சென்னை : 'புயல் தாக்கும் பகுதிகளில், தனிமைப்படுத்தும் முகாம் இருந்தால், அதை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும்' என, கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
மேலாண்மை திட்டம்தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கான, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், அவர் அனுப்பியுள்ள கடிதம்:அனைத்து மாவட்டங்களிலும், கொரோனா தடுப்பு பணிகளுக்கேற்ப, தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கேற்ப, மாவட்ட வாரியாக மேலாண்மை திட்டம் வகுக்க வேண்டும். முதல்நிலை மீட்பு வீரர்கள், தன்னார்வலர்கள் அதிகம் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும். அவர்கள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மீட்பு நடவடிக்கையின்போது, அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
கிருமி நாசினிபாதிக்கப்பட்டோருக்கு முகக்கவசம் வழங்க வேண்டும். எனவே, தேவையான அளவு முகக்கவசம் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டி இருப்பதால், கூடுதல் நிவாரண முகாம்கள் மற்றும் தங்குமிடங்களை ஏற்படுத்த வேண்டும். அதிக கூட்டம் இருப்பதை, தவிர்க்க வேண்டும்.முகாமில் தங்க வைக்கப் படுவோருக்கு, தொடர் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும். கொரோனா அறிகுறி இருந்தால், அவர்களை தனிமைப்படுத்தி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.தங்குமிடம் மற்றும் நிவாரண முகாம்களில், கிருமி நாசினி தெளிக்க, ஏற்பாடு செய்ய வேண்டும்.
புயல் தாக்கும் பகுதிகளில், தனிமைப்படுத்தும் முகாம் இருந்தால், அதை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும்.புயல் மற்றும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள, தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE