் : 'கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, இந்தியாவில் சிவப்பு விளக்கு பகுதிகளை முழுமையாக மூடினால், கொரோனா வைரஸ் பரவலை, 72 சதவீதம் வரை குறைக்கலாம்' என, விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.

இது தொடர்பாக, அமெரிக்காவின், 'யேல் ஸ்கூல் ஆப் மெடிசின்' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: தேசிய, 'எய்ட்ஸ்' கட்டுப்பாட்டு அமைப்பு தகவலின்படி, இந்தியாவில், ஆறு லட்சத்து, 37 ஆயிரத்து, 500க்கும் மேற்பட்ட, பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர்.ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், தினமும் சிவப்பு விளக்கு பகுதிகளுக்கு வருகின்றனர்.ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், சிவப்பு விளக்கு பகுதிகள் மீண்டும் செயல்பட துவங்கினால், வைரஸ் மிக வேகமாக பரவுவதோடு, பாலியல் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.

பாலியல் பரிமாற்றங்களில், சமூக விலகல் சாத்தியமில்லை. அத்துடன், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், லட்சக்கணக்கானவர்களுக்கு வைரசை பரப்பக்கூடும்.கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் சிவப்பு விளக்கு பகுதிகள் உடனடியாக மூடப்பட்டதால், தொற்று பரவல் விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையிலும், சிவப்பு விளக்கு பகுதிகளை தொடர்ந்து மூடுவதால், புதிதாக வைரஸ் பரவுவதை, மேலும், 45 நாட்களுக்கு, 72 சதவீதம் வரை குறைக்கலாம். தற்போதுள்ள பரவல் வேகத்தை, மேலும், 17 நாட்களுக்கு தாமதப்படுத்தலாம். ஊரடங்கிற்கு பின், முதல், 60 நாட்களில், இறப்பு எண்ணிக்கை, 63 சதவீதம் குறையும்.

இதன் மூலம், ஊரடங்கின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் இந்தியாவில், பொது சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை, திட்டமிட்டு செயல்படுத்தலாம். இந்த தகவல்கள், இந்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X