உத்தர பிரதேசத்தில் லாரிகள் மோதல் ; 24 தொழிலாளர்கள் பலி; 36 பேர் காயம்| Dinamalar

உத்தர பிரதேசத்தில் லாரிகள் மோதல் ; 24 தொழிலாளர்கள் பலி; 36 பேர் காயம்

Added : மே 17, 2020
Share

அவ்ரையா : உத்தர பிரதேசத்தில், நின்று கொண்டிருந்த லாரி மீது, மற்றொரு லாரி மோதியதில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், 24 பேர் இறந்தனர்; 36 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஊரடங்கால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள், சொந்த ஊர் திரும்ப, ரயில்வே துறை, சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது; ஆனாலும், நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் நடந்தோ, லாரிகளிலோ பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், டில்லியிலிருந்து, மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூருக்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, ஒரு லாரி சென்றது.

கட்டுப்பாடு இழப்புஉ.பி., மாநிலம் அவ்ரையா பகுதியில் வந்த போது, லாரியை நிறுத்திய டிரைவர், அருகிலிருந்த கடைக்கு, டீ குடிக்கச் சென்றார். லாரியிலிருந்த தொழிலாளர்கள் சிலரும், டீ குடிக்கச் சென்றனர்.அப்போது அவ்வழியே, ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து, 50க்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றியபடி, ஒரு லாரி வந்தது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, பயங்கரமாக மோதியது. இதில், இரண்டு லாரிகளும் கவிழ்ந்து, சாலையோரத்தில் இருந்த, கழிவு நீர் கால்வாயில் விழுந்தன.

இதில், 24 தொழிலாளர்கள், அதே இடத்தில் இறந்தனர்; 36 பேர் படுகாயம் அடைந்து, மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 'இறந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்' என, போலீசார் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து, உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வருத்தம்மாநிலத்தில், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் பாதுகாப்பற்ற முறையில், லாரிகள் செல்ல அனுமதிக்கக் கூடாது என, உத்தரவிடப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக, மாநில எல்லைகளில், 200 பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா, 2 லட்சம் ரூபாயும்; படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.பிரதமர் மோடி, 'டுவிட்டரில்' வெளியிட்ட பதிவில், 'உத்தர பிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில், 24 தொழிலாளர்கள் இறந்தது, பெரும் வருத்தமாக உள்ளது.'நிவாரண பணிகளை உடனடியாக மேற்கொள்ள, உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என, கூறியுள்ளார்.லாரி கவிழ்ந்து5 பேர் பலிமஹாராஷ்டிராவிலிருந்து துணிகளை ஏற்றியபடி, உத்தர பிரதேசத்துக்கு லாரி ஒன்று சென்றது.

இந்த லாரியில், உ.பி., மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், 25க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். மத்திய பிரதேச மாநிலம், சாகர் மாவட்டம், சீம்ரா பகுதியில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது. இதில், மூன்று பெண்கள் உட்பட, ஐந்து பேர் இறந்தனர்; 19 பேர் காயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அதிகரித்து வரும்விபத்துகள்நாடு முழுதும், சொந்த ஊருக்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பலர், நடந்தோ அல்லது லாரிகளிலோ கூட்டமாகச் செல்கின்றனர். இதனால், சமீபகாலமாக விபத்துகள் அதிகரித்துள்ளன.

மஹாராஷ்டிராவில், கடந்த வாரம், ரயில் தண்டவாளத்தில் படுத்து துாங்கிக் கொண்டிருந்த மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, 16 தொழிலாளர்கள், ரயில் மோதி இறந்தனர். கடந்த, 13ம் தேதி, மஹாராஷ்டிராவிலிருந்து, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள், லாரி ஒன்றில், சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். மத்திய பிரதேச மாநிலம், குணாவில், பஸ் மீது லாரி மோதியதில், எட்டு பேர் இறந்தனர்; பலர் காயம் அடைந்தனர். அதே நாளில் நடந்த மற்றொரு சம்பவத்தில், பஞ்சாபில் இருந்து, பீஹாருக்கு நடந்து சென்று கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்கள் மீது, உ.பி., மாநிலம், முசாபர் நகரில், பஸ் மோதியது. இதில், ஆறு பேர் இறந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X